தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்கள் என்று சொன்னால் கண்டிப்பாக கமல்ஹாசன் – ரஜினிகாந்துக்கு முக்கிய இடம் உண்டு. கமல்ஹாசன் டாப் ஹீரோவாக இருந்த 70-களில் இடையில் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ரஜினிகாந்த்.1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ரஜினிகாந்த்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், பல போராட்டங்களுக்கு பிறகு நாயகனாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் கமல்ஹாசன். ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இதில் பெரும்பாலான படங்களை இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கி இருந்தார்.
ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியாக நடிக்க தொடங்கிய நிலையில், கமல்ஹாசன் தனது பாணியிலும், ரஜினிகாந்த் தனது ஸ்டைலுக்கே உரிய பாணியிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். தற்போது ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளனர். அதேபோல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தங்களுக்கே உரிய பாணியில் நட்பு பாராட்டி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பிறகு இந்த தகவல் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாக வில்லை. இதனிடையே கமல்ஹாசனை பார்த்து நடிப்பை கற்றுக்கொள் என்று தனது குரு கே.பாலச்சந்தர் கூறியதாக கமல்ஹாசனின் 50-வது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், நான் சினிமாத்துறைக்கு வரும்போது கமல்ஹாசன் முன்னணி நட்சத்திரம்.அவருடன் இணைந்து பல படங்களில் நான் நடித்துள்ளேன். அவர் நினைத்திருந்தால் அவர் படத்தில் என்னை நடிக்க வைக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். அவர் சொன்னால் கண்டிப்பாக நடந்திருக்கும். ஏனென்றால் அப்போது அவர் முன்னணி நட்சத்திரம்.
ஆனால் அவர் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அவரே பலமுறை எனக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். ஒரு கட்டத்தில், நாம் இருவரும் தனியாக படங்களில் நடிப்போம் அப்போது தான் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று கமல்ஹாசன் என்னிடம் கூறினார். அதன்பிறகு நாங்கள் இருவரும் தனித்தனியாக பயணிக்க தொடங்கினோம். மற்ற மொழி நடிகர்களுக்கு என்னை பார்த்து ஆச்சரியம்.
தமிழகத்தில் கமல்ஹாசன் என்ற ஒரு உலக நாயகன் இருக்கும்போது இவரும் அவருக்கு நிகராக வந்துவிட்டாரே எப்படி என்று. இது எல்லாமே அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது தான். அவர்கள் படம் தொடங்கியபோது ஒருநாள் நான் வெளியில் அமர்ந்திருந்தேன். அப்போது கே.பாலச்சந்தர் சார் வநதாங்க. என்னை பார்த்துவிட்டு கோபமாக உள்ளே சென்றார்.
அதன்பிறகு தனது உதவியாளரை விட்டு அவனை வரச்சொல் என்னை அழைத்தார். நான் அங்கு போனபோது என்ன தம் அடிக்க வந்தியா என்று கேட்டார். அதன்பிறகு அங்கு கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கிறான் அவனை பார்த்து கற்று்ககொள் அப்போதூன் உனக்கு நடிப்பு வரும் என்று சொன்னார். அதன்பிறகு கமல்ஹாசன் ஷூட்டிங் எப்போது நடந்தாலும் நான் வெளியில் செல்வதே இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil