மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதால் சினிமா டிக்கெட் கட்டணங்கள் உயர்கிறது. இதனிடையே, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரி வசூலிக்க தமிழக அரசு நேற்று புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.
இதனையடுத்து, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர், ஜிஎஸ்டி வரியுடன் கேளிக்கை வரியும் சேர்ந்து கொண்டால், தொழில் நடத்துவது கஷ்டம். எனவே, 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் (3-ம்தேதி) முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என அதன் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்தார்.
இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமாத்துறை இக்கட்டான சூழலில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது வெளிவந்திருக்கும் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியால் மேலும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். தயாரிப்பாளர்களின் நிலையை அறிந்து செயல்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தயாரிப்பளர்களை பாதிக்கும் வகையில் எடுக்கப்படும் முடிவுக்கு உடன்பட முடியாது. மாநில அரசுக்கு நம் தேவைகளை புரிந்து நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தர வேண்டிய தேவையும் உள்ளது. எனவே, தயாரிப்பளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு உடனடியாக ஆதரவளிக்க இயலாது என கூறப்பட்டுள்ளது.