அறிமுக இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கம் தயாரிப்பு மற்றும் நடிப்பில் கடந்த ஜூன் 23-ந் தேதி வெளியான படம் நாயாடி. நாயாடி என்ற சமூக மக்களின் வாழ்வியலை வைத்து ஹாரார் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது. இந்த படத்திற்கு மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில், மேதகு படத்தின் எடிட்டர் சி.மு. இளங்கோவன் எடிட்டிங் பணிகளையும் செய்திருந்தார். அருண் இசையமைத்திருந்த இந்த படத்தை நாயகன் ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்திருந்தார். அஜித்தின் துணிவு படத்தில் நடித்த நடிகை காதம்பரி சௌமியா இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
வித்தியாகமான ஹாரார் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படம் சர்வதேச அளவில் 16 விருதுகளை பெற்றுள்ளது. இது குறித்து இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம் அவரை தொடர்புகொண்டோம்.
சினிமா மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
எல்லோரையும் போல் நானும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போன்ற நடிகர்களை பார்த்து வளர்ந்தவன் தான். அவர்களை போல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான முயற்சியும் செய்தேன். ஆனால் எந்த முயற்சியும் கைகூடவில்லை. அதன்பிறகு ஆஸ்திரேலியா சென்று வேலை பார்த்தேன். ஒரு சில வருடங்கள் கழித்து மீண்டும் சென்னை திரும்பி சினிமாவில் வாய்ப்பு தேடினேன். ஆனால் இப்போதும் ஏமாற்றம் தான்.
அதே சமயம் சினிமாவில் வாய்ப்பு தேடும்போது தேவைக்காக நான் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து வந்திருந்தேன். இந்த பணத்தை வைத்து குறும்படங்கள் எடுத்து வெளியிடலாம் என்று கூறி பலரும் என்னை ஏமாற்றிவிட்டார்கள். 2015-ல் சென்னையில் வெள்ளம் வந்தபோது என்து பொருளாதாரம் அனைத்தும் முடிந்துவிட்டது. அதன்பிறகு ஒரு சிலரிடம் கடன் பெற்று மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டேன்.
அடுத்த சில வருடங்களில் ஒரு சில நண்பர்கள் என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தார்கள். அப்படி ஒரு படத்தில் நடித்தேன். 2017-ல் ஸ்பார்க் ஆஃப் லைஃப் என்ற குறும்படத்தை எடுத்து வெளியிட்டோம். அதனைத் தொடர்ந்து நண்பர்கள் உதவியுடன் டே நைட் என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தேன். இந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் எனக்கு பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் ஹீரோவாக கமிட் ஆனேன். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக அந்த ப்ராஜக்ட்கள் டேக்ஆப் ஆகாமல் போய்விட்டது. அதன் பிறகு இப்போது நாயாடி படத்தின் மூலம் மீண்டு வந்துள்ளேளன்.
நாயாடி என்றால் என்ன அர்த்தம்?
கேரளா மற்றும் கர்நாடகாவில் வாழும் பழங்குடியினர் மற்றும் அடிமை வம்சத்தின் அடிப்பட்ட அளவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயம் தான் நாயாடிகள். அவர்களை பார்த்தால் கல்லால் மக்கள் அடிக்கும் அளவுக்கு ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். தமிழகத்தில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் 600 வருடங்களுக்கு முன்பு வாழந்ததாக வரலாறு உள்ளது. அதே சமயம் தற்போது கேரளா, கோவா, மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இந்த நாயாடி சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு மனிதர்களை கண்டாலும் பயம், மிருகங்களை கண்டாலும் பயம். அதனால் தங்களை காத்துக்கொள்ள பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பலவற்றி கற்று தேர்ந்ததாக சொல்லப்படுகிறது. அடிமை வம்சத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் நாயாடிகள். அவர்களின் வாழ்க்கையில் ஒரு சதவீதம் தான் இந்த படம். ஆனாலும் இது ஒரு கமர்ஷியல் படம். அதனால் ஒரு பிக்ஷனாகத்தான் இந்த படத்தை எடுத்துள்ளேன். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஒடியன் படமும் கூட நாயாடிகளின் ஒரு பகுதிதான். தனது பகையாளியை கொலை செய்ய வேண்டும் என்றால் ஒடியனிடம் கொண்டு விட்டுவிடுவார்கள். இல்லை என்றாலும் ஒடியன் இருக்கும் இடத்தில் அவரின் கை கால்களை கட்டி தள்ளிவிடுவார்கள். நாயாடி வம்சத்தின் ஒடியன்களுக்கு சூப்பர் பவர் இருந்தது.
