விக்ரம் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தின் தயாரிப்பானர் வி.ஏ.துரை தற்போது உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவ செலவுக்காக திரைத்துறையினரிடம் உதவி கேட்கும் வீடியோ பதிவு பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
சக்தி சிதம்பரம் இயக்கிய என்னம்மா கண்ணு என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக திரைத்துறையில் அறிமுகமானவர் வி,ஏ.துரை. எவர்கிரீன் மூவி இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலம், லூட்டி, லல்லி, விவரமான ஆளு, பாலாவின் பிதாமகன், விஜயகாந்தின் கஜேந்திரா, நாய்க்குட்டி, ஆகிய படங்களை தயாரித்த இவர், கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு காகித கப்பல் என்ற படத்தை தயாரித்திருந்தார்.
அதன்பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த வி.ஏ.துரை தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் உடல் மெலிந்து பரிதாப நிலையில் இருக்கிறார். மேலும் தனது மருத்துவ செலவுக்காக உதவ வேண்டும் என்று ரஜினிகாந்த் உள்ளிட்ட சில நடிகர்களிடம் உதவி கோரி வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் அவர் அளித்த பேட்டியில்,
5 மாதங்களாக நான் கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். எனது கால் நடக்க முடியவில்லை. முதலில் காலில் ஒரு வடு மாதிரி தோன்றியது. அதற்கு மருத்து தேய்த்துவிட்டார்கள். ஆனாலும் அது பெரிதாகி பெரிதாக தற்போது நடக்க முடியாத நிலைக்கு என்னை தள்ளிவிட்டது. சர்க்கரை வியாதியினால் இப்படி ஆனதா அல்லது மருத்த தடவும்போது நகம் பட்டதனால் இப்படி ஆனதா என்று தெரியவில்லை.
3 மாதங்களாக நான் இப்படித்தான் இருக்கிறேன். மருத்துவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் தான் மருத்துவம் பார்ப்பார்கள். தயாரிப்பாளர் கவுன்சிலில் வசூல் செய்து இதுவரை மருத்துவத்திற்காக 5 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறோம். அதுவும் தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்து பயணம் ஹாஸ்பிட்டலுக்கு சென்றுவிட்டது என்னிடம் கொடுக்கவில்லை.

இப்போ இருக்கும் சூழ்நிலையில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. போதிய மருத்துவமும் பண்ண முடியவில்லை. இப்போது எனக்கு மருத்துவம் தேவைப்படுகிறது. கடைசியாக பாபா படத்தின் நிர்வாக தயாரிப்பில் இருந்தேன்.
நான் பிரதாமகன், கஜேந்திரா, லல்லி என 8 படங்கள் எடுத்திருக்கிறேன். 8 படங்களிலும் லாபத்தை பார்க்கவில்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது. நஷ்டம் வந்தாலும் சினிமாவை விட்டு செல்ல மனமில்லை. அடுத்த படத்தில் பார்த்துக்கொள்வோம் என்று அடுத்த படத்தை தயாரிக்க சென்றேன். இப்படி போய் கடைசியில் என்னை பாதுகாக்காமல் விட்டுவிட்டேன்.
எஸ்பி முத்துராமனிடம் 25 படங்கள் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். என் நிலைமையை பார்த்துவிட்டுதான் பாபா படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக என்னை நியமித்தார். அப்போ அந்த வேலையை சிறப்பாக செய்தேன். ஆனால் இப்போது என் நிலைமை அவருக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியவில்லை. சிறிய உதவி கூட செய்ய மாட்டேகிறாங்க. சூர்யா மட்டும் இப்போது எனக்கு உதவி செய்துள்ளார். சத்யராஜ் 25 ஆயிரம் கொடுத்தார்.
இயக்குனர் பாலாவிடம் ஒரு புதுப்படம் பண்ணுவதற்காக 25 லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு தற்போது திரும்ப கேட்டால் உங்களிடம் நான் படத்திற்காக பணம் வாங்க வில்லையே என்று சொல்லிவிட்டார். நான் இப்போது சிரமத்தில் இருக்கிறேன். எனது கால் இப்படி ஆகிவிட்டது என்று கூறி அவரின் ஆபீஸ் சென்று கேட்டேன். ஆனால் என்னை வெளியில் அனுப்பிவிட்டார்கள். அவருக்கு பயணம் கொடுத்த பேங்க் ஸ்டேட்மெண்ட் இருக்கு.
எனது வீடே இல்லை நண்பர் வீட்டில் தான் இருக்கிறேன். நான் இவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. ஆனால் இப்போது அவர்தான் என்னை பார்த்துக்கொள்கிறார். என்று கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். இவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இயக்குனர் வெற்றிமாறன் தனது உதவியாளரை அனுப்பி 1 லட்சம் பணம் கொடுத்ததாக வி.ஏ.துரையின் உதவியாளர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil