ரன் படம் வெற்றிக்கு பிறகு என்னை அழைத்த ரஜினிகாந்த் தனக்கு கதை இருக்கிறதா என்று கேட்டார் என இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி கூறியுள்ளார்.
2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து மாதவன் மீரா ஜாஸ்மின் நடிப்பில் ரன் படத்தை இயக்கிய லிங்குசாமி இந்த படத்தையும் வெற்றிப்படமாக கொடுத்தார்.
சாக்லேட் பாயாக நடித்து வந்த மாதவனை ரன் படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய பெருமை லிங்குசாமிக்கு உண்டு. இந்த படத்தை பார்த்து திரையுலகை சேர்ந்த பலரும் பாராட்டிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் லிங்கு சாமியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அதிலும் சப்வே சண்டைக்காட்சி குறித்து பேசிய ரஜினிகாந்த் ஓடிபோய் ஷட்டரை சாத்தும் காட்சி சூப்பர் என்று பாராட்டியதாக லிங்குசாமி கூறியிருந்தார்.
சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லிங்குசாமி கூறுகையில்,
நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். அவரது பாபா படம் வெளியாகி சரியாக போகாத நிலையில், அடுத்து வந்த ரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 100-வது நாளிலும் அந்த படத்திற்கு கூட்டம் குறையவில்லை. அப்போது பெங்களூருவில் இருந்த ரஜினிகாந்த் தமிழகத்தில் தனது நெருங்கிய வட்டங்களுக்கு போன் செய்து என்ன படம் ரிலீஸ் என்று கேட்க ரன் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்து சில நாட்களில் பேசும்போது ரன் படம் நன்றாக இருப்பதாக கூறியிருக்கிறார். அடுத்து சில நாட்களில் மீண்டும் ரன் என்று சொன்னவுடன் அவர் என்னை நேரில் அழைத்து பாராட்டினார். ரன் படம் சூப்பரா இருக்கும் அதுவும் ஓடிபோய் ஷட்டரை சாத்தும் அந்த சப்வே சண்டைகாட்சி குறித்து பாராட்டினார். அதன்பிறகு எனக்கு கதை இருக்கிறதா என்று கேட்டார். ஆனால் அப்போது அவருக்கான கதை என்னிடம் இல்லை. அவருக்காக நான் என்ன கதை எழுதினாலும் என்னால் அந்த கதையில் திருப்தியாடைய முடியவில்லை.
அதன்பிறகு அடுத்து என்ன படம் பண்ண போறீங்க என்று கேட்டார். ஒரு அரசியல் தொடர்பான படம் என்று சொல்லி ஜி படத்தின் கதையை சொன்னேன். இந்த கதையில் நான் நடிச்சா எப்படி இருக்கும் என்று கேட்டார். இதில் ஹீரோ கல்லூரி மாணவர் எப்படி சார் என்று கேட்டேன். அதற்கு கல்லூரி கம்பெனியா மாத்திடலாம். அங்க நான் புதுசா என்ட்ரி ஆகி தேர்தல் நடக்குது. அதில் வெற்றி பெற்று அதே மாதிரி அரசியலில் ஈடுபடுகிறேன் என்று வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார்
ஆனால் வேண்டாம் சார் அது முடியாது. அது நல்லா இருக்காது சார். உங்களின் அடுத்த படம் முத்து அண்ணாமலை மாதிரியான அரசியல் இல்லாத படமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது என்று அவரிடம் சொன்னேன். அதன்பிறகு அவர் மங்கம்மா என்று ஒரு கதை சொன்னார். மன்னன் ஸ்டைலில். ஆனாலும் அதுவும் அரசியல் சாயல் இருந்தால் வேண்டாம் என்று சொல்லிவட்டேன் என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்ப ஆசைப்பட்டு இயக்குனர் லிங்குசாமி மறுத்த ஜி படம் பின்னாளில் அஜித் த்ரிஷா நடிப்பில் வெளியாகி பெரிய தோல்விப்படமாக அமைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“