கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'சுச்சி லீக்ஸ்' ட்விட்டர் பக்கம் கடும் 'சூடாக' இருந்தது நினைவிருக்கலாம். பிரபல பின்னணி பாடகி சுச்சித்ராவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து, தமிழ் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க படங்கள் எனும் பெயரில், சில புகைப்படங்களும், வீடியோக்களும் ட்வீட் செய்யப்பட்டன.
குறிப்பாக, தமிழ் சினிமாவில் முன்னணி வரிசையில் இருக்கும் அந்த இளம் ஹீரோவை மையப்படுத்தி பல ஆபாசமான பதிவுகள் இடப்பட்டன. சில நடிகைகளின் நிர்வாண வீடியோக்களும் வெளியாகின. ஆனால், 'இந்த வீடியோக்களில் இருப்பது நாங்களல்ல' என்று சம்பந்தப்பட்ட நடிகைகள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பாடகி சுசித்ரா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கடந்த மார்ச் 02, 2017 அன்று எனது ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. அதன்பின், சினிமா பிரபலங்கள் குறித்து பல தவறான படங்கள், வீடியோக்கள் பதிவேற்றப்பட்டது. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் அப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். எனவே எனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.