தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். 1990-ம் ஆண்டு தமிழில் என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து காவல் கீதம் மீரா, உல்லாசம், ஹவுஸ்புல், உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது 1997ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் தான்.
அதனைத் தொடர்ந்து தமிழில் தில், ஜெமினி, காசி, தூள், சாமி, அந்நியன், பிதாமகன், தெய்வ திருமகள், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லும் நடிகர் என்ற பெயர் பெற்றுள்ள விக்ரம், காசி, பிதாமகன், உள்ளிட்ட பல படங்களில் சிறந்த நடிப்பிற்காக பாராட்டையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
சமீபத்தில் இவர் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்திருந்த பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் வெளியீட்டிற்காக நடிகர் விக்ரம் பல மாநிலங்களில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டிகள் ஒன்றில் அவர் தமிழ் குறித்தும் தஞ்சை பெரிய கோவில் குறித்தும் பேசிய நிகழ்வு இணையத்தில் வைரலானது.
அதே சமயம் தற்போது இவரது பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இருமுகன் படத்திற்கான கேரளாவில் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் நான் ஒரு மலையாளி நாம் அனைவரும் மலையாளி என்று பேசியிருந்தார்.
கேரளாவில் தான் ஒரு மலையாளி என்றும், தமிழகத்தில் தமிழின் பெருமைகளை பற்றியும் பேசி வரும் விக்ரமை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல செய்து வருகின்றனர். சினிமாகாரர்களை நம்பக்கூடாது என்று கூறி வருகின்றனர். உண்மையில் கமல்ஹாசன் சொந்த ஊரான பரமக்குடியை சேர்ந்த விக்ரம், தொடக்கத்தில் தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில், சில மலையாளப் படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“