கிராமிய பாடகர், சினிமா பின்னணி பாடகர் மரபு இசை கலைஞர், நாட்டுப்புற நாயகன் என பல விருதுகள், பாடல் மேக்கிங் வீடியோவில் தோன்றிய முதல் பாடகர் , கின்னஸ்சாதனை படைப்பாளி, நடிகர் என பல்வேறு முகங்களை கொண்ட பாடகர் வேல்முருகன், , இந்தியன் எக்ஸ்பிரஸ் (தமிழ்) இணையதள வாசகர்களுக்காக அளித்த பேட்டி…
உங்கள் சொந்த ஊர் ..
“எனக்குச் சொந்த ஊர் விருத்தாசலத்துக்குப் பக்கத்துல இருக்கிற முதனை கிராமம். அந்தக் காலத்துல திருவண்ணாமலையில கார்த்திகை தீபம் ஏத்துறப்போ எங்க ஊர்லயிருந்து கொண்டுபோற நெய்யைத்தான் முதல்ல ஊத்துவாங்களாம். அதனால எங்க ஊர் பேரு `முதல் நெய்’னு ஆச்சு. காலப்போக்குல `முதனை’னு ஆயிடுச்சு.
பாடகர் ஆனது எப்படி…
ஸ்கூல்ல படிக்கும்போது பாடுறது, லீவு நாள்ல ஆடு மாடு மேய்க்கும்போது பாடுறதுனு பாட்டாவே கிடந்தேன். ஐ.டி.ஐ படிச்சிட்டு, மியூசிக்குல இருந்த ஆர்வத்துல அடையாறு இசைப் பயிற்சிக் கல்லூரியில சேர்ந்து படிச்சேன். ஒரு முறை ஏவி.எம் ஸ்டூடியோவில விநாடி வினா நிகழ்ச்சிக்கான டிவி ஷோ நடந்துச்சு. எனக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு ஒரு பாட்டு பாடினேன். அந்தப் பாட்டை தற்செயலா கேட்ட டைரக்டர் சசிகுமார் சார் `இந்தக் குரல் நல்லா இருக்கு’னு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்கிட்டே சொல்லியிருக்கார். அப்படித்தான் சுப்பிரமணியபுரத்துல `மதுரை குலுங்க’ பாடல் பாடுற வாய்ப்பு கிடைச்சுது. திருவிழா நேரத்துல பொறந்த எனக்கு சினிமாவுல முதல்பாட்டே திருவிழா பாட்டுதான்.
இதுவரை பாடிய பாடல்கள் :
2007ம் ஆண்டு முதல் சினிமாவில பாடிட்டு வர்றேன், இப்பவரைக்கும் 350 பாடல்கள் பாடியிருக்கேன். இதுமட்டுமல்லாது, பக்தி, கிராமிய பாடல்கள் என பல ஆல்பங்களை வெளியிட்டு இருக்கேன்.
மறக்கமுடியாத விருது :
அம்மாவின் பாசத்தை வலியுறுத்தி 2004ம் நான் எழுதி பாடிய பாடலை கவுரவித்து அமெரிக்க பல்கலைகழகம் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இரண்டு கவுரவ டாக்டர் பட்டங்களை வாங்கியுள்ளேன்.
திடீர் நடிகரானது எப்படி? :
நாடோடிகள் படத்தில் “ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா” பாடலில் தோன்றினேன். பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் பாடலின் மேக்கிங் வீடியோவில் இடம்பிடித்தேன். தமிழ்சினிமாவில், முதன்முதலில் வெளியான பாடல் மேக்கிங் வீடியோ அதுதான். எனக்கு வேறங்கும் கிளைகள் இல்லை படத்தில் கவுண்டமணி சாருடன் நடித்தேன். இப்போது படைப்பாளன் மற்றும் கருப்பு கண்ணாடி படங்களில் நடித்து வருகிறேன்.
நடிகர், இயக்குனர் சசிக்குமார் பற்றி
நடிகர் இயக்குனர் சசிக்குமார், இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் மேடையில் பாடிகிட்டு இருந்த என்னை, சினிமாவில் அறிமுகப்படுத்தினர். சசிக்குமார், ஜேம்ஸ் வசந்தன், சமுத்திரக்கனி, இயக்குனர் முத்தையா, இயக்குனர் வெற்றிமாறன் போன்றோர்களை எனது குடும்பமாகவே நான் கருதுகிறேன்.
