‘மெர்சல்’ படத்தின் கதை தொடர்பாக, இயக்குநர் அட்லீக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம், இந்தப் படத்தை 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து தயாரித்தது. இதுவரை 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். படம் ரிலீஸுக்கு முன்பும், பின்பும் பல பிரச்னைகளைச் சந்தித்த ‘மெர்சல்’, 3 வாரங்களுக்குப் பிறகும் ஒரு பிரச்னையைச் சந்தித்துள்ளது.
‘மெர்சல்’ படம் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி என்று சொல்லப்பட்டது. தன்னுடைய ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் படம் பார்த்த கமல் கூட, படக்குழுவினருடன் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் போஸ்டர் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.
இந்நிலையில், ரஜினி நடித்த ‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக் உரிமையைத் தான் வாங்கி வைத்திருப்பதாக தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், விளக்கம் கேட்டு அட்லீக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த நோட்டீஸுக்கு அட்லீ பதில் அளிக்கவில்லை.
அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’, ‘தெறி’ படங்களும் வேறு படங்களின் காப்பி என பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.