இந்த கதையை ஹாரார் பாணியில் சொல்ல காரணம் என்ன?
நாயாடிகள் வாழ்க்கையே திகில் நிறைந்ததாகத்தன் இருக்கும். நான் புதுமுக இயக்குனர் எல்லோரும் எடுக்கும் கதைகளையே நானும் எடுத்தால் நான் அவர்களில் ஒருவராக மாறிவிடுவேன். ஆனால் அவர்களில் இருந்து நான் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக இந்த கதையை தேர்வு செய்தேன். வழக்கமான ஹாரார் படங்களில் ஒருவர் இறந்துவிடுவார். அவர் தன்னை அழித்தவர்களை பழிவாங்க வருவார். பெரும்பாலான ஹாரார் படங்கள் இந்த பாணியில் தான் இருக்கும். ஆனால் நாயாடி இதில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட கதையம்சம் கொண்டது.
ஒரு அரசன் காட்டுக்கு வேட்டைக்கு போகும்போது ஒரு நாயாடி பெண்ணை காதலித்து அவரை திருமணமும் செய்துகொள்கிறார். அவருடன் உறவு வைத்துக்கொண்ட அந்த ராஜா கேரளாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட கோவிலுக்குள் செல்ல கூடாது என்று அங்கிருக்கும் பிராமணர்கள் தடை விதிக்கிறார்கள். ஆனாலும் ராஜா அந்த கோவிலுக்குள் சென்றுவிட்டதால் நாங்கள் இனிமேல் பூஜை செய்ய மாட்டோம் என்று சொல்லிவிடுகிறார். அதன்பிறகு ராஜா நான் இனி இந்த கோவிலுக்குள் வரமாட்டேன் என்று கூறிவிட்டு தமிழகத்தின் தஞ்சையில் இருந்து பிராமனர்களை அங்கு அழைத்து சென்று பூஜை செய்ததாகவும், இதனால் தான் கேரளாவில் தமிழ் பிராமணர்கள் அதிகம் இருப்பதாகவும் வரலாறு பதிவுகள் உள்ளன.
படப்பிடிப்பின்போது நீங்கள் சந்தித்த இன்னல்கள் என்னென்ன?
படத்தின் பெரும்பகுதி காடுகளில் படமாக்கப்பட்டது. அங்கு நடிகர்கள் காட்டுக்கும் ஓடிவரும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளை எடுக்க சிரமமமாக இருந்தது. காடுங்களில் அவர்கள் ஓடும் போது விழுந்தாலும் அடி படாத வகையில் அந்த இடங்களில் இருக்கும் கற்கள் எடுத்துவிட்டு வழியை சுத்தம் செய்ய வேண்டும். காடுகளின் பனி அதிகம் என்பதால் நினைத்த நேரத்தில் ஷூட்டிங்கை தொடங்க முடியவில்லை. சிரமப்பட்டு ஒரு வழியாக படத்தை எடுத்துவிட்டோம்.
முதல் படத்திலேயே தயாரிப்பாளர், இயக்குனர் நடிகர்... எப்படி உணர்கிறீர்கள்?
இதில் பெருமை பட ஒன்றும் இல்லை. கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் இதை அப்போதே செய்துவிட்டார்கள். இப்போது சினிமா டிஜிட்டல் ஆகிவிட்டது. அதனால் படம் எடுப்பது எளிது. ஆனால் பிலிமில் ஷூட் செய்த காலக்கட்டத்திலேயே தயாரிப்பு இயக்கம் நடிப்பு என்று இருந்த பலர் செய்தது தான் சாதனை.
