கடந்த 2016-ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த திங்கள் கிழமை வெளியிட்டது. இதில், பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் இடம்பெற்றுள்ளனர். ஆனால், அமீர் கானின் பெயர் அப்பட்டியலில் இடம்பெறாதது அதிர்ச்சியாக உள்ளது.
இந்த பட்டியலில், உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில், ஷாருக்கான் 65-வது இடத்தையும், சல்மான் கான் 71-வது இடத்தையும், அக்ஷய் குமார் 80-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆனால், கடந்தாண்டு பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘தங்கல்’ திரைப்படத்தில் நடித்த அமீர்கானின் பெயர் அப்பட்டியலில் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 1, 2016 முதல் ஜூன் 1, 2017 வரையிலான நடிகர்களின் ஓராண்டு வருமானத்தையும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. நடிகர்களின் மேலாளர் சம்பளம், வழக்கறிஞர் சம்பளம், ஏஜெண்ட் சம்பளத்தைக் கழித்து மொத்த வருமானம் வெளியிடப்படுகிறது.
ஷாருக்கானின் வருமானம் 245 கோடி ரூபாய் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஃபேன் மற்றும் டியர் ஜிந்தகி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடிகர் ஷாருக்கான் நடித்திருந்தார். ஃபேன் திரைப்படம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதனால், அத்திரைப்படத்தின் வசூலும் குறைந்தது. மற்றொரு திரைப்படமான டியர் ஜிந்தகி ஓரளவு வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, அப்பட்டியலில் 71-வது இடத்தைப் பிடித்த சல்மான் கானின் வருமானம் 238 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமான சுல்தான் திரைப்படத்தை கடந்தாண்டு நடித்திருந்தார். இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபார் இயக்கிய இத்திரைப்படம், உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.
அப்பட்டியலில் 80-வது இடத்தைப் பிடித்த நடிகர் அக்ஷய் குமார் கடந்தாண்டு ரஸ்டம், ஏர்லிஃப்ட், ஹவுஸ்ஃபுல் என மூன்று திரைப்படங்களை நடித்தார். இவரது வருமானம் 228 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலாவதாக அமெரிக்கா ராப் பாடகர் சீன் கோம்ப்ஸ், 837 கோடி ரூபாய் வருமானத்துடன் முதலிடம் பிடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.