Petta Movie Review: வேற லெவல் ரஜினி... மாஸை கொண்டாடும் ரசிகர்கள்

Petta Review: எந்த ரஜினியை நாம் ரசித்து ரொம்ப காலமாக திரையில் பார்க்க ஆவலாக இருந்தோமோ அந்த ரஜினியை இந்த பேட்டையில் காணலாம்!

PETTA MOVIE REVIEW :  ஒரு ரசிகன் தன் தலைவரின் படத்தில் என்னவெல்லாம் எதிர்பாப்பானோ, எப்படி எல்லாம் தன் தலைவனை திரையில் ரசிப்பானோ அது எல்லாம் அவன் நினைத்தபடியே கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் ஒரு படம் வெளிவந்தால் அது எப்படி இருக்கும்? அப்படி தான் இருக்கிறது பேட்ட!

மாஸ், ஸ்டைல்;  இதற்கெல்லாம் Dictionaryயில் அர்த்தம் தேடினால் அது ‘ரஜினி’ என்று காண்பிக்கும். ஆங்கிலத்தில் Charisma என்று சொல்வார்கள் அதை ஆட்கொண்டவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 68 வயதில் அவர் ஆடும் ஆட்டம் “இது போதுமா குழந்தைகளா” என்று அவர் எத்தனை முறை கேட்டாலும், ‘ஒன்ஸ் மோர்’ கேட்க வைக்கின்றது. சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு இப்பொழுது வளர்ந்து வரும் நடிகர்கள் ஆசைப்பட்டாலும் அந்த பட்டம் ரஜினிக்கு தவிர வேற ஒருவருக்கு இம்மியளவும் பொருந்தாது.

சரி, பேட்ட படத்தின் கதை என்ன?

மினிஸ்டர் ரெகமெண்டேஷனுடன் ஒரு காலேஜ் ஹாஸ்டலுக்கு வார்டனாக என்ட்ரி தருகிறார் காளி (ரஜினி). அங்கே சேட்டை செய்யும் சீனியர்களை, சரியாக சமைக்காத கான்ட்ராக்டரை எல்லாம் ஒரு வழி பண்ணுகிறார். எதுவுமே சீராக போகாத ஒரு இடத்தை மொத்தமாக மாற்றியமைக்கிறார். இங்கு நடக்கும் சிலகாட்சிகள் நமக்கு நம்மவர் படத்தை நினைவூட்டுகிறது. இந்த காலேஜ் பிரச்னை எல்லாம் சரி செய்துவிட்டோம் என்று காளி நிம்மதி பெருமூச்சு விடும்போது தான் தொடங்குகிறது அவரின் உண்மையான பிரச்னை. ஒரு ரவுடி கும்பல் காளியை கொல்ல வடநாட்டில் இருந்து இறங்குகிறது. அவர்கள் காளியுடன் சேர்த்து அன்வரையும் (சனந்த் )கொல்லத் துடிக்கிறார்கள்.  காளி அந்த கும்பலை அடித்து துவைத்த பின்பு அவர்கள் சிங்காரத்தின் ஆட்கள் என்ன தெரியவருகிறது. யார் இந்த சிங்காரம்? அவருக்கும் காளிக்கும் என்ன தகராறு? இது தான் இண்டெர்வலுக்கு பிறகு நகரும் கதை.

சிங்காரமாக, உத்தர பிரதேசத்தில் இந்துத்துவ அமைப்பு தலைவராக அறிமுகம் ஆகிறார் நவாஸுதீன் சித்திக். இவரின் நடிப்பு திறனுக்கு தீனி சற்று குறைவாக போட்டு இருந்தாலும் கிடைக்கும் கேப்-பில் ஸ்கோர் செய்திருக்கார். உத்தர பிரதேசத்தில் நடக்கும் அனைத்து விதமான சட்டவிரோத செயல்களும் இவர் தலைமையில் தான் நடக்கும். சிங்காரத்துக்கு இரண்டு மகன்கள்; ஒருவர் கட்சியை பார்த்துக்கொள்வார் மற்றோருவர் அவரின் சட்ட விரோத செயல்களுக்கு தளபதி.

