Advertisment

பழம்பெரும் நடிகை மறைவு.. 15 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகர்.. மேலும் செய்திகள்

திரைப்படங்களுக்கு என்று இல்லாமல் இளையராஜா இசையில் வந்த முதல் தனி இசை ஆல்பம் இதுவாகும். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் இந்த இசை ஆல்பம் வரவேற்பை பெற்றது.

author-image
WebDesk
New Update
பழம்பெரும் நடிகை மறைவு.. 15 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகர்.. மேலும் செய்திகள்

பழம்பெரும் மலையாள நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட லலிதா தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

Advertisment

இதனையடுத்து உடல்நிலை சற்று தேறிய நிலையில் கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தனது மகன் சித்தார்த் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.22) இரவு நடிகை லலிதா காலமானார்.

1969 ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ். சேது மாதவனின் 'கூட்டுக்குடும்பம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். காயங்குளத்தில் இருந்த KPAC என்ற ஒரு பிரபல நாடக சபாவில் தொடர்ந்து பணியாற்றி வந்ததால் அவர் KPAC லலிதா என்று அழைக்கப்பட்டார். 

நாடக நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய லலிதா, மலையாளத்தில் குணச்சித்திர பாத்திரங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து தமிழில் ‘காதலுக்கு மரியாதை’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அலைபாயுதே’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட பல படங்களில் லலிதா நடித்துள்ளார். 

இதுவரை 550-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மலையாள இயக்குநர் பரதனின் மனைவி ஆவார். 1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் நான்கு முறை கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.

நடிகை லலிதாவின் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசைஞானியின் புதிய அறிவிப்பு: ரசிகர்கள் மகிழ்ச்சி

இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

இவரது இசையில் 1986-ம் ஆண்டு ‘ஹவ் டு நேம் இட்' என்ற இசை ஆல்பம் வெளியானது. 48 நிமிடங்கள் கொண்ட இந்த இசை ஆல்பம், இந்திய மேற்கத்திய இசை பாணியில் உருவாகி இருந்தது.

திரைப்படங்களுக்கு என்று இல்லாமல் இளையராஜா இசையில் வந்த முதல் தனி இசை ஆல்பம் இதுவாகும். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் இந்த இசை ஆல்பம் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஹவ் டு நேம் இட் இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக இளையராஜா அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும்போது, ''திரைப்படங்களில் 2-ஆம் பாகம், 3-ம் பாகம் என்று வெளியாகிறது. உதாரணத்திற்கு சூப்பர்மேன், சூப்பர்மேன்-2, சூப்பர்மேன்-3 எனவும், அதேபோல் பேட்மேன், பேட்மேன்-2, பேட்மேன்-3 எனவும் வெளியாகிறது. அதேபோல் ஏன் இசையில் அடுத்தடுத்த பாகங்கள் ஏன் வரக்கூடாது என்ற யோசித்தேன். அதனால் ‘ஹவ் டு நேம் இட் 2-ம் பாகம்’ சீக்கிரமே வரப்போகிறது’’ என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஷ்மிகாவுக்கு விரைவில் திருமணம்?

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் பிரபல கதாநாயகியாக வலம் வருகிறார்.

அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த புஷ்பா படத்திலும் கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ராஷ்மிகாவும், கீதகோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்த முன்னணி தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.

இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளிவந்தன.

இதனை ராஷ்மிகா மறுத்திருந்தார். தனக்கு திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு போதிய வயது இல்லை என்றும், திருமணத்தை பற்றி யோசிக்க நேரம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்துகொள்ள தயாராகி இருப்பதாகவும், இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது என்றும் தெலுங்கு இணையதளங்களில் நேற்று தீயாக தகவல் பரவி உள்ளது.

ஆனாலும் இந்த தகவலை ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் உறுதிப்படுத்தவில்லை. ராஷ்மிகா தற்போது அமிதாப்பச்சனுடன் குட்பை என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

தந்தையின் வாழ்க்கை கதையை இயக்கவுள்ள பிரபல நடிகை

தனது தந்தையின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கப் போவதாக நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தீபிகா படுகோன் கூறியதாவது:

1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று உலக நாடுகள் அனைத்தும் இந்திய விளையாட்டை பற்றி பேசும்படி செய்தது.

ஆனால், அதற்கு முன்பே உலக நாடுகள் இந்தியாவை நோக்கும்படி செய்தவர் எனது தந்தை பிரகாஷ் படுகோன். அவர் 1981-ம் ஆண்டு பேட்மின்டனில் உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.

இன்றைய காலகட்டத்தை போல வசதிகள் அப்போது எதுவும் இல்லை.

கல்யாண மண்டபங்களை பேட்மிண்டன் ஸ்டேடியம் ஆக மாற்றிக்கொண்டு என் அப்பா பயிற்சி செய்தார். அவரை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தற்போது சினிமாவில் விளையாட்டை பின்னணியாக வைத்து வரும் படங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது.

எனவே, என் தந்தையின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகள்: நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி

அண்ணன் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த போது தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் கார்த்தி.

2007ம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி வெளிவந்த 'பருத்திவீரன்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இன்றுடன் இப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. விதவிததமான கதாபாத்திரங்களில் நடித்து அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த ஒரு நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

முதல் 3 நாள் ஹவுஸ்ஃபுல்: ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த ‘வலிமை’



முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்த கதாநாயகர்களில் கார்த்தியும் இடம் பிடித்தார். அதன்பிறகு கடந்த 15 வருடங்களில் 20 படங்களில் நடித்துள்ளார்.



தற்போது 'விருமன், சர்தார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.



தன்னுடைய 15 வருடத் திரையுலகப் பயணித்திற்கு பெரிய நன்றி சொல்லி இருக்கிறார் கார்த்தி.

“பருத்திவீரன்' படம் மூலம் என்னுடைய நடிப்புப் பயணம் ஆரம்பமானது ஆசீர்வாதம் என நினைக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சார் டிசைன் செய்து கற்பித்த ஒன்று. அவருக்குத்தான் மொத்த பெருமையும் சேரும்.

அதன் பிறகு பல பாடங்கள் கற்றாலும், அவர் எனக்குக் கற்றுத் தந்தது, என்னை மூழ்க வைத்து, நான் செய்வதை ரசிக்க வைத்தது என்பதை புதையலாக நினைக்கிறேன். இந்த அற்புதமான பாதையை ஏற்படுத்தித் தந்த அமீர் சார், ஞானவேல், அண்ணா, என்னுடைய அன்பான ரசிகர்கள், மீடியா ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment