ஏப்ரல் 20-ஆம் தேதி உலக ஜம்பிங் தினம். ஸ்கைடைவிங், பாராகிளைடிங் உள்ளிட்ட சாகச விளையாட்டு விரும்பிகளுக்கான தினம் இது. இந்த நாளில் இந்தியாவில் சாகச வீரர்கள் எங்கெல்லாம் உயரப்பறந்துகொண்டே குதிக்க முடியும் என்பதையும், ஜம்பிங்கில் என்னென்ன வகைகள், அவற்றிற்கான சிறந்த இடம் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
பங்கி ஜம்பிங்:
குஷி படத்தில் ‘மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்’ பாடலுக்கு முன்பு இரு கால்களிலும் கயிற்றை இறுகக் கட்டிக்கொண்டு நடிகர் விஜய் குதிப்பாரே அந்த வகைதான் பங்கி ஜம்பிங். இதற்கான சிறந்த இடங்கள்
1.ரிஷிகேஷ்:
இந்தியாவிலேயே மிக உயரமான ‘பங்கி ஜம்பிங்’ ஸ்பாட் ரிஷிகேஷில் தான் உள்ளது. 83 மீட்டர் உயரத்திலிருந்து ரிஷிகேஷில் ‘பங்கி ஜம்பிங்’ செய்ய முடியும். இந்த உயரத்திலிருந்து நாம் குதிக்கும்போது மிகச்சிறந்த அனுபவத்தைப் பெற முடியும்.
2.பெங்களூரு, கர்நாடகா:
பெங்களூரில் சுமார் 25 மீட்டர் தூரத்திலிருந்து ‘பங்கி ஜம்பிங்’ செய்வதற்கான சிறந்த இடங்கள் உள்ளன.
3.லோனாவாலா, மும்பை:
மும்பை மற்றும் பூனேவிற்கு நடுவில் உள்ள லோனோவாலாவில் இந்தியாவிலேயே பாதுகாப்பாக ’பங்கி ஜம்பிங்’ செய்ய முடியும். ச்மார் 45 மீட்டர் தூரத்திலிருந்து இந்த சாகசத்தை அனுபவிக்கலாம்.
ஸ்கை டைவிங்:
வானத்திலிருந்து பறவையைப் போன்று பறந்துகொண்டே குதிப்பது ‘ஸ்கை டைவிங்’. இதற்காக இந்தியாவில் உள்ள சிறந்த இடங்களைக் காணலாம்.
4.மைசூரு, கர்நாடகா:
பெங்களூரிலிருந்து சில மணிநேரங்களில் மைசூருக்கு சென்றுவிடலாம். ஸ்கை டைவிங் செய்வதற்கான ஏற்ற இடமாக மைசூரு வளர்ந்து வருகிறது. இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு பயிற்சி கொடுத்து மைசூரிலுள்ள சாமுண்டி மலையுச்சியிலிருந்து ஸ்கை டைவிங் செய்வது சாகச வீரர்களுக்கு பிடித்த ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.
5.தனா, மத்தியபிரதேசம்:
போபாலில் இருந்து அருகாமையில் இருக்கக்கூடிய தனாவில் தான் இந்தியாவிலேயே முதன்முதலின் ஸ்கை டைவிங் செய்வதற்கான பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. வானத்திலிருந்து 4 ஆயிரம் கனஅடி தூரத்திலிருந்து குதிக்கும்போது இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.
பாரா கிளைடிங்:
பாராசூட்டின் உதவியுடன் உயரத்திலிருந்து குதிக்கும் விளையாட்டு பாரா கிளைடிங். அதற்கான ஏற்ற இடங்கள் இவை.
6.பிர் பில்லிங், இமாச்சல பிரதேசம்:
இமாச்சல பிரதேசத்தின் 11 இடங்கள் பிர் பில்லிங் சாகசத்திற்கு பெயர்போனவை. 30 நிமிடங்களுக்குக் குறையாமல் இங்கு பாராகிளைடிங் செய்ய முடியும். உலகிலேயே பாராகிளைடிங் செய்ய ஏற்ற இரண்டாவது இடம் இமாச்சல பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
7.காம்ஷெட், மும்பை:
காம்ஷெட்டில் பாராகிளைடிங் செய்வது மீண்டும் அந்த சாகசத்தைப் புரிய வேண்டும் என்ற எண்ணத்தை நிச்சயம் தரும்.
க்ளிஃப் ஜம்பிங்:
எந்தவொரு துணை சாதனமும் இல்லாமல் குதிப்பதுதான் க்ளிஃப் ஜம்பிங். அதற்கான ஏற்ற இடங்கள்
8.புதுச்சேரி
புதுச்சேரியின் வடக்கில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் உள்ள கல் குவாரி இதற்கான ஏற்ற இடமாகும்.
9.புனித மேரி தீவு, கர்நாடகா:
கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த தீவு க்ளிஃப் ஜம்பிக்கிற்கு சிறந்த இடமாகும்.
இந்த எல்லா சாகசங்களையும், உரிய பயிற்சியுடனும், பாதுகாப்புடனும் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இவை உயிருக்கே ஆபத்தானவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.