தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ படத்தில் நடித்த கங்கனா ரணாவத், இந்தியில் நடித்த ‘குயின்’ படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து, இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியிருந்தார்.
இதையடுத்து, இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. தென்னிந்திய மொழிகளில் தமிழில் இப்படத்தை ரேவதி இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. சுஹாசினி படத்திற்கான வசனத்தை எழுதப்போவதாக கூறப்பட்டது. கூடவே, படத்தின் நாயகியாக தமன்னா நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது. பின்னர், கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தை பிரபல நடிகரும் ‘உத்தம வில்லன்’ படத்தை இயக்கியவருமான ரமேஷ் அரவிந்த் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. கங்கனா ரோலில் காஜல் அகர்வால் நடிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இப்படத்திற்கு 'பாரீஸ் பாரீஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டு, செப்.,24-ஆம் தேதி இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான வி. தங்கப்பாண்டியனின் மகளும், திமுகவின் மகளிரணியில் முக்கிய பதவியில் இருப்பவருமான தமிழச்சி தங்கபாண்டியன் இப்படத்திற்கு வசனங்களை எழுதுகிறார். விழாவில் பேசிய நடிகை காஜல், "நான் இப்படத்தை ரீமேக் என்றே நினைக்கவில்லை. மற்றவர்களுடைய ஷூவில் எனது கால்களை பொருத்திக் கொள்ள விரும்பவில்லை. எனது தனித்துவ நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்துவேன். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படமாக இது இருக்கும்" என்றார்.
இந்த நிலையில், குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை தமன்னா நடிக்க இருக்கிறார். இதற்கான அறிமுக விழா இன்று நடைபெற்றது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜி.நீலகண்ட ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.
தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும் நடிப்பதால், இருவரில் யார் சிறந்த நடிப்பை வழங்கி மக்களை கவரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.