“அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு வாழ்த்துகள்” - சூர்யா

நம்முடைய துறையில் இருந்து அடுத்த பயணத்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு என் வாழ்த்துகள். அனைவர் வரவும் நல்வரவாக அமைய வேண்டும்.

‘சினிமா துறையில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு என் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார் சூர்யா.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வருகிற பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சூர்யா, “நம்முடைய துறையில் இருந்து அடுத்த பயணத்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு என் வாழ்த்துகள். அனைவர் வரவும் நல்வரவாக அமைய வேண்டும். எங்கள் அனைவரின் ஆதவரவும் அவர்களுக்கு உண்டு.

எனக்கு ஒவ்வொரு இயக்குநரும், தயாரிப்பாளரும் எப்படி முக்கியமோ, அதேபோல என்னுடைய படங்களில் பணிபுரிந்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களும் முக்கியம். அதனால்தான், 35 படங்களைக் கொடுக்க முடிந்தது என்று என்னால் தைரியமாகச் சொல்ல முடியும். இதற்கு பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், என்னுடைய ரசிகர்களும்தான் காரணம்.

எதிர்பாராத நேரத்தில் இந்தக் கூட்டணி அமைந்தது. ‘விக்னேஷ் சிவனிடம் கதை கேட்கப் போகிறேன்’ என்று ஹரி சாரிடம் சொன்னேன். ‘கண்டிப்பாக அவருடன் படம் பண்ணுங்கள்’ என்றார். என் வீட்டில் உள்ளவர்களும் விக்னேஷ் சிவனுடன் படம் பண்ணச் சொன்னார்கள்.

7 வருடங்களுக்குப் பிறகு பண்டிகை விடுமுறையில் என் படம் ரிலீஸாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு’, ‘புகை பிடிப்பது கேடுதரும்’ என படத்தின் தொடக்கத்தில் வரும் டிஸ்க்ளைமர் கார்டு இந்தப் படத்தில் வராது. ஏனெனில், படத்தில் அப்படி ஒரு காட்சி கூட வராது. இதற்காக சென்சார் அதிகாரிகள் படத்தைப் பாராட்டினார்கள்” என்றார்.

×Close
×Close