விளையாடிக்கொண்டே ரயில் பயணம்: தைவானில் புதிய முயற்சி

ரயிலின் தளத்தில் நீச்சல் குளம், ஓடுதளம், சாக்கர் விளையாடும் தளம், கூடைப்பந்து மைதானம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. ஈஸிகார்ட் கார்ப்பரேஷன் இதனை அமைத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக உலகளவில் புகழ்பெற்ற விளையாட்டு போட்டி யுனிவர்சியேட். 2017-ஆம் ஆண்டு யுனிவர்சியேட் போட்டிகள் தைவான் நாட்டின் தலைநகர் தைப்பே நகரில் நடைபெற உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு இதற்கான தேர்வில் பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவை விட அதிக வாக்குகளை தைப்பே நகரம் பெற்றதால் இப்போட்டிகள் இந்தாண்டு தைப்பே நகரில் நடைபெற உள்ளன.

இப்போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. போட்டிகள் ஆரம்பமாக இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில், விளையாட்டுகள் மீது அந்நாட்டு மக்களுக்கு ஆர்வம் பெருகும் வகையில் தைப்பே நகரில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடும் இடங்களைப் போல் சுரங்க ரயில்களை வடிவமைத்துள்ளனர்.

ரயிலின் தளத்தில் நீச்சல் குளம், ஓடுதளம், சாக்கர் விளையாடும் தளம், கூடைப்பந்து மைதானம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. தைவானில் பொது போக்குவரத்து நிறுவனமான ஈஸிகார்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த புதுமையான முறையை ரயில்களில் வடிவமைத்துள்ளது. இதில், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஏராளமானோர் பயணித்தும், விளையாடியும் குதூகலம் அடைகின்றனர்.

இந்த போட்டிகளை காண உலகளவில் பார்வையாளர்கள் அதிகளவில் வருவர். அவர்கள் அனைவருக்கும் ஒரு புதுவித அனுபவத்தை இந்த ’விளையாட்டு’ ரயில்கள் நிச்சயம் கொடுக்கும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close