நாயாடி குறைவான திரையரங்களில் வெளியாக காரணம் என்ன?
மனிதர்களுக்குள் சாதி இருப்பது போல் சினிமாவிலும் ஒரு பாகுபாடு இருக்கிறது. பெரிய படம் சின்னப்படம் என பாகுபாடு அதிகம் உள்ளது. நாயாடி படத்தை ஜூன் 16-ந் தேதி வெளியிட நினைத்து ஜூன் 15-ந் தேதி பிரஸ் ஷோ செய்தோம். ஆனால் படத்திற்கு சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. சென்னையில் ஒரு பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ஒரு ஸ்கிரீன் கேட்டபோது சின்ன படத்திற்கு நாங்கள் தியேட்டர் தருவதில்லை என்று வெளிப்படையாக சொன்னார்கள். மல்டிபிளக்ஸில் ஒரு காட்சியாவது கொடுத்தால் தானே படத்தை பார்த்துவிட்டு மக்கள் பேசுவார்கள். போர் தொழில் என்ற ஒரு படம் வந்தது. அந்த படம் முதல் வாரத்தில் குறைவான தியேட்டர்களில் வெளியாது.
முதல் வாரத்தின் முடிவில் மக்கள் மத்தியில் அந்த படம் குறித்து நன்றாக பேசப்பட்டதால் அடுத்த வாரம் அதிகமான தியேட்டர்கள் வெளியிட்டார்கள். அதில் சரத்குமார் என்ற ஒரு நட்சத்திரம் இருந்தார். ஆனால் எங்கள் படத்தில் அப்படி யாரும் இல்லை. அனைவரும் புதுமுகளை வைத்து படம் எடுத்ததால் எங்களுக்கு தியேட்டர் தர மறுத்துவிட்டார்கள். அவர்கள் பார்வையில் புதுமுகங்களை வைத்து படம் எடுப்பது எதோ பெரிய தவறு என்பது போல் பேசுகிறார்கள். இந்த நிலை மாற தயாரிப்பாளர் சங்கம் எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த மாதிரியான பிரச்னைகளை மீடியா தான் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். மீடியா எங்களுக்கு பெரிய உறுதுணையாக இருந்தது. பிரின்ட் மீடியா நாயாடி படத்தின் விமர்சனத்தை எழுதினார்கள். ஆனால் யூடியூப் சேனல்கள் சிறிய படங்கள் குறித்து விமர்சனங்களை பண்ணுவதில்லை. அவர்களுக்கு விளம்பரம் வந்தால் விமர்சனம் செய்கிறார்கள். இல்லை என்றால் செய்வதில்லை. பாரபட்சம் பார்க்காமல் விமர்சனம் செய்ய வேண்டும். நன்றாக இருந்தால் நல்லா இருக்கு என்று சொல்லலாம். இல்லை என்றால் படம் நல்லா இல்லை என்று சொல்லிவிடலாம் என கூறியுள்ளார்.
அடுத்து நாயாடி படத்தின் எடிட்டர் சிமு.இளங்கோவன்-னை தொடர்பு கொண்டோம்
நாயாடி படத்தின் இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம் உங்களை தொடர்கொண்டது எப்படி?
அண்ணாத்த படத்தில் நான் உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றியபோது, அந்த படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சந்துரு என்பவர் (நடிகர் செந்தில் மகன்) ஆஸ்திரேலியாவில் அவரது ரூம்மெட்டாக இருந்த ஆதர்ஷ் மதிகாந்தம் (நாயாடி இயக்குனர்) என்பவரிடம் என்னை பற்றி பேசியுள்ளார். அதேபோல் அண்ணாத்த படம் பண்ணும்போது ஷூட்டிங்கில் நானும் சந்துருவும் ரூம் மெட்டாக இருந்தோம். அப்போது அவர் ஆதர்ஷ் மதிகாந்தம் பற்றி என்னிடமும் பேசினார்.
