/indian-express-tamil/media/media_files/2025/10/20/shshrukh-2025-10-20-17-56-38.jpg)
சினிமா உலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்த ஒரு நடிகை திருமணமான சில நாட்களிலேயே மர்மமான முறையில் இறந்த சம்பவம் அன்றைய காலக்கட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த நடிகை இன்றும் பலரின் இதயங்களில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்
அந்த நடிகை வேறு யாரும் இல்லை திவ்ய பாரதி தான். ரசிகர்களால் இன்றும் நம்ப முடியாத ஒரு மரணம் நடிகை திவ்ய பாரதியின் மரணம் தான். ஓரிரு வருடங்களில் 10-க்கு மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தனது வசீகரமான அழகினாலும் திரை ஆளுமையாலும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தவர். அந்த காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர், தனது 19வது வயதில் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்த மர்மமான சூழ்நிலைகள் சர்ச்சையாகவே உள்ளது.
1990 ஆம் ஆண்டு, 16 வயதில், 'நிலா பெண்ணே' என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திவ்ய பாரதி திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இந்த படம் தோல்வியடைந்தாலும், அதே ஆண்டில் வெளியான தெலுங்குப் படமான 'பொபிலி ராஜா' மாபெரும் வெற்றி பெற்றதால், திவ்ய பாரதிக்கு தெலுங்கில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. தெலுங்குப் படங்களில் நடித்த பிறகு, 1992 இல் வெளியான 'விஸ்வத்மா' என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்குள் நுழைந்தார்.
1992 இல் வெளியான ஆக்ஷன்-காமெடி திரைப்படமான 'ஷோலா அவுர் ஷப்னம்' அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதே ஆண்டில் ஷாருக் கானுடன் இணைந்து நடித்த 'தீவானா' திரைப்படம் அவருக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த திவ்ய பாரதி, 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, மும்பையில் உள்ள தனது 5-வது மாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/20/divya-bharathi-2025-10-20-17-56-38.jpg)
திவ்யாவின் அகால மரணத்தைச் சுற்றி பல மர்மங்கள் நிலவுகின்றன. விபத்து நடந்த அன்று பிளாட்டில் உடன் இருந்தவர்களின் கூற்றுப்படி, சென்னையில் ஒரு படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய திவ்யா, வரவிருக்கும் 'ஆந்தோலன்' படத்திற்காக பேஷன் டிசைனர் நீதா லுல்லாவை தனது வீட்டில் சந்திக்க திட்டமிட்டிருந்தார். நீதாவும் அவரது கணவர் ஷியாமும் வந்திருந்தனர்; அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். திவ்யாவின் வீட்டுப் பணிப்பெண் அமிர்தா விருந்தினர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்தார். திவ்யா பால்கனியின் சுவரில் ஏறி அமர்ந்து திரும்பியபோது சமநிலை தவறி கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1992 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில், திவ்யா 14 இந்திப் படங்களில் நடித்தார். ஒரு புதுமுக நடிகையைப் பொறுத்தவரை இது ஒரு சாதனையாகும். உருவ ஒற்றுமை மற்றும் நடிப்பு பாணி காரணமாக திவ்யா பாரதியை அன்றைய சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவியுடன் பலரும் ஒப்பிட்டனர். பாலிவுட்டில் ஷாருக் கான் அறிமுகமான 'தீவானா' படத்தின் கதாநாயகி திவ்யா பாரதிதான். மரணத்திற்குப் பிறகு, 1993 டிசம்பரில் வெளியான 'சத்ரஞ்ச்' தான் திவ்யாவின் கடைசியாக வெளிவந்த திரைப்படம்.
திவ்யா இறந்தபோது அனில் கபூர், ரவீனா டாண்டன் நடித்த 'லாட்லா', 'தில்வாலே', அக்ஷய் குமாரின் 'மொஹ்ரா', அஜய் தேவ்கனின் 'விஜய்பாத்' உட்பட பல திரைப்படங்கள் முடிக்கப்படாமல் இருந்தன. மிகக் குறுகிய காலத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உயர்ந்த திவ்யா பாரதி தயாரிப்பாளர் சாஜித் நதியாத்வாலாவை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். 18 வயது நிறைவடைந்த உடனேயே 1992 ஆம் ஆண்டில் திவ்யா பாரதியும் சாஜித் நதியாத்வாலாவும் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்திற்குப் பிறகு திவ்யா இஸ்லாம் மதத்தைத் தழுவி தனது பெயரை 'சனா' என்று மாற்றினார். ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் ஃபரா கான் இயக்கிய 'ஓம் சாந்தி ஓம்' திரைப்படம் திவ்யாவின் கதை என்று பிற்காலத்தில் செய்திகள் வந்தன. படத்தில் திவ்யாவின் வாழ்க்கையுடன் பல ஒற்றுமைகள் காணப்பட்டதே இந்தச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள காரணம்.
'தீவானா'வில் நடிக்கும்போது திவ்யா பாரதி முன்னணி கதாநாயகியாக இருந்தார். ஷாருக் அப்போது கஷ்டப்பட்டு முன்னேறி வரும் நடிகராக இருந்தார்.  இதேபோன்ற கதைதான் 'ஓம் சாந்தி ஓம்' படத்தில் ஷாருக் - தீபிகா ஜோடியின் கதாபாத்திரங்களுக்கும் இருந்தது.
நிஜ வாழ்க்கையில் திவ்யா ஒரு தயாரிப்பாளரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார், 'ஓம் சாந்தி ஓம்' படத்தில் சாந்தி பிரியாவும் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ளவார். திவ்யா பாரதி கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்தபோது, படத்தில் சாந்தி பிரியா தீ விபத்தில் இறந்தார். திவ்யாவின் தந்தையின் பெயர் ஓம் பிரகாஷ் பாரதி, படத்தில் ஷாருக்கின் பெயர் ஓம் பிரகாஷ் மஹீஜா. திவ்யாவின் மரணத்திற்குப் பிறகு சாஜித்தும் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். 'பாகி', 'தமாஷா', 'ஹவுஸ்ஃபுல்', '2 ஸ்டேட்ஸ்', 'கிக்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் சாஜித் நதியாத்வாலா என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us
 Follow Us