Advertisment

ஜல்லிக்கட்டின் நுண்ணுணர்வை பேசும் பேட்டைக்காளி

ஜல்லிக்கட்டு கதை என்றவுடன் பலரும் நினைப்பது போல் மதுரையை தேர்வு செய்யாமல் சிவகங்கையை கதைக்களமாக தேர்வு செய்த சாமர்த்தியம் மிகவும் பாராட்டத்தக்கது.

author-image
WebDesk
New Update
ஜல்லிக்கட்டின் நுண்ணுணர்வை பேசும் பேட்டைக்காளி

அரியகுளம் பெருமாள் மணி, எழுத்தாளர், ஊடகவியலாளர்

Advertisment

ஓடிடி தளமொன்றில் பேட்டைக்காளி தொடர் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மாடு வளர்ப்பவர்களுக்கும், மாடு பிடிப்பவர்களுக்கும் இடையே உள்ள உணர்வுகளை, கோப தாபங்களை, ஆசை நிராசைகளை தெளிவாக படம் பிடித்து காட்டும் தொடர் இது.  பேட்டைக்காளி என்பது படத்தில் வருகின்ற ஒரு காளையின் பெயர்.

ஜல்லிக்கட்டு கதை என்றவுடன் பலரும் நினைப்பது போல் மதுரையை தேர்வு செய்யாமல் சிவகங்கையை கதைக்களமாக தேர்வு செய்த சாமர்த்தியம் மிகவும் பாராட்டத்தக்கது. கதையின் நகர்வில் கதைக்களம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. முல்லையூர் தாமரைக் குளம் என இரண்டு மலர்களின் பெயரால் அழைக்கப்படுகின்ற ஊர்களில் வாழ்கின்ற மக்களின் கதை இது. இரண்டு ஊர் மக்களின் பெருமை ஜல்லிக்கட்டு மைதானத்தில் எப்படி நிலை குத்தி நிற்கிறது என்பதை தெளிவாக விவரிக்கிறது திரைக்கதை.

நில உடமை சமூகத்தை சார்ந்தவர்கள் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களாகவும், பசு மந்தையை வைத்து வாழ்வாதாரத்தை மேற்கொள்கிறவர்கள் மாடு பிடிப்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மரியாதை காரணமாக யாரும் அடக்க தயங்குகிற தாமரைக் குளத்தின் வெள்ளையை முல்லையூரின் பாண்டி அடக்குகிறார். அடக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையான வெள்ளை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறது அதன் தொடர்ச்சியாக இரண்டு ஊர்களுக்குமிடையே பகை வீரியம் கொள்கிறது இறுதியில் அது பாண்டி மரணத்தில் சென்று முடிகிறது. 

publive-image

களத்தில் இறக்குவதற்கு மாடுகளை எப்படி தயார் செய்கிறார்கள்? ஜல்லிக்கட்டு விழா மேடைகளில் யார் யாருக்கு எப்படி மரியாதை தரப்படுகிறது? போன்ற விவரங்களை துல்லியமாக இயக்குனர் பதிவு செய்துள்ளார். ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பாண்டி கிளம்புகிற பொழுது பாண்டியின் தலை, வாசல் நிலையில் இடிக்கிறது, சகுனம் சரி இல்லையே என பாண்டியின் அம்மா வருத்தப்படுகிறார். வெள்ளையை மைதானத்திற்கு ஓட்டிக் கொண்டு வரும்போது குறுக்கே பாம்பு ஒன்று போகிறது சகுனம் சரியில்லையே! என்கிறார் மாட்டை கையில் பிடித்திருக்கம் மாணிக்கம். இப்படி எளிய மக்களின் நிமித்தம் தொடர்பான நம்பிக்கைகளையும் தவற விடவில்லை.