அதன்பிறகு இருவரும் சந்தித்து படம் குறித்து பேசினோம். முதலில் நாயாடி படத்தின் கதையை அவர்கள் சொல்லும்போது ஒரு வரலாற்று படமாக இதுவரை யாரும் சொல்லாத ஒரு கதையாக இருந்தது. இந்த படத்தை பிரம்மாண்டமாக எடுத்து 5 மொழிகளில் வெளியிடுவதாக சொன்னார்கள். இந்த படத்தை கடந்த ஆண்டு டிசம்பவரில் வெளியிடுவதாக கூறி 15 நாட்களில் படத்தை எடிட் செய்து கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு 13 நாட்களிலேயே படத்தின் முதற்கட்ட எடிட்டிங் பணிகளை முடித்தேன். டப்பிங் மற்றும் ரீரெக்கார்டிங் பணிகள் முடிந்து இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகள் 7 நாட்கள் நடந்தது. மொத்தமாக இந்த படத்தை 20 நாட்களில் முடித்து கொடுத்தோம். ஆனாலும் படம் டிசம்பரில் வெளியாகாமல் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஜூன் மாதம் வெளியானது.
இந்த கதையை கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது?
ஏற்கனவே பலூன் மற்றும் காஞ்சனா உள்ளிட்ட படங்களில் உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றிய அனுபவம் இந்த படத்திற்கு அதிகம் கை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் ஹாரர் கதையுடன் ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை பற்றிய கதையாக இருந்ததால், நாயாடி என்ற ஒரு சமூகத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. இதற்கு முன்பு ஹாரர் படம் பண்ணிய அனுபவம் இருந்ததால் என் தரப்பில் இருந்து புதிதாக என்ன செய்ய முடியுமோ அதை செய்தேன். அதேபோல் என் விருப்பத்திற்கு வேலை செய்ய எனக்கு இயக்குனர் தரப்பில் இருந்து முழு சுதந்திரம் இருந்தது.
நாயாடி முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதை... இந்த காட்சிகளை பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?
இதற்கு முன்பு உதவியாளராக பணியாற்றிய ஹாரர் படங்களில் எல்லாம் இரவில் தான் பேய் மற்றும் அமானுஷ்யங்கள் நடக்கும். ஆனால் இந்த படத்தில் வித்தியாசமாக பகலில் போய் வருவது போன்ற காட்சிகள் இருந்தது. என்னிடம் கதை சொல்லும்போதே வித்தியாசமாக பகலில் தான் பேய் வரும் அமானுஷ்யங்கள் நடக்கும் என்று சொன்னார்கள். அதேபோல் இந்த படத்தின் எடிட்டிங் பணியில் பல ஷாட்களை பார்த்தபோது பயமாகத்தான் இருந்தது.
உங்கள் படத்தொகுப்பில் 5 மொழிகளில் வெளியாகும் முதல் படம்.. எப்படி இருந்தது?
உதவி படத்தொகுப்பாளராக ஹாரர் படங்கள் பண்ணிய அனுபவம் இருந்ததால் 5 மொழிகளில் வெளியாகும் படம் என்ற பதட்டம் எதுவும் இல்லாமல் நிதானமாக வேலை செய்ய உதவியாக இருந்தது. 5 மொழி ரசிகர்களையும் கவர எடிட்டிங்கில் என்ன புதுவை செய்யலாம் என்று யோசித்து செயல்படுத்தினோம். இதற்கு முன் பண்ணிய படங்கள் அனைத்திலும் போய் இரவில் வரும்படி இருந்தது. ஆனால் இந்த படத்தில் பகலில் வருவதால் நமக்கு அந்த பயம் வருகிறதா, அப்படி இல்லை என்றால் பயத்தை கூட்ட என்ன செய்யலாம் எப்படி கட் செய்யலாம் என்பதை யோசித்து வைத்தோம். படம் வெளியான போது பார்த்த பலரும் வித்தியாசமான திகில் படம் என்று பாராட்டினார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.