'The Teacher' Movie Review: சமூக பிரச்சனைகள், அரசியல் கருத்துக்கள் ஆகியவை பேசும் திரைப்படங்கள், மக்களிடம் அதிக கவனத்தை பெறக்கூடிய யுக்தியாக கையாளப்படுகிறது. இருப்பினும், அதனின் நோக்கத்தை சில திரைப்படங்கள் மட்டுமே சரியாக வெளிப்படுத்துகின்றன.
பாலியல் குற்றங்களைப் பற்றி பல கதைகளின் மூலம் பேசும் திரைப்படங்களை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் அதன் முக்கிய கருத்தை பலர் தெரிவிக்க தவறுகின்றன. அந்த வரிசையில் ஒன்றாக 'தி டீச்சர்' திரைப்படம் இடம்பெறுகிறது.

2022இன் இறுதி மாதத்தில் வெளிவந்துள்ள இந்த படம், விவேக் இயக்கத்தில், அமலா பால், ஹக்கீம் ஷா, மஞ்சு பிள்ளை ஆகியோரின் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ்-இல் வெளிவந்துள்ளது.
பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியின் போது தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய மாணவர்களை எப்படி அவர்களது ஆசிரியர் தேவிகா (அமலா பால்) பழிவாங்குகிறார் என்பதே இப்படத்தின் கருவாகும்.
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக உதவிகள் கிடைக்காது என்ற கருத்தை முன்வைப்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது. படத்தின் ஆரம்பத்தில், ஒரு குழந்தை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்பொழுது, காவல்துறை (இன்ஸ்பெக்டர்) அக்குழந்தையின் பெற்றோரை மிரட்டி புகாரை வாபஸ் வாங்க செய்யும் காட்சி, மக்களிடையே சட்டத்தை நம்பினால் இதுதான் நிலைமை என்று தெரிவிக்கிறது.
கம்யூனிஸ்ட் தலைவராக நடித்திருக்கும் மஞ்சு பிள்ளை , தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை (கல்யாணி) அற்புதமாக கையாண்டிருக்கிறார். இருப்பினும், 'தைரியமான பெண் என்றால் இப்படி தான் இருப்பாள்' என்கிற காட்சிப்படுத்தல் முகம் சுழிக்க வைக்கிறது. ஹீரோ என்ட்ரியுடன் வந்த கல்யாணியின் பங்கு படத்திற்கு மிகவும் குறைவாக இருப்பது வருத்தத்திற்குரியது.
பாலியல் குற்றங்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடந்து வரும் நிலையில், பாதிக்கப்படுபவர்களை அவமானப்படுத்தி விமர்சனம் செய்யும் சமூகத்தை காட்சிப்படுத்திய இயக்குனர், அதற்கான தீர்வை கூற தவறியது போல் தெரிகிறது.
ஒரு சமூக பிரச்சனையைப் பற்றி குரல் எழுப்பும் திரைப்படம், அப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுப்பதை தவறி, அவர்களுக்கு மேலும் அச்சத்தை கொடுப்பது போன்ற காட்சிகள் உள்ளது .
கிளைமாக்ஸில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் குற்றவாளிகளை பழிவாங்கும் விதம் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு உள்ளது. சட்டத்தின் வழியாக நீதி கிடைக்காவிட்டால், வன்முறையை கையாளலாம் என்கிற கருத்து தெளிவின்மையை வெளிப்படுத்துகிறது.
படத்தின் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி வழங்காத இன்ஸ்பெக்டர், கிளைமாக்ஸில் ஆசிரியருக்கு உதவும் காட்சி குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
'தி டீச்சர்' படத்தின் ஆரம்பத்தில் தேவிகா (அமலா பால்) எதிர்கொண்ட வன்புணர்வின் தாக்கத்தை காட்சிப்படுத்த நினைத்தாலும், படம் முழுவதும் ஒரு ஆணின் பார்வையை காட்சிப்படுத்தியது போலவே உள்ளது.
சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்தால், அதை தற்காத்துக்கொள்ள அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தைரியமும் வழங்குவதே சிறந்த தீர்வாக கருதப்படும். மேலும், சட்டத்தின் மேல் நம்பிக்கை வைக்கும்படி இனிவரும் திரைப்படங்களில் தெரிவித்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும்.
அதை தவிர்த்து, "அவளுக்கு சுதந்திரம் குடுத்ததால் நடந்த வினை" போன்ற டயலாக் வைத்து, அதற்கு தெளிவில்லாத பதில் வழங்குவது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil