அமெரிக்க கான்செப்டான 'பிக் பிரதர்' நிகழ்ச்சி இந்தியாவில் 'பிக்பாஸ்' என்ற பெயரில், பாலிவுட் நடிகர் சல்மான் கானால் அறிமுகம் செய்யப்பட்டது நமக்கு தெரிந்த விஷயமே.
அதேபோல், தமிழ், தெலுங்கிற்கு முன்னதாகவே கன்னடத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியிலும் பல சர்ச்சைகள், சண்டைகள், விமர்சனங்கள் என எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், இவையனைத்தையும் விட அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பிக்பாஸ் நான்காவது சீசனினின் போது நடைபெற்றது.
அதாவது, கன்னட 'பிக்பாஸ் 4' சீசனை பிரதம் என்பவர் தான் வென்றார். இந்த நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையாக அவருக்கு கிடைத்தது. இந்த பரிசுத்தொகையை கொண்டு ஏழை மக்களுக்கு உதவி செய்வதாக அவர் தெரிவித்து இருந்தார். ஆனால், பிரதமுக்கும் அவரது நண்பர் லோகேசுக்கும் பரிசுத் தொகை பணம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பிரதம் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சித்தார். அதோடு, தற்கொலை முயற்சியையும், அதற்கான காரணத்தையும் பற்றி அவர் கூறும் வீடியோ ஒன்றையும் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோவை பார்த்த அவருடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து, பிரதமின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவரது வீட்டிற்கு சென்ற பிரதமின் நண்பர்கள், பிரதமை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும், பிரதம் நலமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, அவர் வெளியிட்ட வீடியோவில், அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததும் பதிவாகி இருந்தது. அதில், தூக்க மாத்திரைகளை தின்று பிரதம் தண்ணீர் குடிக்கிறார். மேலும், தனது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து வீடியோவில் அவர் பேசுகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/a883-300x217.jpg)
அப்போது அவர் பேசியதாவது, "என் நண்பர் லோகேசால் நான் அதிக தொல்லை அடைந்தேன். அவருடைய தொல்லையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் வென்ற பரிசுத்தொகைக்கான காசோலை தற்போதுதான் கிடைத்துள்ளது. அதில் இருந்து பணம் இன்னும் எடுக்கவில்லை. இருப்பினும், பரிசுத்தொகையை கொண்டு யாருக்கும் உதவி செய்யவில்லை என என்னிடம் சிலர் கேள்வி கேட்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் சிலர் எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த நினைக்கிறார்கள். நான் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்வேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால், இவர்கள் என்னை அமைதியாக வாழ விடமாட்டார்கள். முகநூலில் நான் பதிவிடும் கடைசி வீடியோ இதுதான். யாரையாவது நான் காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் வெற்றியின் மூலம் கிடைத்த பணத்தால், பிரதம் தற்கொலை வரை சென்றது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதேபோல், அமெரிக்க பிக்பிரதர் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் இடையே, கோபத்தின் காரணமாக கத்திக் குத்து சம்பவமெல்லாம் அரங்கேறியிருக்கிறது.
இதுவரை தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்ட சர்ச்சைகள் எல்லாம் சாதாரணம் தான். காயத்ரி 'மூஞ்சும் முகரையும் பாரு-னு' சொன்னது, 'அவ வெளிய வரட்டும். அப்புறம் இருக்கு-னு' சொன்னது, 'சேரி பிஹேவியர்-னு' சொன்னது எல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரண சர்ச்சைகள் தான். இனி தான் மெயின் பிக்சரே தமிழ் பிக்பாஸில் இருக்கப் போகிறது.