Thunivu vs Varisu : பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு அஜித் நடிப்பில் துணிவு என இரு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகை காலங்களில் வெளியாவது வழக்கம். மற்ற சாதாரண நாட்களில் வெளியானாலும் ஒரு நடிகரின் படம் வெளியாகும் போது மற்ற நடிகர்கள் படங்கள் வெளியாகாது என்று சொல்லாம். ஆனால் சில தவிர்க்க முடியாத சமயங்களில் இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலையும் உருவாகும்.
அந்த மாதிரியான ஒரு சூழலை தற்போது தமிழ் சினிமா சந்தித்துள்ளது. தமிழில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித் படங்கள் பொங்கல் பண்டிகை தினத்தில் ஒரே நாளில் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சியும், அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்குனர் எச்.வினோத்தும் இயக்கியுள்ளனர்.

இந்த இரு படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது எனற அறிவிப்பு வெளியானதில் இருந்து இரு தரப்பு ரசிகர்களும் தங்களது ஹீரோவின் படங்களுக்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதால் கோலிவுட் வட்டாரம் பெரும் பரபரப்பை சந்தித்து வரும் நிலையில், விஜய் அஜித் படங்கள் கடைசியாக எப்போது ஒன்றாக வெளியானது என்ற தகவலும் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக பிரபல சினிமா விமர்சகர் திராவிட ஜீவா அவர்களை தொடர்புகொண்டோம்
விஜய் அஜித் படங்கள் கடைசியாக ஒரே நாளில் வெளியானது எப்போது? அதில் வெற்றி யாருக்கு கிடைத்தது?
கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு விஜய் நடிப்பில் ஜில்லா அஜித் நடிப்பில் வீரம் என இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானது. ஆனால் இதில் வெற்றி தோல்வி என்பது தீர்மானிக்க முடியாத ஒன்று. கடந்த 15, வருடங்களாக படங்களில் வசூல் நிலவரங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாவதில்லை. அதே சமயம் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் வசூல் இவ்வளவு என்று பேப்பரில் விளம்பரம் கொடுப்பார்கள். சமீபத்தில் கபாலி படம் 25 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி தானு விளம்பரம் கொடுத்திருந்தார். அந்த மாதிரி அறிவிப்பு கொடுக்காதபோது யார் படம் வெற்றி யார் படம் தோல்வி என்பதை குறிப்பாக சொல்ல முடியாது.

இவர்கள் 30 வருடம் சினிமாவில் கடந்து வந்துள்ளதால் இவர்களுக்கு ஒரு மெரிட் இருக்கும். அதன் அடிப்படையில் சொல்லாமே தவிர வெற்றி தோல்வியை நாம் தீர்மானிக்க முடியாது. யாராவது தியேட்டர் அதிபர்களோ, அல்லது தயாரிப்பாளரே யாராவது சொன்னால் தான் நாம் தீர்மானிக்க முடியும்.
வாரிசு – துணிவு இரண்டு படங்களில் அதிக தியேட்டர்கள் யாருக்கு?
வாரிசு துணிவு இரண்டு படங்களை ஒப்பிடும்போது துணிவுக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரிய ஸ்கிரீன்களும் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிமிடம் வரை அதுதான். ஆனால் இதில் மாற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது. இதுவே தொடரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை துணிவு 65 சதவீதமும், வாரிசு 35 சதவீதமும் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்திற்கு ஒருநாள் முன்னதாக துணிவு (ஜனவரி 11) வெளியாவது உண்மையா?
வாரிசு படம் ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் துணிவு படம் இந்த தேதியில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் ஒரே நாளில் வெளியிடத்தான் முயற்சி செய்வார்கள். இரண்டு நடிகர்களும் போட்டியாளர்கள் என்ற நிலை இருப்பதால், விடுமுறை நாளில் கலெக்ஷன்களை டார்கெட் செய்து இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகத்தான் அதிக வாய்ப்புள்ளது.

