தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில், ஒவ்வொரு தியேட்டரிலும் ஒவ்வொரு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில், ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய் வசூலிக்கும் அக்கிரமும் நடைபெற்று வருகிறது. இதை முறைப்படுத்த வேண்டும் என விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாககிகள் தமிழக முதல்வரிடம் மனு அளித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, புதிய கட்டணத்தை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, மாநகராட்சிகள் மற்றும் சிறப்புநிலை நகராட்சிகளில் உள்ள தியேட்டர்களில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரண்டு சக்கர வாகனத்திற்கு 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சிகளில் உள்ள தியேட்டர்களில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இரண்டு சக்கர வாகனத்திற்கு 7 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள தியேட்டர்களில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரண்டு சக்கர வாகனத்திற்கு 3 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எந்த தியேட்டரிலுமே சைக்கிள் நிறுத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இலவசமாகவே நிறுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டண முறை, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்களில், ஒரு மணி நேரத்திற்கு 50 அல்லது 60 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, மால்களில் உள்ள தியேட்டர்களுக்கும் பொருந்துமா எனத் தெரியவில்லை. ஏனெனில், ஷாப்பிங் செய்ய வருபவர்கள் கூட படம் பார்க்கத்தான் செல்கிறோம் என்று கூறி மால் நிர்வாகத்தை ஏமாற்ற வாய்ப்பிருப்பதாகக் கருதுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.