scorecardresearch

வெளிநாட்டில் மகன்… பரிதவிக்கும் மனைவி : மனோபாலா மரணம் குறித்து பிரபல நடிகர் உருக்கம்

நடிகர் என்றால் நடிகருக்காவும், உதவி இயக்குனர் என்றால் அவர்களுக்காக பயனுள்ள விஷயங்களை சொல்வார்.

Manobala Thambi ramaiah
தம்பி ராமையா – மனோபாலா

தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமான மனோபாலா புதிய வார்ப்புகள் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருப்பார். தொடர்ந்து 1982-ம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மனோபாலா, விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்கயை இயக்கியுள்ளார்.

நடிகராகவும் காமெடி குணச்சித்திரம் என பல கேரக்டர்களில் தனது திறமையை நிரூபித்துள்ள மனோபாலா கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைபாடு மற்றும் கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சென்னை வடபழனியில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மனோபாலா குறித்து நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா கூறுகையில், நடிகர் என்றால் நடிகருக்காவும், உதவி இயக்குனர் என்றால் அவர்களுக்காக பயனுள்ள விஷயங்களை சொல்வார். அவரோடு யார் பயணித்தாலும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். அவருக்கு தெரியாத விஷயங்களை யாரும் அவரிடம் பேசிட முடியாது. மணிரத்னம் கமல் உள்ளிட்ட பல ஜாம்பவான்களுடன் பழகி இருக்கிறார். யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டார்.

உறவு சார்ந்த விஷயங்கள், உலகம் சார்ந்த விஷயங்கள் சமூக அக்கறை கொண்ட அனைத்து விஷயங்களையும் தொகுத்து அதில் அனைத்திலும் சாதனை படைத்தவர் மனோபாலா. சின்னத்திரையிலும் தனது திறமையை நிரூபித்தவர். உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். அவருக்கு ஒரே ஒரு பையன் தான். அவர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

ஏன் சார் ஓய்வு எடுக்கலாமே என்று கேட்டபோது இல்லை ராமையா உழைக்க வேண்டும். உழைத்து 10 பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். அதில் இருந்து பின்வாங்க கூடாது. நண்பனாக ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். ஒரு பையன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். கடவுன் அவருக்கு குறை வைக்கவில்லை.

மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு மனோபாலாவும் அவரது மனைவியும் தோழன் தோழியாக வாழக்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கும்போது அந்த கணவன் திடீரென காணாமல் போவது ஒரு தாயின் தவிப்புதான் என் கண் முன் தெரிகிறது. கலையுலகம் இந்த இழப்புக்கு கண்ணீர் சிந்துவது கடமை. கடமை முடிந்தவுடன் அது போய்விடும். ஆனால் தாயின் தவிப்புக்கு இறைவன் மன அமைதி கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor thambi ramaiah say about director manobala