சப்-ரெஜிஸ்டரர் 'கடவுள்' ஆனது எப்படி? என்.டி. ராமாராவ் எனும் பிரம்மாண்டம்!

'கூவத்தூர் ரிசர்ட்'லாம் வெறும் சாம்பிள் தான். அதை 1984லேயே செய்து காட்டியவர் என்.டி.ராமா ராவ்.

அன்பரசன் ஞானமணி

நந்தமுரி டரகா ராமாராவ் எனும் என்.டி.ஆர், ஆந்திர மக்கள் பலரின் வீடுகளில் இன்றும் தெய்வமாக வாழ்ந்து வருபவர். நம் எம்.ஜி.ஆரின் உற்ற நண்பனாக, எம்.ஜி.ஆர் தமிழகத்தை ஆள, ஆந்திராவை ஆண்டு வந்த என்.டி.ஆர். இறந்து இன்றுடன் 22 வருடங்கள் ஆகிறது.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில், நிம்மகுரு எனும் சிறிய கிராமத்தில் 1923ம் ஆண்டு பிறந்தவர் என்.டி.ஆர். 1947ல் சென்னை சர்வீஸ் கமிஷனில் சப்-ரெஜிஸ்ட்ரராக பணியில் சேர்ந்த ராமாராவ், மூன்றே வாரத்தில் அந்த வேலையை உதறிவிட்டு, திரைத்துறைக்குள் நுழைந்துவிட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை!. சப்-ரெஜிஸ்ட்ரர் வேலைக் கிடைத்தும், சினிமா மீதிருந்த காதலால், மூன்றே வாரங்களில் அந்த அரசுப் பணியை விட்டுவிட்டு, லட்சக் கணக்கான நம்பிக்கை கீற்றுகள் துணையோடு சினிமாவில் நடிக்க கிளம்பிவிட்டார்.

பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகும், ஓயாத முயற்சிக்குப் பிறகும் 1949ம் ஆண்டு ‘மன தேசம்’ எனும் படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் முதன்முறையாக நடித்தார். அதன் பிறகு, கடவுள் வேடம் கொண்ட படங்களில் அதிகம் நடிக்க ஆரம்பித்தார். மொத்தம் 17 படங்களில் கிருஷ்ணராக நடித்திருக்கிறார். இதனால், மக்கள் இவரை கடவுளைப் போலவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், வ.உ.சிதம்பரனார் போன்றோரை நாம் நினைக்கும் போதெல்லாம், நமக்கு ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் முகம் தான் மனத் திரையில் தெரியும். அதேபோன்று, ஆந்திராவில் அப்போது கிருஷ்ண பரமாத்மா என்றால், அது என்.டி.ராமாராவ் தான். 1963-ல் இவர் நடித்து வெளிவந்த லவ குசா திரைப்படத்தில் ராமர் வேடத்தில் என்.டி.ஆர். நடித்திருந்தார். அப்போதே இப்படம் ஒரு கோடி வசூல் செய்து சரித்திரம் படைத்தது.

கேலண்டர்களில் கடவுள் கிருஷ்ணரின் படமாக, இவரது படம் தான் இடம் பெற்றிருக்கும். ஆந்திராவில் பலரும், தங்கள் வீட்டின் பூஜை அறையில், இன்றும் இவரது படத்தை வைத்து பூஜை செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு ஆந்திர மக்கள் மனதில் நிறைந்திருப்பவர் என்.டி.ஆர்.

1970-களுக்குப் பிறகு, தனது திரைப் பாணியை மாற்றி கமர்ஷியல் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதிலும் வெற்றிகளைக் கொடுத்தவர் இறுதியாக, 1993ம் ஆண்டு ‘ஸ்ரீநாத கவி சர்வபௌமுடு’ எனும் படத்தில் நடித்தார். இதுதான் இவர் நடித்த கடைசித் திரைப்படமாக அமைந்தது.

1982ல் தெலுங்கு தேசம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய என்.டி.ஆர், ஆந்திராவை ஊழலில் இருந்தும், திறமையற்ற நிர்வாகத்திடமும் இருந்து மீட்கப் போவதாக முழங்கினார். 1983ல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும் போட்டியிட்ட ராமாராவின் தெலுங்கு தேச கட்சி, 199 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆந்திராவின் 10வது முதல்வராகவும், ஆந்திராவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வராகவும் கம்பீரத்துடன் பதவியேற்றார் ராமாராவ்.

அதன்பின், 1984ல் இதய அறுவை சிகிச்சைக்காக ராமாராவ் அமெரிக்கா சென்றிருந்த போது, அவரது அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்த பாஸ்கர ராவ் கலகம் செய்து, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ஆந்திர கவர்னராக இருந்த ராம்லால் துணையோடு ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார்.

இதையறிந்த ராமாராவ், அறுவை சிகிச்சை முடிந்தவுடன் உடனடியாக நாடு திரும்பி, ‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை உடன் அழைத்துக் கொண்டு, மாநிலம் முழுவதும் கறுப்பு உடை அணிந்து பயணம் செய்தார். (நீங்க நினைக்குற ‘தர்ம யுத்தம்’ கிடையாது). அப்போது மக்களிடம் இருந்து அவருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிரண்டு போன பிரதமர் இந்திரா காந்தி, கவர்னர் ராம்லாலை மாற்றிவிட்டு, ஷங்கர் தயாள் ஷர்மாவை நியமித்து, அவர் மூலம் மீண்டும் என்.டி.ராமா ராவை ஆந்திர முதல்வராக அரியணையில் அமர வைத்தார்.

இந்த இடைப்பட்ட காலத்தில், என்.டி.ஆர் பக்கம் இருந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க, குதிரை பேரம் நடைபெற்றது. இதிலிருந்து தனது எம்.எல்.ஏ.க்களை காக்க, அவர்களை ரகசியமாக தனி இடத்தில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாத்தார். ‘கூவத்தூர் ரிசர்ட்’லாம் வெறும் சாம்பிள் தான். அதை 1984லேயே செய்து காட்டியவர் என்.டி.ராமா ராவ்.

எண்ணற்ற விருதுகள், எண்ணற்ற வெற்றிகள், எண்ணற்ற சாதனைகள் என பலவற்றையும் பார்த்த என்டி ராமாராவ், இறுதி காலத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் சிலரால் ஏமாற்றப்பட்டார். அந்த துரோகத்தை, ஏமாற்றத்தை தாங்காத அவரது உயிர், 22 வருடங்களுக்கு முன்பு இதே நாள் (ஜன.18) மண்ணுலகை விட்டு பிரிந்தது.

‘திட்டமிட்ட துரோகம்’ என்ற வார்த்தை தான் இறுதி காலத்தில் என்.டி.ஆர் அதிகம் உபயோகித்த வார்த்தைகளாக இருந்தது.

×Close
×Close