/indian-express-tamil/media/media_files/2025/10/17/screenshot-2025-10-17-202754-2025-10-17-20-28-27.png)
அரசன் டீசரில் சிம்பு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் வெற்றிமாறன் முதல்முறையாக சிம்புவுடன் இணைந்துள்ள படம் அரசன். இந்த படத்தின் ப்ரமோ இன்று யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், இந்த கதை பிரபல ரவுடியின் உண்மை கதை என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை, பாகம் 1, 2 என தொடர்ந்து வித்தியாசமான வெற்றிப்படங்களை கொடுத்து வரும் வெற்றிமாறன், விடுதலை பாகம் 2 படத்திற்கு பிறகு, தற்போது சிம்புவுடன் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இந்த கூட்டணி இணைய வேண்டும் என்று ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இந்த எதிர்பார்ப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க, கலைப்புலி தாணு, தயாரிக்க உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
சிம்பு, வெற்றிமாறன் அனிருத் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்து பிறகு கைவிடப்பட்ட நிலையில், இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் இந்த ப்ரமோவில் நடித்துள்ளார். கோர்ட் வாசலில் நின்று சிம்பு பேட்டி கொடுப்பது போல் இந்த ப்ரமோ தொடங்குகிறது. கோர்ட்டில் தன்மீது இரட்டை கொலை வழக்கு பொய்யானது என்ற சிம்பு சொல்ல, ப்ளாஷ்பேக்கில், சிம்பு ஒரு ராத்தரியில் 2 கொலை செய்துவிட்டு வருவது போல் காட்டப்படுகிறது. இந்த ப்ரமோ தற்போது இணையத்தில வைரலாகி வரும் நிலையில், படம் குறித்து எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்த படம் சென்னையில் பிரபல ரவுடியாக இருந்த மயிலை சிவா வாழ்க்கை வரலாறு என்று பலரும் பேசி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் சென்னையில் குடியேறிய நிலையில், மயிலை மகேஷ் என்பவரை பார்த்து தாணும் இவரைப்போல் ரவுடியாக மாற வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மகேஷின் உறவினர் பெண் ஒருவரை சிவா தாக்கிவிட, இதனால் கோபமான மகேஷ் சிவாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதில் மகேஷால் கழுத்து அறுக்கப்பட்ட சிவா, உயிருக்கு போரடிய நிலையில், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன்பிறகு உடல்நலம் தேறிய சிவா, தான் பார்த்து வளர்ந்த மகேஷையே கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக ஒரே இரவில், இரண்டுபேரை கொலை செய்துள்ளார். இந்த நிலையில், சிவாவை கொலை செய்ய, தினேஷ் என்பவரை மயிலை மகேஷ் தொடர்புகொண்டுள்ளார். ஆனால் சிவாவின் நெருங்கிய நண்பரான தினேஷ், இது குறித்து சிவாவிடம் சொல்ல, இருவரும் சேர்ந்து மயிலை மகேஷை கொலை செய்துவிடுகின்றனர். அன்றுமுதல் சிவக்குமார் மயிலை சிவா என்று மாறிவிடுகிறார்.
இயக்குனர் வெற்றிமாறன் அவருடன் பழகி, அவரின் நடவடிக்கைகள் குறித்து கேட்டு தெரிந்துகொண்டு, வட சென்னை படத்தை இயக்கிய நிலையில், தற்போது அரசன் ப்ரமோவை பார்த்து மயிலை சிவாவின் வாழ்க்கையை தான் படமாக எடுக்க போகிறார் என்று கூறி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.