நடிகரும் மெமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த குணா பல மேடை நிகழ்ச்சிகளில் மெமிக்ரி செய்து மக்களை மகிழ்வித்துள்ளார். அதன்பிறகு 90-களில் வெளியான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை குணா அந்த நிகழ்ச்சியின் டை்டில் வின்னராக வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில் மதுரை முத்து மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து சென்னை காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குணாவுக்கு அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாடு நிகழ்ச்சிகள் கிடைத்ததால் அடுத்து அவர் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே சிறுநீரக கோளாறு காரணமாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை குணா சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.
அவருக்கு நடிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஆதவன் கூறுகையில்,
நகைச்சுவையாளர்கள் மரணம் என்பது மனதை மிகவும் புண்படுத்துகிறது. கோவை குணா மக்களை மகிழ்விப்பதற்காக யோசித்துக்கொண்டிருப்பார். அவர் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமாக வளர்ந்திருக்கலாம். ஆனால் நிறைய கஷ்டங்கள், நிறைய பிரச்னைகள், கோவை குணா ஒரு சிறந்த மெமிக்ரி ஆர்டிஸ்ட். அவர் கலக்கப்போவது யாரு பண்ணும்போதேல்லாம் நாங்கள் டிவி பார்த்துக்கொண்டிருந்த காலங்கள்.
அப்போது அவரை பற்றி நாங்கள் நிறை தேடினோம். ஆனாலும் நாங்கள் நிகழ்ச்சி பண்ணும்போதுதான் அவரை பற்றி தெரிந்துகொண்டோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு முன்பே அவர் கோவையில் பிரபலமான மேடை கலைஞராக இருந்துள்ளார். நகைச்சுவையாளர்களுக்கு மன அழுத்தம் இருக்காது என்று சொல்வார்கள். ஆனால் சிரித்தால் மன அழுத்தம் இருக்காது என்று தெரியும் ஆனால் சிரிக்க வைப்பவர்களுக்கு மன அழுத்தம் இருக்கும் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
இந்த மாதிரி கலைஞர்களுக்கு முன்கூட்டியே சிகிச்சை அளித்திருந்தால் இன்னும் கொஞ்சநாள் இருந்திருப்பார்கள் என்பது தான் எங்கள் நம்பிக்கை. குடிப்பழக்கத்திற்கு நிறைய பேர் அடிமையாகிவிடுகிறார்கள். இந்த மாதிரி கலைஞர்கள் தினமும் வெளியில் செல்வதால் குடிப்பழக்கம் அவர்களுக்கு உரு இன்றியமையாததாக மாறிவிடுகிறது. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டுக்கு வந்துவிடுவதால் வாரம் ஒருமுறை அவர்களுக்கு இந்த பழக்கம் உள்ளது.
அதே சமயம் கலைஞர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சிக்காக செல்லும்போது குடும்பத்தை விட்டு இருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு நேரம் கிடைப்பதால் இந்த மாதிரி அடிமையாகிவிடுகிறார்கள். ஒருவேளை குடும்பத்தினருடன் இருக்கும் சூழல் இருந்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம். ஆனால் மதுவுக்கு அடிமையாகாமல் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. நகைச்சுவையுடன் பாடிலாங்வேஜ் எப்படி செய்வது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டது கோவை குணாவிடம் இருந்துதான் என்று கூறியுள்ளார்.
ஆனால் கோவை குணாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக ஆதவன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரை முத்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
நகைச்சுவை கலைஞர்கள் தங்களது நிறைவு வாழ்க்கையில் பலரை சிரிக்க வைத்து பழகியவர்கள். அவர்களை தயவு செய்து யாரும் குறை சொல்வதோ தவறான வார்த்தைகள் சொல்வதோ பெரிய சாபக்கேடு. தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்கள். நான் யாருக்காவும் இப்படி உட்கார்ந்து பேசமாட்டேன். ஆனால் இவரைப்பற்றி இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது. இவரைப்பற்றி சொலல் வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு பேசுகிறேன்.
