தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர். சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி என்ற படத்தில் நாயகியாக நடித்து வரலாற்றில் இடம் பிடித்தவர் நடிகை பி.எஸ்.சரோஜா.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை பூர்வீகமான கொண்ட பி.எஸ்.சரோஜா. கடந்த 1929-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவர் சிறுமியாக இருந்தபோதே அவது குடும்பம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை ராயப்பேட்டைக்கு குடிபெயர்ந்தது. வயலின் வித்வான் அப்பாவும், பாடகி அம்மாவும் இணைந்து மகளுக்கு பல திறமைகளை வளர்த்துள்ளனர்.
இதில் அம்மாவிடம் பாடல் கற்றுக்கொண்ட பி.எஸ்.சரோஜா சிறுவயதிலேயே தெலுங்கு கீர்த்தனைகளை பாடி அசத்தியுள்ளார். சிறுவயதில் சர்க்கஸ் மீது இருந்த ஆர்வத்தினால் பள்ளிக்கு செல்லாமல் பள்ளியின் அருகில் தமிழ்நாடு சர்க்கஸ் முகாம் பக்கமே தனது கவனத்தை திருப்பிய இவருக்கு அந்த சர்க்கஸின் பயிற்சியாளர் சர்க்கஸ் பயிற்சி கொடுத்துள்ளார்.
நாளடைவில் சர்க்கஸ் கம்பெனி மூடப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் உதவியுடன் பி.எஸ்.சரோஜா ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். தொடர்ந்து 1942-ம் ஆண்டு வெளியான மதனகாமராஜன் என்ற படத்தில் நடன கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய பி.எஸ்.சரோஜா தொடர்ந்து மங்கம்மா சபதம், பர்மா ராணி உள்ளிட்ட சில படங்களில் நடனமாடியுள்ளார்.
தொடர்ந்து 1946-ம் ஆண்டு பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராமச்சந்திரன், டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடிப்பில் வெளியான விகடயோகி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தேவ மனோகரி, கீதாஞ்சலி, பாரிஜாதம், பிச்சைக்காரி, வாழ பிறந்தவள் என பல படங்களில் நடித்த பி.எஸ்.சரோஜாவுக்கு 1954-ம் ஆண்டு வெளியான கூண்டுக்கிளி படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

டி.ஆர்.ராமன்னா இயக்கிய இந்த படத்தை அவரும் அவரது சகோதரியும் நடிகையுமாக டி.ஆர்.ராஜகுமாரியும் இணைந்து தயாரித்திருந்தனர். வித்தகன் கதை எழுதிய இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய படங்களில் ஒன்றாகவும், எம்.ஜி.ஆர். சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
தங்கராஜ் (எம்.ஜி.ஆர்) ஜீவா (சிவாஜி) என்ற இரு நண்பர்கள் உள்ளனர். இதில் தங்கராஜ் மங்களா (பி.எஸ்.சரோஜா) என்ற பெண்னை திருமணம் செய்துகொள்கிறார். அதே சமயம் ஜீவா செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டு தங்கராஜ் சிறைக்கு சென்றுவிடுகிறார். இதனால் வாழ வழியில்லாமல் தவிக்கும் மங்களாவை அடைய வேண்டும் என்பதற்காக ஜீவா அவளுக்கு உதவ முயற்சிக்கிறார்.
ஆனால் உதவியை ஏற்க மறுத்த மங்களாவை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுகிறார் ஜீவா. ஆனாலும் மறுக்கும் மங்களா ஒரு கட்டத்தில் ஜீவாவின் ஆசைக்கு உடன்பட, ஜீவா மங்களாவை நெருங்கும்போது திடீரென மின்னல் தாக்கி கண்பார்வையை இழக்கிறார். தொடர்ந்து சிறையில் இருந்து வரும் தங்கராஜ் தனது மனைவியை பாதுகாத்துக்கொள்கிறார். இதுதான் கூண்டுக்கிளி படத்தின் கதை.
இந்த படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர். சிவாஜி இருவரும் பல படங்களில் தனித்தனியாக நடித்திருந்தாரும், அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதலும் கடைசியுமாக படம் கூண்டுக்கிளிதான். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து நடித்து வரலாற்றில் இடம்பிடித்த நடிகை பி.எஸ்.சரோஜாவுக்கு இன்று பிறந்த நாள்.
கூண்டுக்கிளி படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆருடன் இணைந்து புதுமை பித்தன், என்ற படத்தில் நடித்திருந்த பி.எஸ்.சரோஜா, தமிழில் கடைசியாக 1964-ம் ஆண்டு வெளியான அருணகிரிநாதர் என்ற படத்தில் நடித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“