வெள்ளையின் கதை தொடருக்கு முன்னோட்டம் போல அமைகிறது.   ஆற்றில் அடித்து வரப்பட்ட கருமை நிற கன்றை எடுத்து அதற்கு காளி என பெயரிட்டு வளர்க்கிறார் தேன்மொழி, காளியே கதையின் உண்மையான நாயகன். தாமரைக் குளம் பண்ணையாரின் மகன், தேன்மொழியின் அண்ணன், தேன்மொழியின் காதலன்,  தேன் மொழி வளர்க்கும் காளி இவர்களின் அன்பும் பகையும் ஜல்லிக்கட்டு மைதானத்தின் வழியாக எவ்வாறு வளர்த்தெடுக்கப்படுகிறது என்பதை சொல்வதே பேட்டைக்காளியின் மையம்.

சிவகங்கை மாவட்டம் அரளிக்காடு பகுதியைச் சுற்றி வெவ்வேறு வடிவங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். வாடியில் நின்று பிடிப்பது ஒரு வகை, கூட்டத்தில் ஓடும் காளையை தழுவுவது, மஞ்சுவிரட்டு என ஒவ்வொரு வடிவத்தையும் கதையின் நகர்வில் சரியாக பயன்படுத்தியது பாராட்டத்தக்க அம்சம். தங்கள் வீட்டில் உறுப்பினராக மாட்டை வளர்க்கும் உரிமையாளர், மாடு பந்தயத்தில் பிடிபட்டு விட்டால் அதனை எப்படி வேதனையோடு கையாளுகிறார் என்ற இருவேறு உணர்ச்சி பிரவாகத்தை சரியாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

publive-image

யாருக்குமே பிடிபடாத காளி தன்னை வளர்க்கிற தேன்மொழியின் துப்பட்டாவை சுற்றிக்கொண்டு வருகிற தேன்மொழியின் காதலன் முன் பாயாமல் பதுங்குகிறது. பிடிபடாத ஒரு நல்ல மாட்டிற்கு லட்சக்கணக்கில் விலை வைப்பது, வாங்கிய மாட்டை திருப்பித் தர நிபந்தனைகளை விதிப்பது என மாடு வளர்ப்பின் பன்முக குணங்கள் தொடரில் பதிவாகியுள்ளது. 

எப்படி காலூன்றி நிற்பது,  மாட்டின் கண்ணை நேருக்கு நேராக ஏன் பார்க்க வேண்டும், உள்வட்டம் போடுகிற மாட்டை எப்படி பிடிக்க வேண்டும், வெளிவட்டம் போடுகிற மாட்டை எப்படி பிடிக்க வேண்டும் என முத்தையா விவரிக்கும் இடங்கள் வேடிக்கை என சொல்லப்படுகிற ஜல்லிக்கட்டின் பதிவு செய்யப்படாத பக்கங்கள். காமெடியனாக அறிமுகமாகிற தேன்மொழியின் காதலன் தேர்ந்த பிடியக்காரனாக மாறி எப்படி காதலையும், காளையையும் வென்றெடுக்கிறான் என்பதே உச்சகட்டம்.

பஞ்சாயத்தார் பிரச்சனையைப் பேசி தீர்க்கும் விதம், நிறை செம்பு பாலில் வாங்கப்படும் சத்தியம், இக்கட்டான சூழலில் மாடு குறித்தும், மனிதர்கள் குறித்தும் குறி கேட்டு பெறப்படும் தெளிவு என நுணுக்கமான விஷயங்களை விரிவாக பதிவு செய்துள்ளனர். ஓடிடி தொடர்களின் பலம் என இத்தகைய நுணுக்கமான தகவல்களை சொல்லலாம். பேட்டைக்காளி உணர்ச்சிகரமான காவியம். மனிதர்கள் மாடு போல நடந்து கொள்ளும் தருணங்களையும், மாடுகள் மனிதப் பண்புடன் எழும் நேரங்களையும் நுட்பமாக பதிவு செய்துள்ளது பேட்டைக்காளி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment