தனது அப்பா புகழ்பெற்ற இயக்குனராக இருந்தாலும், ஒளிப்பதிவில் இருந்த ஆர்வத்தின் காரணமாக உதவி ஒளிப்பதிவாரளாக மாறிய மகள், ஆசிய சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் யார் தெரியுமா?
நாடகங்கள் தோன்றிய காலத்தில் பெண்களுக்கு அதில் இடம் இருக்காது. ஆண்களே பெண் வேடம் போட்டு நடிப்பார்கள். அதற்கு ஸ்ரீபாத் என்று பெயர். சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கூட, நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்துள்ளனர். அதன்பிறகு சினிமா உருவானபோது, பெண்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்களும் நடிக்க தொடங்கினார்கள். நடிக்க மட்டும் அல்லாமல் நடனத்திலும் பெண்கள் காலூன்ற தொடங்கிய பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்தது,
காலங்கள் செல்ல, செல்ல, நடிப்பு, இயக்கம், தாயரிப்பு என பெண்கள் ஒவ்வொரு படியாக தங்கள் இடத்தை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு சென்றபோதும், சினிமாவில் தொழில்நுட்பம் தொடர்பான பணிகளில், பெண்கள் ஆர்வம் காட்டவில்லை. ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் ஆண்களே அதிகம் பணியாற்றி வந்த காலக்கட்டத்தில், ஒரு பெண் ஒளிப்பதிவாளருக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ்.
தமிழ் சினிமாவில் ஏராளமான புராண படங்களை இயக்கியவர் தான் பி.ஆர்.பந்தலு, இயக்குனர், தயாரிப்பாளர், நாடக நடிகர் என பன்முற திறமையுடன் வலம் வந்த இவர், சிவாஜிக்கு கர்ணன், எம்.ஜி.ஆருக்கு ஆயிரத்தில் ஒருவன் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார், இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவரது மகள் தான் பி.ஆர்.விஜயலட்சுமி. அப்பா எம்.ஜி.ஆர் சிவாஜி என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனராக இருந்தாலும், மகளுக்கு ஒளிப்பதிவில் தான் ஆர்வம்.
திரைப்படத்துறையில் நுழையும் முன்பு, இன்டீரியர் டிசைன் வேலையில் இருந்த பி.ஆர்.விஜயலட்சுமி, மலையாளம் மற்றும் தமிழில் பெல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த, அசோக்குமாரிடம் உதவியாளராக இணைந்துள்ளார். 1980-ம் ஆண்டு வெளியான பாலுமகேந்திராவின் நெஞ்சத்தை கிள்ளாதே படம் தான் பி.ஆர்,விஜயலட்சுமி உதவி ஒளிப்பதிவராளராக பணியாற்றிய முதல் படம். இந்த படம் பெரிய வெற்றியை பெற்று இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது.
திரையரங்குகளில் ஒரு வருடம் ஓடிய இந்த படத்திற்கு இந்திய அரசின் தேசிய விருது மற்றும் தமிழக அரசின் மாநில விருதும் கிடைத்தது. அடுத்து 3 வருடங்களில், அசோக்குமாருக்கு உதவியாளராக 30 படங்களில் பணியாற்றிய பி.ஆர்.விஜயலட்சுமி, மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை, மனோபாலா இயக்கத்தில் மோகன் நடித்த பிள்ளை நிலா ஆகிய படங்களுக்கு, அசோக்குமாருக்கு இணை ஒளிப்பதிவாளராக மாறினார். பிள்ளை நிலா படம் தான் இவர் உதவியாளராக பணியாற்றய கடைசி படம்.
அதன்பிறகு, 1985-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சின்ன வீடு படத்தின் மூலம் பி.ஆர்.விஜயலட்சுமி சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இவர் தான் ஆசியாவில் முதல் பெண் ஒளிப்பதிவாளர். சின்ன வீடு படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து, ஜி.எம்.குமார் இயக்கத்தில் அறுவடை நாள், புதுமை இயக்குனர் சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில், இனிய உறவு பிறந்தது, விஜயகாந்த் நடிப்பில் சிறை பறவை, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடைசியாக 1995-ம் ஆண்டு பாட்டு பாடவா என்ற படத்தில் ஒளிப்பதிவு செய்த, பி.ஆர்.விஜயலட்சுமி, சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான மலையாள படமான டாடி படத்திற்கு கதை எழுதியுள்ளார். பாட்டு பாடவா என்ற படத்தையும் இயக்கியுள்ள இவர், கடைசியாக 2018-ம் ஆண்டு டவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அபி அண்ட் அனு என்ற படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கியிருந்தார். ஆசிய சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் தமிழ் படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.