கதை சொல்ல சென்றபோது சிவாஜி தன்தை திட்டி வெளியில் போ என்று கூறியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று இயக்குனர் பி.வாசு கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிக்கு சந்திரமுகி, விஜயகாந்த்துக்கு சேதுபதி ஐபிஎஸ், சத்யராஜூக்கு வால்டர் வெற்றி வேல், பிரபுவுக்கு சின்னத்தம்பி, என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பி.வாசு, 1981-ம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் இயக்குனர் சந்தானபாரதியுடன் இரட்டை இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து, மதுமலர், மெல்ல பேசுங்கள், நீதியின் நிழல் உள்ளிட்ட படங்களை இணைந்து இயக்கிய இவர்கள், 1985-ம் ஆண்டு வெளியான நீதியின் நிழல் படத்திற்கு பிறகு பிரிந்தனர். அதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களை இயக்க தொடங்கிய பி.வாசு, கன்னடத்தில் விஷ்னுவர்த்தனுடன் கதாநாயகா, ராஜ்குமாருடன் குரி ஆகிய படங்களை இயக்கி அவர்களின் சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக கொடுத்தார்.
இவர்கள் இருவரும் மறைந்துவிட்டாலும், அவர்களின் திரை வாழ்வில் பெரிய வெற்றிப்படங்களை எடுத்துக்கொண்டால் இந்த படங்கள் இந்த பட்டியலில் நிச்சயமாக இடம்பெறும். தனி இயக்குனராக ஆன பின் தொடர்ந்து கன்னட படங்களை இயக்கி வந்த பி.வாசு, 1988-ம் ஆண்டு வெளியான என் தங்கச்சி படிச்சவ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இந்த படத்தில் பிரபு நாயகனாக நடித்தார்.

அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பி.வாசு கடைசியாக தமிழில், லாரன்ஸ் நடிப்பில் சிவலிங்கா என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படத்தை இயக்கி வருகிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் 2000-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான வல்லரசு படம் தொடங்கி பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சந்தான பாரதியுடன் தான் இணை இயக்குனராக இருந்தபோது, சிவாஜியுடன் நடந்த ஒரு சந்திப்பு குறித்து பி.வாசு கூறியுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஒருமுறை ஒரு தயாரிப்பாளர் என்னிடம் சிவாஜி சாரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும். படத்தின் பெயர் சரித்திரம். என்று சொன்னார். அப்போது பாரதி அப்ரண்டீஸ் அப்ரேஷனுக்கு போய்விட்டதால் நான் சிவாஜி சாரிடம் சென்று கதை சொல்ல போனேன். அவர் மதியம் வா என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு மீண்டும் மதியம் சென்றேன்.
அப்போது அவர் என்னை பார்த்து சாப்டியா என்று கேட்டார். நான் இன்னுமு் இல்லை. என்றதும் உன்னை யார் சாப்பிடாம வர சொன்னா? நீ சாப்பிடாமா நான் எப்படி சாப்பிடுறது என்று சொன்னார். நீங்க சாப்பிடுங்க நான் வெயிட் பண்றேன் என்று சொன்னேன். உனக்காக நான் சீக்கிரம் சாப்பிடுகிறேன் என்று சொல்லி வேகமாக சாப்பிட்டுவிட்டு வந்தார்.
வா என்று அழைத்து உட்கார வைத்து விட்டு ஃப்ரஷா ஆகிட்டு டிவி போட்டார். அதில் கிரிக்கெட் மேட்ச் போய்க்கிட்டு இருக்கு. நான் கதை சொல்ல ஆரம்பித்த உடனே நிறுத்திட்டேன். அதை பார்த்து அவர் என்ன என்று கேட்டார். நான் அதை ஆஃப் பண்ணுங்க என்று சொன்னேன். அதற்கு ஏன் என்று கேட்டார். நான் கதை சொல்லும்போது உங்கள் கவனம் அதில தான் இருக்கும் அப்புறம் நான் சொல்றத நீங்க எப்படி கேப்பீங்க என்று சொன்னேன்.

உடனே கோபப்பட்ட சிவாஜி அடிச்… யார் கிட்ட சொல்ல கவனம் இருக்காதுனு எனக்கா… டேய் நான் இப்படி இருப்பேன் டைலாக் படிப்பாங்க மண்டையில அதான் ஓடிக்கிட்டு இருக்கும். எதையுமே பார்க்க மாட்டேன்டா என் நினைப்பு ஒன்னே ஒன்னுதான் நடிப்பு அந்த கேரக்டர் உனக்கு என்ன தெரியும்னு கவனம் பற்றி பேசுற போடா போ உன் கதையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். கெட் அவுட் என்று சொல்லிவிட்டார்.
நான் வெளியில் வந்துவிட்டேன். என்னடா இப்படி ஒரு தப்பு பண்ணிட்டமே என்று எனக்கே வருத்தமா இருந்துச்சு. மறுநாள் என்னையும் பாரதியையும் சிவாஜி சார் வீட்டுக்கு வர சொல்ராங்க நாங்க ரெண்டுபேரும் போனோம். அப்போது சிவாஜி சாரின் தம்பி என்னிடம் விசாரித்தார். நான் நடந்தை சொன்னவுடன் அவர் சிரித்தார். அதன்பிறகு அண்ணன் என்ன சொன்னார் தெரியுமா. அந்த பையன கூப்பிடு பயங்கர கட்ஸ் இருக்கு பெரிய ஆளா வருவான். சிவாஜி புரொடக்ஷன்ஸ்ல கதை சொல்ல சொல்லுங்க என்று சொன்னதாக கூறினார்கள்.
எனக்கு அப்படியே ஷாக் ஆகிட்டு. சிவாஜி சார் நடிப்பில் நானும் பாரதியும் டைரக்ஷன் பண்ணப்போறோம் என்று நினைத்து பார்க்கவே அவ்ளே சந்தோஷமா இருந்துச்சு அப்படி உருவான படம்தான் நீதியின் நிழல் என்று பி.வாசு கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நீதியின் நிழல் படத்திற்கு பிறகு பாரதி வாசு இருவரும் தனியாக படம் இயக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“