/indian-express-tamil/media/media_files/2025/05/24/V8Bd3VPZViQd2JvN89V9.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞர்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட இவர், 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்லூரி மாணவர் கேரக்டரில் கேமியோவாக நடித்திருப்பார்.
இந்த படத்தை இயக்கியது இவர் தான் என்றும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இயக்குனர் பெயர் மாற்றப்பட்டது என்றும், இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து, வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கேரக்டரில் நடித்து வந்த டி.ராஜேந்தர், 1983-ம் ஆண்டு தாய் தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். இந்த படத்தில் அவர் நடித்த ஜெயின் ஜெயபால் கேரக்டர் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து தான் தயாரித்து இயக்கிய அனைத்து படங்களிலும் தானே ஹீரோவாக நடித்துள்ள டி.ராஜேந்தர், கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், என பல பணிகளை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி.ராஜேந்தர், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார். 1987-ம் ஆண்டு வெளியான ஒரு தாயின் சபதம் படம் டி.ராஜேந்தர் ரீமேக் செய்து இயக்கிய முதலும் கடைசியுமான படம்.
இந்தியில், அனில் கபூர் நடிப்பில் 1985-ம் ஆண்டு வெளியான மெரி ஜங் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் ஒரு தாயின் சபதம். சிறுவயதில் பொய்யான குற்றச்சாட்டுக்கான மரணதண்டனை பெற்ற, அப்பா, திடீரென காணாமல் போன இறந்துவிட்டதாக நினைக்கும் ராஜ்குமார் என்ற சிறுவன் தனது தங்கையுடன் அநாதையாக நிற்க, அவர்களை ஒரு வழக்கறிஞர் தத்தெடுத்து வளர்க்கிறார். அதன்பிறகு வளர்ந்து வழக்கறிஞராக மாறும் ராஜ்குமார் தனது தந்தை மரணம் மற்றும் தாயை பற்றி தெரிந்துகொண்டு, சட்டத்தின்படி எப்படி பழிவாங்கினார் என்பது தான் இந்த படத்தின் கதை.
ராஜ்குமார் என்ற வழக்கறிஞர் கேரக்டரில் டி.ராஜேந்தர், அவரது அம்மாவாக ஸ்ரீவித்யா நடித்திருந்த இந்த படத்தில், ஜெய்சங்கர், எஸ்.எஸ்.சந்திரன், நிழல்கள்ரவி, சாருஹாசன், பப்ளு ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகர் சிம்பு மற்றும் அவரது சகோதரி இலக்கியா ஆகியோர் இந்த படத்தில் 2 பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர். படத்தை தயாரித்து இயக்கிய டி.ஆர், இசை மற்றும் ஒளிப்பதிவு பணிகளையும் செய்துள்ளார்.
இந்த படத்தில் இடம் பெற்ற எனது காணம், சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது, ராக்கோழி கூவையில, அட பொன்னான மனசே உள்ளிட்ட பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் பேவரெட் பாடல்களாக ஒளித்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் டி.ராஜேந்தரே எழுதியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.