தமிழ் சினிமா வரலாற்றில் வாயால் பிழைத்துக் கொண்ட பிள்ளைகள் பட்டியலில் நிச்சயம் இவருக்கு பெயருண்டு. பிழைத்துக் கொண்டது மட்டுமல்ல, 'ஹீரோ' அந்தஸ்துக்கு உயர்ந்ததிலும் கூட. அவர், எஸ்கே எனப்படும் சிவ கார்த்திகேயன்.
இது அவரது புகழ்பாட எழுதப்படும் கட்டுரை அல்ல, நடப்பு நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கும் பதிவு. அவர் எப்படி சினிமாவுக்கு வந்தார், என்னவெல்லாம் செய்தார் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், இன்று இவரது நிலை என்னவென்பதை லேசாக விளக்கும் கட்டுரை இது.
மிஸ்டர்.லோக்கல் என்ற படம் கடந்த வாரம் ரிலீசானது. ஹீரோ சிவகார்த்திகேயன். ரிசல்ட் பிளாப். இங்கே ஒளிவு மறைவுக்கு வேலையில்லை. படம் நன்றாக இல்லை அவ்வளவு தான். ஆனால், படத்தின் ரிசல்ட் பற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமோ, இயக்குனரோ வருத்தப்பட்டிருப்பார்களோ என்னவோ நமக்கு தெரியாது. ஆனால், சிவ கார்த்திகேயனின் இந்த தோல்வியை விழா எடுக்காத குறையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் பலர்.
அந்த பலரில் எத்தனை பேருக்கு தெரியும் சிவா ஒரு Zero Movies இல்லாத நடிகர் என்று!.
ஒரு நடிகனின் படம் ரிலீசாகிறது... அந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ரசிகர் அல்லாதோருக்கும் பிடிக்கவில்லை. ஆனால், சுத்தமாக அடி வாங்காமல், இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமெனில் மரண ஃபிளாப் ஆகாமல் தியேட்டரில் ஓடுகிறது என்றால், அந்த படத்தின் நாயகனே Zero Movies இல்லாத நடிகர் ஆகிறார்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு கூட இல்லாத Zero Movies அந்தஸ்து ரஜினிகாந்துக்கு இருந்தது. அவரது ஃபிளாப் படங்கள் கூட, ஒரு கட்டம் வரை ஓடிய பிறகு தான் தியேட்டரில் இருந்து எடுக்கப்படும். A செண்டர், B செண்டர், C செண்டரிலிருந்து Z செண்டர் வரை அனைத்து வகை ரசிகர்களும் தியேட்டரில் வந்து பார்த்த பிறகு தான் படம் தூக்கப்படும்.
இப்போது வரை ரஜினி அதே ஸ்டேஜில் தான் இருக்கிறார் என்பது வேறு விஷயம். இருப்பினும், அவருக்கு பிறகு அந்த இடத்தில் முக்கால்வாசியை நிரப்பிய ஒரே நடிகர் அல்லது ஹீரோ விஜய் மட்டுமே. அவரது சக போட்டியாளரான அஜித் கூட பல Zero Movies கொடுத்திருக்கிறார். ஆனால், அஜித்தை கம்பேர் செய்கையில் விஜய்யின் Zero Movies எண்ணிக்கை மிக மிக குறைவு.
இப்போது விஜய்க்கு பிறகு, அந்த இடத்திற்கு வந்திருப்பவர் சிவ கார்த்திகேயன் மட்டுமே. இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிவாவை தவிர, வேறு எந்த அவரது சம கால நடிகரும் Zero Movies இல்லாத ஹீரோவே கிடையாது.
நினைவில் கொள்ளுங்கள், மெரீனா முதல் மிஸ்டர்.லோக்கல் வரை சிவகார்த்திகேயன் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வசூல் பெறவில்லை. சிவாவுக்கு பண நெருக்கடி கூட கொடுத்திருக்கின்றன. ஆனால், எந்தப் படமும் Zero Movies கிடையாது. இது விஜய்யின் ஆரம்ப கால படங்களை விட மெர்சலான தொடக்கமாகும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது, சிவ கார்த்திகேயனின் படங்கள் தோற்றாலும் சிவ கார்த்திகேயன் தோற்பதில்லை. மீண்டும் சொல்கிறேன், இது புகழ்பாடும் கட்டுரை அல்ல, புரிதலுக்கான கட்டுரை. அவ்வளவே!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.