க்யூப், யு.எஃப்.ஓ. கட்டணங்கள் அதிகரிப்பால் மார்ச் 1ஆம் தேதி முதல் தென்னிந்திய சினிமா உலகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. மற்றும் உள்ளாட்சி கேளிக்கை வரியால் தியேட்டர் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. அத்துடன், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தவும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, க்யூப், யு.எஃப்.ஓ. கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், திருட்டு விசிடி மற்றும் இணையதளப் பதிவேற்றங்களாலும் சினிமா உலகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, இவற்றை எதிர்த்து மார்ச் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறது தெலுங்குத் திரையுலகம். அத்துடன், இதை தென்னிந்திய சினிமா வேலை நிறுத்தமாக நடைபெற தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகிற்கும் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பு ஏற்று, மார்ச் 1ஆம் தேதி முதல் தென்னிந்தியாவின் நான்கு மொழி சினிமாவைச் சேர்ந்தவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில், இதுகுறித்து பேசப்பட்டது. மேற்கண்ட பிரச்னைகளோடு சேர்த்து தியேட்டர் பார்க்கிங் கட்டணம் மற்றும் மினிமம் கியாரண்டி ரிலீஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனவே, தமிழ்த் திரையுலகமும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள இருக்கிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், புதுப்படங்களில் ரிலீஸை மட்டும் நிறுத்தலாம் என சிலர் சொல்கின்றனர். ஆனால், படப்பிடிப்புகளையும் சேர்த்து ரத்து செய்தால்தால் போராட்டத்தின் வீரியம் அதிகமாக இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். எனவே, இதுகுறித்து இறுதி முடிவு எடுத்த பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், பேச்சுவார்த்தை நடத்த க்யூப் மற்றும் யு.எஃப்.ஓ. நிறுவனங்கள் சினிமா சங்கங்களை அழைத்துள்ளதாகத் தெரிகிறது.