சினிமா நடிகர்களுக்கு எத்தனையோ பட்டங்கள் தரப்படுகின்றன. ஆனால், இந்த நூற்றாண்டு நடிகர்கள் விரும்பும் ஒரே பட்டம் ‘சூப்பர் ஸ்டார்’. காரணம், ரஜினி என்ற ஒற்றைச் சொல்லும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் அன்பும். நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கும் ஒரே நடிகர் ரஜினி மட்டுமே!
ஜனவரி மாதம் 12ஆம் தேதி... இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத நாள். ரஜினியின் பிறந்த நாள் தான் அது. நாளை, 66வது வயதில் இருந்து 67இல் அடியெடுத்து வைக்கிறார் ரஜினி. அவரைப் பற்றி சில சுவாரசியமான தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளோம்...
* வாழ்க்கையை, அதன் போக்கில் அப்படியே இயல்பாக எடுத்துக் கொள்வது ரஜினியின் வழக்கம். ‘போன வருஷத்தைவிட இந்த வருஷம் வெயில் அதிகமாச்சுனு ஒவ்வொரு வருஷமும் சொல்றாங்க. போன வருஷத்தைவிட இந்த வருஷம் ஒரு வயசு அதிகமாச்சு. அதனால் தான் அவர்களால் வெயிலைத் தாங்க முடியவில்லை என்ற உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் போதும்’ என எளிமையாக வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குவார் ரஜினி.
* தன்னைச் சந்திக்க வருபவர்கள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருப்பவர்கள் எனத் தெரிந்து கொண்டால், ‘மாஸ்டர்ஸ் ஆஃப் ஹிமாலயன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். இமயமலையில் வாழ்ந்த/வாழ்ந்து கொண்டிருக்கும் முனிவர்களைப் பற்றிய புத்தகம் அது.
* கழுத்தில் ருத்திராட்சம், கையில் செம்பு காப்பு - இது இரண்டும்தான் ரஜினி விரும்பி அணியக்கூடிய ஆபரணங்கள். மகள்கள் வற்புறுத்தினால் மட்டுமே எப்போதாவது வாட்ச் அணிவார்.
* உடல்நிலை சரியில்லை என்றாலும், வாக்கிங் மற்றும் யோகா செய்வதில் இருந்து தவறமாட்டார் ரஜினி. அதுதான் இந்த வயதிலும் அவருடைய சுறுசுறுப்புக்கு காரணமாக இருக்கிறது. போயஸ் கார்டன் வீட்டிலேயே காலையில் ஒரு மணி நேரம் வாக்கிங், அதன்பிறகு யோகா. ஷூட்டிங் இல்லையென்றால் மாலையிலும் வாக்கிங் செல்கிறார்.
* எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும், ராகவேந்திரர் மற்றும் பாபாஜி படங்களுக்குப் பூஜை செய்த பிறகுதான் வீட்டைவிட்டு வெளியே வருவார். இதிலிருந்து எப்போதும் அவர் தவறியது இல்லை.
* தனிமை விரும்பியான ரஜினியின் ஃபேவரைட் ஸ்பாட், இமயமலை. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனதற்குப் பிறகு இமயமலை செல்வதைக் குறைத்துக் கொண்டுள்ளார். அவரும், அவருடன் ஆன்மீகப் பயணம் செல்லும் நண்பர்களும் இணைந்து இமயமலையில் பாபாஜி தியான மண்டபத்தைக் கட்டியுள்ளனர். அந்த தியான மண்டபத்தின் கிரகபிரவேசத்துக்கு கூட ரஜினி செல்லவில்லை.
* மேக்கப் மற்றும் உடை மாற்றுவதற்கு மட்டுமே கேரவனைப் பயன்படுத்துபவர் ரஜினி. மற்றபடி மதிய உணவில் இருந்து எல்லாமே செட்டில்தான். உடல்நிலை சரியில்லாமல் போனதற்குப் பிறகு மதிய உணவையும் கேரவனுக்குள் அமர்ந்துதான் சாப்பிடுகிறார்.
* என்னதான் உடல்நிலை சரியில்லை என்றாலும், இன்னும் புரொடக்ஷன் சாப்பாடு தான். வீட்டில் இருந்து ரஜினிக்கு என தனியாக உணவு வருவதில்லை. ரஜினிக்கு மிகவும் பிடித்த உணவு, சிக்கன். ஏகப்பட்ட உணவு வகைகள் இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு உணவு வகையை மட்டுமே சுவைப்பார்.
* ‘யானை கீழே விழுந்தால், அதனால் சீக்கிரம் எழுந்து ஓடமுடியாது. ஆனால், குதிரை கீழே விழுந்தால் உடனே எழுந்து ஓடும். நான் குதிரை. சட்டுனு எழுந்து ஓடிக்கிட்டே இருப்பேன்” - தன்னைப் பற்றி ரஜினி சொன்ன வார்த்தைகள் இவை.
* ஷூட்டிங்கில் டயலாக் பேப்பரை அவர் கையில் கொடுத்துவிட்டால், சில நிமிடங்களுக்கு அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது. பரீட்சைக்குப் படிக்கும் பள்ளி மாணவனைப் போல அவ்வளவு சிரத்தையாகப் படித்து மனப்பாடம் செய்து கொள்வார். அப்புறமென்ன... ஒரே டேக்கில் ஷாட் ஓகே ஆகிவிடும்.
* ‘நாங்கள் தருகிற மருந்துகள் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ளாது. மேலும், இவ்வளவு சீக்கிரம் யாரும் குணமானது இல்லை’ என ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றபோது மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ‘நீங்கள் தந்த மருந்துகளைவிட, என் ரசிகர்களின் பிரார்த்தனைக்கு பவர் அதிகம்’ என சிரித்துக் கொண்டே அவர்களிடம் கூறியிருக்கிறார்.
* ‘பாபா’ படத்தின் ரிலீஸ் சமயத்தில், படப்பெட்டிகளைக் கைப்பற்றி ஒரு கட்சியினர் தகராறு செய்தனர். அவர்களுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் கறுப்புக்கொடி காண்பிக்க, அவர்கள்மீது அந்தக் கட்சியினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். ‘மதுரையில் இருக்கும் என் ரசிகர்களை அடிச்சிட்டீங்க. சிங்கப்பூர், மலேசியா, சீனா, கனடா, அமெரிக்கா என எல்லா நாடுகளிலும் உள்ள என் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டினால் என்ன பண்ணுவீங்க?’ என்று கேட்டார். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நடிகர் ரஜினி.
* பன்ச் டயலாக் கலாச்சாரத்தை தமிழ் சினிமாவில் அதிகமாக பரவச் செய்தவர். ‘என் வழி, தனி வழி’, ‘நான் ஒருதடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி’, ‘பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம், சிங்கிளாத்தான் வரும்’ போன்ற ரஜினியின் பன்ச் டயலாக்குகள், காலம் கடந்தும் நிற்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.