பணியாற்றிய இசையமைப்பாளர்கள்
இளையராஜா, ஏ ஆர் ரகுமான் ( மரியான் படத்தில் கொம்பன் சுறா (டைட்டில் பாடல்)), ஹாரிஸ் ஜெயராஜ் ( ஓகே ஓகே, இது கதிர்வேலன் காதல், தேவ், உள்ளிட்ட 5 படங்கள்), யுவன் (குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு…), வித்யாசாகர், அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பின்னணி இசையில் பாடியுள்ளேன். இவற்றில் ஜி.வி.யின் இசையில் மட்டுமே அதிகபட்சமாக 10 படங்களில் பாடியுள்ளேன்.
கின்னஸ் சாதனை எண்ணம் தோன்றியது எப்படி
சிறுவயதாக இருக்கும்போதே, நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கிராமிய பாடகர் ஆன உருவெடுத்த நிலையில், கின்னஸ் சாதனை எண்ணம் தோன்றியது. அதுபற்றி விசாரித்ததில் தனிநபர் கிராமிய பாடலில் சாதனை நிகழ்த்த வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஒயிலாட்டக்குழுவினர் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பாடல் எழுதியேதோடு மட்டுமல்லாது 1418 நடனக்கலைஞர்களின் நடனத்துடன் பாடினேன். இது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிடித்த பாடகர்
ஹரிஹரன் ஆல்டைம் பேவரைட்.
தற்போதைய பாடகர்களில், சித் ஸ்ரீராம். அவரின் அடியே பாடல் கேட்டு அதிர்ந்தேன். அவருக்கு ஆண் – பெண் குரல் ஒரு இழையில் தொட்டுசெல்கிறது. அவரை அர்த்தநாரீஸ்வரர் குரல் என்றே சொல்லுவேன்.
பிடித்த நடிகர்
தனுஷ். எந்த கேரக்டர் ஆனாலும் அதற்கு தக்கபடி தன்னை தகவமைத்துக்கொள்வார்.
பெற்ற விருதுகள்
இந்திய ராணுவம் தொடர்பாக நான் எழுதிய பாடலுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவரிடம் மரபு இசை நாயகன் விருது
டாக்டர் அப்துல் கலாம் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து நாட்டுப்புற நாயகன் விருது.
2020ம் ஆண்டிற்கான பெரியார் விருது
2013ம் ஆண்டிற்கான தமிழக அரசின் கலைமாமணி விருது ( 2019ல் முதல்வர் பழனிசாமியால் வழங்கப்பட்டது)
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமியை தொடர்ந்து கலைமாமணி விருது பெறும் 3வது கிராமிய பாடகர் நான் தான்)
2020 பொங்கல் விழாவில், சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் விருது
சினிமாவை தவிர்த்து…
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் பாடலை எழுதி பாடியுள்ளேன்.
முன்னணி சேனல்களான கலர்ஸ் தமிழ், வேந்தர் டிவி, மக்கள் டிவியின் டைட்டில் பாடல்களை பாடியுள்ளேன்.
ரஜினியின் அரசியல் பிரவேசம்…
ரஜினிகாந்த் ஒரு லெஜண்ட், இன்டர்நேசனல் பிகர், அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். அவர் இறையருள் மிக்கவர். அவர் வந்தால் நல்லது.
கோபப்படும் விசயம்
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இடம்பெற்ற வேணாம் மச்சான் வேணாம் என்ற பாடல், பலர் கானா பாடல் என்றே நினைத்து வருகின்றனர். கானா பாடல் என்றால், பொருள் உணர முடியாத அளவிலான பாடல் என்பதை யாரும் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள். கிராமிய பாடகரான என்னை, சிலர் கானா பாடகர் என்று நினைத்து தொடர்பு கொள்கின்றனர். தமிழ் பாரம்பரியம், தமிழ் மண் சார்ந்த பாடல்களை பாடும் எனக்கு, அவ்வாறான தொலைபேசி அழைப்புகள் மிகுந்த கோபம் வரவைப்பவையாக உள்ளதாக அவர் கூறினார்