விஜய் ரசிகர்களுடன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘தல’ அஜித் : திடீர் அறிக்கை பின்னணி

விவேகம் ரிலீஸ் ஆகவிருக்கும் சூழலில் தனது வழக்கறிஞர் மூலமாக அஜித் வெளியிட்ட அறிக்கை சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விவேகம் ரிலீஸ் ஆகவிருக்கும் சூழலில் தனது வழக்கறிஞர் மூலமாக அஜித் வெளியிட்ட அறிக்கை சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘தல’ என ரசிகர்களால் கொண்டாடப் படுகிற நடிகர் அஜித்குமாரின் ‘விவேகம்’ திரைப்படத்தை ஆகஸ்ட் 24-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படம் ரிலீஸாக 5 நாட்களே இருக்கும் சூழலில், ஆகஸ்ட் 19-ம் தேதி தனது வழக்கறிஞர் மூலமாக அஜித் ஒரு அறிக்கை விட்டார்.

அந்த அறிக்கையில், ‘25 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்துவரும் எனது அஜித்குமார், எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவர் அல்ல. தனது ஜனநாயகச் சிந்தனைகளை அவரது ரசிகர்களின் மீதும் பொதுமக்கள் மீதும் திணிக்காதவர். அவர், எந்தப் பொருளையும் வணிகச் சின்னத்தையும், நிறுவனத்தையும் அமைப்பையும், சங்கத்தையும் தற்போது நேரடியாகவோ மறைமுகவோ, சார்ந்தவரோ… ஆதரிப்பவரோ இல்லை.

அவர், அவரது வளர்ச்சிக்கு ஊக்கத் துணையாக இருந்த ரசிகர்களுக்கும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறார். அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றம் என்ற ஒன்று இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். அவருக்கு, அதிகாரபூர்வமான வலைப் பக்கம், எந்தச் சமூக வலைதளத்திலும் இல்லை.

குறிப்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்நாப்சாட் போன்ற இணையத்தில் இல்லை. ஆனால், சில தனிப்பட்ட சுய அதிகாரம்கொண்ட அமைப்புகள், தனிநபர்கள், தங்களுடைய கருத்துகளை அஜித்குமாரின் கருத்தாகப் பிரகடனப்படுத்தி வருகிறார்கள். அஜித்குமாரின் பெயரையும் புகைப்படத்தையும் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அஜித்குமார் சார்ந்த திரைத்துறையையும் தனி நபர்களையும், செய்தியாளர்களையும் பொதுமக்களையும்கூட சமூக வலைதளங்களில் வன்மமாகப் பேசிவருகிறார்கள். அந்தச் சம்பவம், அஜித்குமாருக்கு மன உளச்சலைத் தருகிறது. அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இத்தகைய செயலால் பாதிக்கப்பட்ட எல்லாரிடமும் அஜித்குமார் மன வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறார்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் பின்னணி குறித்து விசாரித்தபோது, “பொதுவாகவே விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் ரிலீஸாகிற நேரங்களில் இரு தரப்பு ரசிகர்களும் மிக வன்மத்துடன் ஆபாச வார்த்தைகளில் சமூக வலைதளங்களில் மோதுவது வாடிக்கை. அஜித் படம் வெளியான அன்றே, ‘படம் பிளாப்’ என விஜய் ரசிகர்கள் பிரசாரம் செய்வதும், அதே போல விஜய் படத்தை அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும் வாடிக்கை.

விவேகம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் அப்படியொரு மோதலை அஜித் விரும்பவில்லை. அதனால்தான், எனக்கு அதிகாரபூர்வமாக ரசிகர் மன்றமோ, சமூக வலைதள கணக்குகளோ கிடையாது என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே யாரையாவது எனது ரசிகர்கள் என்ற போர்வையில் யாரும் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்றும் பெருந்தன்மையுடன் அறிக்கை விட்டிருக்கிறார். இந்த வகையில் இது விஜய் தரப்புக்காக விடப்பட்ட அறிக்கையாகவே தெரிகிறது.

தவிர, அண்மையில் விஜய் ரசிகர்கள் சிலர் பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆபாசமாக ட்விட்டரில் பதிவிட்டதால் பெரும் கண்டனத்திற்கு ஆளானார்கள். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன் ஜாமீனுக்காக போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தனது ரசிகர் மன்றப் பெயரிலும் சிலர் அதேபோல அத்துமீறலான வார்த்தைகளை பயன்படுத்துவதால், உஷாராக இந்த எச்சரிக்கையை அஜித் விடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

அரசியலைப் பொறுத்தவரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அபரிமிதமான அன்பு கொண்டவர் அஜித். அவர் மரணமடைந்தபோது வெளிநாட்டில் இருந்த அஜீத், சென்னைக்கு திரும்பியதும் வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியது அதனால்தான். ஆனால் இதை வைத்து அவர் அதிமுக.வில் ஏதோவொரு அணியில் இணைந்து அரசியல் செய்யப்போவதாக சிலர் தகவல்களை பரப்புகிறார்கள். அதற்கு பதில் கொடுப்பதும் இந்த அறிக்கையின் நோக்கம்.

ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அபிமானத்தை, விளம்பரங்கள் மூலமாக காசாக்க விரும்பவில்லை என்பதையும், அதேபோல தனது அரசியல் கருத்துகளை ரசிகர்களிடம் திணிக்கும் திட்டமும் இல்லை என்பதை இந்த அறிக்கை மூலமாக திட்டவட்டமாக அஜித் தெரிவித்துவிட்டார். பொதுவாக முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் படம் ரிலீஸாகிற நேரத்தில் ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாக அறிக்கை விடுவதுதான் வழக்கம். ஆனால், ‘நான் அரசியலுக்கு வரப் போவதில்லை. எனக்கு ரசிகர் மன்றமே கிடையாது’ என இந்தத் தருணத்தில் ஒரு நடிகர் அறிக்கை விடுவதே ஆச்சர்யம்! தல ஒருவரால்தான் இது முடியும்.” என சிலிர்க்கிறார்கள், அஜித்துக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

வித்தியாசமானவர் அஜித்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close