/indian-express-tamil/media/media_files/2025/10/11/sj-surya-aniruth-2025-10-11-21-37-37.jpg)
தமிழழ்நாடு அரசின் சார்பாக இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், 2021, 22 மற்றும் 23-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலைமாமணி விருது மட்டும் இல்லாமல், பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் வழங்கப்பட்டது.
இதில், இயல்லுக்கான பாரதியார் விருது, முனைவர் ந.முருகேச பாண்டியன், இசைக்கான எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.யேசுதாஸ், நாட்டியத்திற்காக பாலசரசுவதி விருது, பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் திரைத்துறையில், மணிகண்டன், எஸ். ஜே. சூர்யா, சாய் பல்லவி, விக்ரம் பிரபு, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத், பின்னனி பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குனர் சாண்டி உட்பட மொத்தம் 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் விருது வழங்கி உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பிலே நடைபெறக்கூடிய இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு தலைசிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
90 வயதான முத்துக்கண்ணம்மாளும் விருது பெறுகிறார், இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார். மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன. இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தியபோது, 'என் மேல் ஏன் இவ்வளவு பாசம்?' என இளையராஜா கேட்டார். அவர் மீது நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான் பாராட்டு விழா நடத்தினோம். நலிந்த நிலையில் வாழும் கலைமாமணிகளுக்கு நிதி உதவி ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
கலைமாமணி விருது பெற்ற இசையமைப்பாளர் அனிருத் புகைப்படங்களை வெளியிட்டு மனமார்ந்த நன்றி என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.