தற்போது வந்துகொண்டிருக்கும் நகைச்சுவை கலைஞர்கள் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அவரைப்போல் எளிமையாக இருக்க வேண்டும். மக்களை சிரிக்க வைத்த கலைஞர்கள் ஆத்மா சாந்தியடைய நாம் பேச வேண்டுமே தவிர சங்கடப்படுத்தி பார்க்க வேண்டாம். இன்றைக்கு பலரும் அவரவர் பாணியில் பெரிய ஆளாக இருந்தாலும் ஆரம்பகட்டத்தில் தள்ளாடும்போது தாங்கி பிடித்தவர் கோவை குணா. நல்ல திறமைசாளியிடம் நல்ல குணங்களை பார்த்தது அவரிடம் தான். மயில்சாமி மாதிரி கோவை குணா நல்லது பண்றவங்க எல்லாரும் சென்றுவிட்டார்கள் இருவருக்கும் 57 வயதுதான்.
அவர்களின் சேவை அது மக்கள் சேவையாக இருந்தாலும் மக்களை மகிழ்விக்கக்கூடிய சேவையாக இருந்தாலும் இன்னும் 20-25 வருடங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் விரைவாக சென்றுவிட்டது மனதிற்கு சங்கடமாக உள்ளது. இப்போது பலரும் பேட்டி அளிக்கும்போது தறவான கருத்துக்களை சொல்கிறார்கள். அவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்று தனிப்பட்ட விஷயங்களை சொல்கிறார்கள். அவருக்கு சுகர் இருந்தது.
ஆனால் இப்போது கூட ஒருவர் பேசியிருக்கிறார். அவருக்கு அவருடன் அனுபவமே கிடையாது. ஆனால் அவர் மது பழக்கத்திற்கு அடிடையாகிவிட்டார் என்று சொல்கிறார் இது தவறான விஷயம். எல்லாரையும் சிரிக்க வைத்த கலைஞனை நாம் மனவேதனை படுத்தி பார்க்க கூடாது. ஒரு பிறப்பு தாயை அழ வைக்க வேண்டும். ஒரு இறப்பு ஊரையே அழவைக்க வேண்டும். அப்படி எல்லாரையும் சிரிக்க வைத்த மனிதன் இப்படி போய்விட்டாரே என்று வருத்தப்படும்போது சிலர் அறிவுஜீவிகள் போல் தவறான தகவல்களை சொல்லக்கூடாது.
மயில்சாமி சாருக்கும் அப்படித்தான் சொன்னார்கள். அப்படியெல்லாம் இருந்துவிட முடியாது அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். கலைஞர்களாக இருந்துகொண்ட மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர இறந்த பிறகு தவறான விஷயங்களை சொல்லக்கூடாது. ரொம்ப சாதாரணமானவர் தன்னை செலிபிரிட்டி என்று எப்போதும் நினைக்காதவர். ஆனால் பெரிய திறமைசாலி.
அனைவருக்கும் அவர் ஒரு முன்மாதிரி. ஒரு ஆளை எப்படி இமிடேட் செய்வது என்பதை அவரிடம் கற்றுக்கொள்ளலாம். அந்த திறமை இன்று கொஞ்சகாலம் இருக்க வேண்டும் என்று ஆசை ஆனால் அதற்குள் போய்விட்டார். 2010-லே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டார். சினிமா வாய்ப்புகள் வந்தது. லிங்குசாமி, சரண் போன்ற இயக்குனர்கள் எல்லாம் அவருக்கு ரசிகர்கள். அரியதான குரல்களை பேசி மக்களை மகிழ்வித்தவர். இப்படிப்பட்ட ஒரு கலைஞன் இல்லாதது மனவேதனை.
சலிப்பு தட்டாத ஒரு கலைஞன். ஒரே நேரத்தில் 10 பேரின் குரலை பேசுவார் அவசர்களின் பாடிலாங்வேஜை கொண்டு வருவார். எத்தனை முறை பார்த்தாலும் நம்மை வியக்க வைத்துவிடுவார். ஆனால் அவரை பற்றி முழுமையாக தெரியாமல் நண்பர்கள் தவறாக தகவல்களை பகிர வேண்டாம். தேவையில்லாத விஷயங்களை சொல்லக்கூடாது. மக்களை மகிழ்விப்பதில் அவர் என்ன செய்தார் என்பதை தான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/