சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். வருகிற 22ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், நயன்தாராவைப் பற்றி சிவகார்த்திகேயன் பேசியதாவது...
“நான் முதலில் நயன்தாராவைப் பார்த்தது ‘ஏகன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில். அந்தப் படத்தில் நானும், அருண்ராஜ் காமராஜாவும் நடிப்பதாக இருந்தது. எங்களுக்கு ஷூட்டிங் இல்லையென்றாலும், காலையிலேயே ஸ்பாட்டுக்குப் போயிடுவோம். நயன்தாரா ஸ்பாட்டுக்கு வரும்போது, ‘டேய் நயன்தாராடா... நயன்தாராடா...’னு அருண்ராஜா சொல்லுவான். ‘டேய் கொஞ்சம் இருடா...’ என்று சொல்லி அவனை சமாதானப்படுத்துவேன்.
அதுக்குப் பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தில் எனக்காக ஒரு பாடலுக்கு ஆடிக் கொடுத்தாங்க. அதுக்காக அவங்க காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை. இளைஞர்கள் படம் பண்றாங்கனு சொன்னதும், காசு கூட வாங்கிக்காம டான்ஸ் ஆடினாங்க.
அதுக்குப் பிறகு இந்த ‘வேலைக்காரன்’ ஷூட்டிங் ஸ்பாட்லதான் அவங்களைப் பார்த்தேன். ஆனால், மூன்று ஷூட்டிங்கிலும் மாறாத ஒரே விஷயம், கரெக்ட்டான நேரத்துக்கு அவங்க வர்றது. அப்புறம், எப்போதுமே செட்ல இருப்பாங்க. அந்த டெடிகேஷன் தான் அவங்களுக்குனு தனியா ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்திருக்கு. ஹீரோயினா தனியா படம் பண்ண முடியும், அதையும் சக்சஸ்ஃபுல்லா பண்ண முடியும்னு நிரூபிச்சிருக்காங்க. அவங்க கூட நடிச்சதுல ரொம்ப சந்தோஷம்” என்றார் சிவகார்த்திகேயன்.