அன்றைய காலம் முதல் தற்போதைய டிஜிட்டல் காலம் வரை சினிமா என்பது மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. நாடக காலம் தொடங்கி தற்போதைய நவீன சினிமா வரை ரசனைகள் மாறியிருந்தாலும் ரசிகர்கள் மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காதல், குடும்பம், நட்பு உள்ளிட்ட பல கதைகளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன.
இதில் சில படங்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும், சில படங்கள் வரவேற்பை பெறத் தவறியும் இருக்கலாம். சமீப காலமாக சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது விளையாட்டு தொடர்பான படங்கள். உண்மை சம்பவமாக இருந்தாலும், கற்பனை கதையாக இருந்தாலும் விளையாட்டு குறித்து வெளியான படங்கள் வரவேற்பை பெற தவறியதில்லை என்று சொல்லலாம்.
பாலிவுட்டில் அதிக அளவில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் பயோபிக் வெளியாகி வருகின்றன. அதேபோல் விளையாட்டு என்பது குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான ஒன்று. விளையாட்டை விரும்பாதவர்கள் கூட விளையாட்டு தொடர்பான படங்களை ரசிக்கும் மனநிலையில் உள்ளனர். அதுவே இதுபோன்ற படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருக்கலாம்.
இதுவரை விளையாட்டு தொடர்பாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சில குறிப்பிட்ட படங்கள் குறித்த விபரங்களுடன் வெளியாகியுள்ள புத்தகம் தான் வெள்ளித்திரையில் விளையாட்டு. இந்த புத்தகத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்கள் மட்டுமல்லாமல் உலகளவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற விளையாட்டு தொடர்பான பல படங்களின் விபரங்கள் உள்ளன.அதிலும் குறிப்பாக உண்மைச் சம்பவத்தை தழுவிய பல படங்களின் விபரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
மணிகண்டன் தியாகராஜன் என்பவர் இந்த நூலை எழுதியிருக்கிறார். விளையாட்டைப் பயன்படுத்தி நாட்டு மக்களை தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா எப்படி ஒருங்கிணைந்தார் என்பது இந்நூலின் முதல் கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.
நாம் அனைவருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை பற்றி தெரியும். ஆனால் ரக்பி என்ற ஒரு விளையாட்டை வைத்து தென் ஆப்பிரிக்காவில் இனவெறியை முடிவுக்கு கொண்டு வர மண்டேலா முயற்சித்தார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

அதேபோல் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தனது வாழ்க்கையில் சந்தித்த பெரும் துயரத்தை கடந்து எவ்வாறு சாதித்தார் என்பது தொடர்பான உண்மைக் கதையை மையப்படுத்தி வெளியான சூர்மா படம் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. தவறுதலாக ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் எழுந்து நடக்க முடியாத சூழலில் மருத்துவ சிகிச்சைக்கு பின் அவர் இந்திய அணிக்காக விளையாடி எவ்வாறு சாதனை படைத்தார் என்பதே சூர்மா படத்தின் கதை.
சூர்மா என்றால் மாவீரன் என்பது பொருள். இந்தப் படம் குறித்து நாம் படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுகிறது. படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. அதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீரர் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது குறித்து வெளியான படம் பற்றியும் இந்த நூலில் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மல்யுத்த வீராங்கனைகள் பபிதா போகாட், கீதா போகாட், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற மில்கா சிங், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா, உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்லாமல் உலக அளவில் பல நாடுகளில் விளையாட்டில் சாதித்தவர்களின் வாழ்க்கை கதை குறித்து எடுக்கப்ட்ட படங்கள் குறித்த தகவல்களும் இந்த நூலில் உள்ளது.
விளையாட்டு ஒருவரின் உடலை உறுதியாக வைத்திருக்க பெரிதும் உதவும். அதனால் ஒவ்வொருவருக்கும் விளையாட்டு என்பது அவசியம். விளையாட்டு குறித்தும், விளையாட்டு வீரர்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரரின் வாழக்கை வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ளவும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த சவால்களை பற்றி தெரிந்து கொள்ளவும் இந்த நூல் நிச்சயம் உதவும்.
விளையாட்டுத் திரைப்படங்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் நிச்சயம் இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புத்தகம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் கிடைக்கிறது.
ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் படத்தை காண்பதற்கான க்யூஆர் கோடு கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. நமது ஸ்மார்ட்போனில் அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் குறிப்பிட்ட அந்தப் படம் எந்த ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மொத்தம் 120 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.200 ஆகும்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“