பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியளார்கள் யார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் குறிப்பாக குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய 2 நிகழ்ச்சிகளுக்கும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். குக் வித் கோமாளி முடிந்த அடுத்த சில வாரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவது வழக்கம். அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 4 விரைவில் முடிவடைய உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்காக ஷூட்டிங் முடிந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7-க்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் மூலம் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.
இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 7-வது சீசன் தொடங்க உள்ளது. இது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் டிவியில் தொகுப்பாளியியாக தொடங்கி சீரியல் நடிகையாக உயர்ந்த ஜாக்குலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். அடுத்து விஜய் டிவியின் தேன்மொழி பி.ஏ சீரியலிலும் ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து தற்போது சின்னத்திரையின் முன்னணி நடிகராக இருக்கும் பப்லு ப்ரித்விராஜ், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த சீசனில் பங்கேற்ற ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை விஜய் டிவி அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் பல சீரியல்களில் நடித்த தினேஷ் தற்போது ஈரமானரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார். மனதில் பட்டதை அப்படியே பேசிவரும் நடிகை ரேகா நாயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக இணையத்தில் பெரும் ட்ரெண்டாகி வரும் கோவை பெண் ஓட்டுனர் ஷெர்மிளா, நடன இயக்குனர் ஸ்ரீதர் உள்ளிட்ட சிலரும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“