/indian-express-tamil/media/media_files/2025/10/21/ajmal-ameer-2025-10-21-17-06-49.jpg)
தமிழில் பல வெற்றிப்படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்த நடிகர் அஜ்மல் அமீர் பெண் ஒருவருடன் வீடியோ காலிங்கில் பேசும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோ குறித்து அவருக்கு ஆதராவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பரவி வருகிறது.
தமிழில், 'அஞ்சாதே', 'கோ' நெற்றிக்கண், கோட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த அஜ்மல் அமீர், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில், நடிகர் அஜ்மலின் குரல் மற்றும் முகம் இருக்கிறது. இதில், ஆடியோ பதிவு மற்றும் பல ஸ்கிரீன் ஷாட்கள் ஆன்லைனில் பரவியதன் காரணமாக சர்ச்சை எழுந்துள்ளது. அந்த ஆடியோவில் ஒரு பெண்ணிடம் தவறான கருத்துக்களை தெரிவிப்பது பதிவாகியுள்ளது.
மேலும், சில சமூகவலைதள பதிவுகளில், அஜ்மலின் தனிப்பட்ட செய்திகள் என்று கூறப்படும் பல ஸ்கிரீன் ஷாட்களையும் பகிர்ந்துள்ளதால், பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக, இந்தச் சர்ச்சை விவாத மன்றங்களிலும், சினிமாப் பக்கங்களிலும் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த ஆடியோ பதிவின் நம்பகத்தன்மை குறித்து விவாதித்து வருகின்றனர். சிலர் அது உண்மையானது என்று வாதிட, வேறு சிலர் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாடு இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
பெருகிவரும் இந்த யூகங்களுக்கு மத்தியில், அஜ்மல் தனது இன்ஸ்டாகிராம் வீடியோ செய்தி மூலம் நேரடியாக இந்த சர்ச்சைக்கு பதிலளித்தார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அஜ்மல், அந்த ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது அல்ல என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். "எந்தவொரு புனையப்பட்ட கதையோ, ஏ.ஐ குரல் போலியோ, அல்லது சாமர்த்தியமான எடிட்டிங்கோ என்னையோ, எனது வாழ்க்கையையோ அழிக்க முடியாது," என்று அவர் கூறினார்.
மேலும், பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியான உழைப்பின் மூலம் பல்வேறு திரைப்படத் துறைகளில் தான் தனது நற்பெயரைக் பெற்றிருக்கிறேன். சமூகவலைதளங்களில் ஒரு பழைய ரசிகர்களால் உருவாக்கப்பட்ட கணக்கு நீண்ட காலமாகத் தனது அதிகாரபூர்வப் பக்கமாகச் செயல்பட்டதாகவும் அவர் விளக்கினார். "இன்று முதல், நான் எனது அனைத்து சமூக ஊடகச் செயல்பாடுகளையும் தனிப்பட்ட முறையில் கையாள்வேன்," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இந்தச் சர்ச்சையின் உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை ஒப்புக்கொண்ட அஜ்மல், இந்தச் சோதனையான காலத்தில் தனக்கு ஆதரவாக நின்ற மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். "நீங்கள் செய்த அழைப்புகள் மற்றும் அனுப்பிய செய்திகளிலிருந்து நான் பெற்ற பலம்தான், இன்று உங்கள் முன் நிற்க எனக்குத் துணிச்சலைக் கொடுத்தது. நீங்களே எனது உந்துசக்தி," என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். சுவாரஸ்யமாக, தன்னைக் கடுமையாக விமர்சித்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தனது வீடியோவின் முடிவில், தான் தற்போது வேலை நிமித்தமாக துபாயில் இருப்பதாகவும், தான் நலமாக இருப்பதாகவும் ரசிகர்களுக்கு உறுதியளித்தார். இந்த நேரத்தில் தன்னை நம்பிய மற்றும் ஆதரித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து வீடியோவை நிறைவு செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us