துணிவு வாரிசு ரசிகர்களை தாண்டி மக்கள் மத்தியில் எந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது?
அனுமானத்தின் அடிப்படையில் எதையும் சொல்ல முடியாது. இவ்வாறு கணிப்பது தனிப்பட்ட ஒரு கருத்தை கூறுவது போல் ஆகிவிடும். உண்மையிலேயே நமக்கு பிடித்த நடிகராக இருந்தாலும் அதை வெளிப்படுத்த கூடாது என்பதே எனது கருத்து. ஒரு படத்தின் வெற்றியை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த படம் அதிக காட்சிகள், அதிக தியேட்டர்கள் படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை பொறுத்துதான் தீர்மானிக்க முடியும். ஆனால் மக்களின் மனநிலையை நாம் முன்கூட்டியே கணிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ரிலீஸ் தேதி மாற்றம்
விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கிமானது. இதனால் வாரிசு துணிவு இரண்டு படங்களும் ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென துணிவு படம் ஜனவரி 11-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தற்போது வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியும் ஜனவரி 11-ந் தேதிக்கு மாற்றகப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இரு படங்களும் ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருநாள் முன்னதாக ஜனவரி 11-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விஜய் அஜித் படங்கள் ஒன்றாக வெளியான விபரம்
கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி
1996-ம் ஆண்டு முதல்முறையாக விஜய் அஜித் படங்கள் இணைந்து வெளியானது. இதில் அஜித் நடித்த வான்மதி படம் ஜனவரி 12-ந் தேதியும், விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படம் ஜனவரி 15-ந் தேதியும் வெளியாகியுள்ளது.
கல்லூரி வாசல் vs பூவே உனக்காக
1996-ம் ஆண்டு அஜித் நடிப்பில் கல்லூரி வாசல்(பிப்ரவரி 18) விஜய் நடிப்பில் பூவே உனக்காக (15) படம் வெளியானது. இதில் பூவே உனக்காக படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்து விஜயின் சினிமா வாழக்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
காதலுக்கு மரியாதை vs ரெட்டை ஜடை வயசு
1997-ம் ஆண்டு விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதை (டிசம்பர் 19) அஜித் நடிப்பில் ரெட்டை ஜடை வயசு (டிசம்பர் 12) வெளியானது. இதில் மலையாள ரீமேக் படமாக வெளியான காதலுக்கு மரியாதை பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் – நிலாவே வா
1998-ம் ஆண்டு அஜித் நடிப்பில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (ஆகஸ்ட் 15). விஜய் நடிப்பில் நிலாவே வா (ஆகஸ்ட் 14)ஆகிய படங்கள் வெளியானது. இதில் உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். கார்த்திக் ரோஜா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

உன்னை தேடி – துள்ளாத மனமும் துள்ளும்
1999-ம் ஆண்டு அஜித் நடிப்பில் உன்னை தேடி (பிபரவரி 5) விஜய் நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும் (ஜனவரி 29) படங்கள் வெளியானது. இதில் துள்ளாத மனமும் துள்ளும் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
குஷி – உன்னைக் கொடு என்னை தருவேன்
2000-ம் விஜய் நடிப்பில் குஷி (மே 19) மற்றும் அஜித் நடிப்பில் உன்னைக்கொடு என்னை தருவேன் (மே 25) படங்கள் வெளியாகியுள்ளது. இதில் இளைஞர்கள் மத்தியில் குஷி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ராணுவம் அடிப்படையில் வெளியான உன்னைக்கொடு என்னை தருவேன் படம் அஜித்துக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
தீனா – ப்ரண்ட்ஸ்
2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் தீனா (ஜனவரி 14) விஜய் நடிப்பில் ப்ரண்டஸ் (ஜனவரி 14) வெளியானது. இந்த இரு படங்களும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
பகவதி – வில்லன்
2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் பகவதி (நவம்பர் 4) அஜித் நடிப்பில் வில்லன் (நவம்பர் 4) ஆகிய படங்கள் வெளியானது. இதில் விஜய் ஆக்ஷன் ஹீரேவாக மாறிய பகவதி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வில்லன் படம் அஜித் நடிப்பில் அடுத்த பரிமானத்தை வெளிப்படுத்தியது.
திருமலை – ஆஞ்சநேயா
2003-ம் ஆண்டு விஜய் நடிப்பில் திருமலை (அக்டோபர் 24) அஜித் நடிப்பில் ஆஞ்சநேயா (அக்டோபர் 24) ஆகிய படங்கள் வெளியானது.

ஆதி – பரமசிவன்
2006-ம் ஆண்டு விஜய் நடிப்பில் ஆதி (ஜனவரி 14) அஜித் நடிப்பில் பரமசிவன் (ஜனவரி 14) ஆகிய படங்கள் வெளியானது. இதில் விஜய் நடிப்பில் வெளியான ஆதி படம் சில விமர்சனங்களை சந்தித்து.
போக்கிரி – ஆழ்வார்
2007-ம் ஆண்டு விஜய் நடிப்பில் போக்கிரி (ஜனவரி 12) அஜித் நடிப்பில் ஆழ்வார் (ஜனவரி 12) ஆகிய படங்கள் வெளியானது. இதில் ரீமேக் படமான போக்கிரி பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
வீரம் – ஜில்லா
2014-ம் ஆண்டு விஜய் நடிப்பில் ஜில்லா (ஜனவரி 10) அஜித் நடிப்பில் வீரம் (ஜனவரி 10) ஆகிய படங்கள் வெளியானது. இரண்டு படங்களுமே வசூல் ரீதியான வெற்றிப்படமாக அமைந்தது.
துணிவு – வாரிசு
2023-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/