தமிழில் உருவாகும் சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சன்னி லியோன்.
ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் சன்னி லியோன். தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கூட ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில், தமிழில் உருவாகும் ஒரு சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சரித்திரப்படம் என்றதும், சுந்தர்.சி இயக்க இருக்கும் ‘சங்கமித்ரா’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் இந்தப் படத்தை இயக்குகிறார் பொன்ஸ் ஸ்டீபன். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.
தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப்படம், சரித்திரப்படமாக உருவாக இருக்கிறது. இதற்காக கத்திச்சண்டை, குதிரையேற்றம் உள்ளிட்ட கலைகளைக் கற்று வருகிறார் சன்னி லியோன். இதற்காக ஆந்திராவில் இருந்து மும்பைக்குச் சென்று சன்னிக்குப் பயிற்சி அளித்து வருகிறார் ஒருவர். இந்தப் படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி லியோன்.
70 நிமிடங்களுக்கு இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறதாம். ‘பாகுபலி’ மற்றும் ‘2.0’ படங்களுக்கு கிராபிக்ஸ் செய்த நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தியிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. பிப்ரவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கின்றனர்.