சொல்வது சிங்காரம் செய்வது ஜீத்து. சரி, யார் அந்த ஜீத்து என்று பார்த்தால் நெற்றியில் இந்துத்துவ அமைப்பின் அடையாளங்களுடன்; வாயில் பீடாவை மென்று கொண்டு கையில் துப்பாக்கியுடன் திரையில் தோன்றுகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

சரி சிங்காரத்துக்கு என்ன பகை காளியின் மீது? அதற்கு நாம் மதுரைக்கு செல்ல வேண்டும், அங்கே தான் பிளாஷ்பேக் தொடங்குகிறது. ஏற்கனவே ஊர் விவகாரத்தில் காளியும் சிங்காரம் குடும்பமும் எலியும் புலியும் போல. இதில் காளியின் தம்பியான மாலிக்(சசிகுமார்) சிங்காரத்தின் தங்கையை காதலித்தால் என்ன ஆகும்? பெரிய பிரச்னை வெடிக்கிறது.

காளியின் ஆதரவால் மாலிக்கிற்கும் சிங்காரத்தின் தங்கைக்கும் திருமணம் நடக்கிறது. சிங்காரம் தன் பகையை தீர்த்துக்கொள்ள தன் தங்கையின் சீமந்தம் பொழுது பாம் வைத்து மாலிக் மற்றும் காளியின் மனைவியாக சில காட்சிகளில் தோன்றும் சரோ (திரிஷா) ஆகியோரை கொன்றுவிடுகிறான். அதில் காளியும் சிங்காரத்தின் தங்கையும் அவளின் வயிற்றில் இருக்கும் குழந்தையும் உயிர்பிழைக்கிறார்கள், அவர்களை கொல்ல சிங்காரம் துடிக்கிறான். இறுதியில் யார் வென்றார்கள்? ஜீத்து உண்மையில் சிங்காரத்தின் மகன் தானா? என்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பல ட்விஸ்ட்களை அமைத்து பதில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

தமிழ் சினிமாவில் ரஜினி என்று ஆளுமையை சரியாக பயன்படுத்திய இயக்குனர்கள் வெகு குறைவு. ரஜினியின் மாசை பட்டி தொட்டி எங்கும் பரப்பிய எஸ்.பி.முத்துராமன், கே எஸ் ரவிக்குமார் வரிசையில் நிச்சயம் கார்த்திக் சுப்புராஜிற்கு ஒரு இடம் உள்ளது. ரஜினியை ரசித்து ரசித்து இயக்கி இருக்கிறார். பாஷாவின் ‘உள்ளே போ’, முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற ‘ராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்’ பாடல் என்று ரஜினியின் 80ஸ், 90 ஸ் பட reference பலவற்றை அங்கங்கே படத்தில் தெளித்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் தன் பங்கை சிறப்பாக ஆற்றி இருக்கிறார். பாடல்களை தவிர்த்து ரஜினியின் சண்டை காட்சிகள் இவரின் பின்னணி இசை மூலமாக வேறு ஒரு வடிவம் தந்திருக்கிறார்.

இவற்றை தவிர்த்து, படத்தில் நட்சத்திர பட்டாளமே உள்ளது. கல்லூரி மாணவியின் அம்மாவாக வரும் சிம்ரன் இன்றும் அழகாக திரையில் தெரிகிறார். இவர் ரஜினியுடன் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கின்றன ‘ஜோக்கர்’ பட புகழ் சோமசுந்தரம்; இயக்குனர் மஹேந்திரன், முனீஷ்காந்த், பாபி சிம்ஹா, மெகா ஆகாஷ் என்று பலர் நடித்திருக்கின்றனர்.

மொத்தத்தில், எந்த ரஜினியை நாம் ரசித்து ரொம்ப காலமாக திரையில் பார்க்க ஆவலாக இருந்தோமோ அந்த ரஜினியை இந்த பேட்டையில் காணலாம்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close