பெயர் மாற்றம் ஆனது "சுவாதி கொலை வழக்கு" திரைப்படம்!

சுவாதி கொலை வழக்கு" என்ற படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் ரமேஷ் செல்வம் இன்று அறிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து சாஃப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி, மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராம்குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தை கதையாக கொண்டு “சுவாதியின் கொலை வழக்கு” என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது. விஜயகாந்த் நடிப்பில் “உளவுத்துறை” படத்தை இயக்கிய எஸ்டி ரமேஷ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். கடந்த மே மாதம் 29-ஆம் தேதி “சுவாதியின் கொலை வழக்கு” படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் போலீஸாரே ராம்குமாரின் கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதனிடையே, சுவாதி கொலை வழக்கு திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், இந்த திரைப்படத்தில் உண்மைக்கு மாறான விஷயங்கள் உள்ளது. இந்தப்படம் வெளிவந்தால் எங்கள் குடும்பத்தினர் மன ரீதியாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும், இந்த படம் எடுப்பதற்கான எந்த முன் அனுமதியையும் எங்களிடம் திரைப்படக்குழுவினர் பெறவில்லை. ஆகையால், இந்த திரைப்படத்தை எடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையொட்டி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், சந்தான கோபாலகிருஷ்ணன் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புதிய புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து, அத்திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், தயாரிப்பாளர், கதாசிரியர் ஆகியோர் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், “சுவாதி கொலை வழக்கு” என்ற படத்தின் பெயர் “நுங்கம்பாக்கம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் ரமேஷ் செல்வம் இன்று அறிவித்துள்ளார். அதேபோன்று, இத்திரைப்பட கதாபாத்திரங்களின் பெயர்களும் மாற்றப்படும் என தயாரிப்பாளர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

×Close
×Close