Advertisment

தமிழகத்தில் ’சர்கார்’ அமைத்து, ரசிகர்களை ‘பிகில்’ அடிக்க வைப்பாரா விஜய்?

யூகங்களுக்கு உரம் போடும் விதமாக, தனது படங்களின் ஆடியோ வெளியீட்டு மேடைகளில் விஜய் சொல்லும் கருத்துகளும், குட்டிக் கதைகளும் ரசிகர்களிடையே முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

author-image
shalini chandrasekar
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy Vijay, Master

Thalapathy Vijay

Thalapathy Vijay : கடந்த வாரம் நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை ரசிகர்களைத் தாண்டி பெரும் விவாதமானது. பல தொலைக்காட்சிகளின் விவாத நிகழ்ச்சிகளில் பேசு பொருளாகவும் மாறியது. விஜய் வீட்டில் கிட்டத்தட்ட 23 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வருமான வரி சோதனையால், அவருக்கு ரசிகர்களின் பலம் இன்னும் கூடியது என்பதை மறுக்க முடியாது.

Advertisment

மின்சார கண்ணா படத்தின் காப்பியா ஆஸ்கார் விருது வென்ற பாரசைட் ? : கேட்டாலே ஷாக் அடிக்குதே…

அரசியல் வட்டாரங்களில் விஜய் பேசுபொருளாவது இது முதன்முறையன்று. வெகுஜன மக்களின் இடம் பிடித்த விஜய், விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற கருத்தும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் அரசியல் ரீதியாக அவருக்கு முதன்முறையாக பிரச்னை எழுந்தது 2011 பொங்கலுக்கு ‘காவலன்’ படம் ரிலீஸ் ஆன சமயத்தில் தான். அந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தைப் பெருவதில் ஏற்பட்ட பிரச்னை படத்திற்கு எதிராக திரும்பியது. அடுத்ததாக அவரது திரை வாழ்க்கையில் முக்கியப் படமாகக் கருதப்படும் ‘துப்பாக்கி’ 2012 தீபாவளிக்கு வெளியானது. அந்த சமயத்தில் பல்வேறு அமைப்புகள் தடைகோரின. ஆனால் அப்படம் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி 100 கோடிக்கும் மேல் வசூலித்து, பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டானது.

அடுத்ததாக 2013-ல் ‘தலைவா’ படத்துக்கு ‘Time to Lead' என டேக்லைன் வைத்திருந்ததால், அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக, படத்தை வெளியிட தடை விதித்தது. தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் வெளியாகியிருந்த தலைவாவின் திருட்டி டிவிடி-க்கள் இங்கு புழக்கத்திற்கு வந்து, படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

பின்னர் 2014-ம் ஆண்டு ‘கத்தி’ படத்தின் மூலம் தான் இலங்கையைச் சேர்ந்த ‘லைகா’ நிறுவனம் முதன்முதலாக இந்தியாவுக்குள் நுழைந்தது. ஈழத் தமிழர்கள் பிரச்னையைக் கருத்தில் கொண்டு, லைகா ராஜபக்சே மகனின் நிறுவனம் என படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு அரசியல் கட்சிகள் விஜய் படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. ஆனால் அதற்குப் பிறகு லைகா நிறுவனம் எத்தனையோ பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து கணிசமான லாபத்தையும் சம்பாதித்திருப்பது கொசுறு தகவல்.

அதனைத் தொடர்ந்து ‘புலி’ திரைப்படம் வெளியாகும் சமயத்திலும் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடைப்பெற்றது. ‘மெர்சல்’ திரைப்படத்தில் அதன் தலைப்பிலேயே ஆரம்பித்த பிரச்னை, ரிலீஸாகி இன்னும் தீவிரமானது. மத்தியில் ஆளுங்கட்சியை விமர்சித்து அப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக, அக்கட்சியின் தமிழக பிரதிநிதிகள் விஜய்க்கு எதிராக கருத்துத் தெரிவித்தனர்.

அதன் பிறகு விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம், மக்களுக்கு அரசு வழங்கும் இலவச திட்டங்களை விமர்சித்திருந்தது. இதற்கு ஒருபுறம் எதிர்ப்பும், மறுபுறம் ஆதரவும் கிடைத்தது. இப்படி ஒவ்வொரு படத்திற்கும் எழும் பிரச்னையை விஜய் சந்திக்கும் போதெல்லாம், அவர் அரசியலுக்கு வருவார் என்ற குரல்களும் சேர்ந்தே ஒலிக்கின்றன. யூகங்களுக்கு உரம் போடும் விதமாக, தனது படங்களின் ஆடியோ வெளியீட்டு மேடைகளில் விஜய் சொல்லும் கருத்துகளும், குட்டிக் கதைகளும் ரசிகர்களிடையே முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

Thalapathy Vijay Poster விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

இதோ கடந்த வாரம் நடந்த வருமானவரி சோதனையைத் தொடர்ந்து, இப்போதும் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தெரிந்துக் கொள்ள அவரது ரசிகர்கள் தீவிர முனைப்புக் காட்டி வருகிறார்கள். ஒருபடி மேலே சென்ற மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள், விஜய், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய மூவரும்  இருக்கும்படி போட்டோஷாப் செய்யப்பட்ட போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள். ஜெகன் மோகனும், பிரஷாந்த் கிஷோரும், “ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம்... கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்... மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்" என விஜய்யிடம் கூறுபடியான வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இது தமிழகத்தில் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

‘விஜய் vs திமுக’ என்பதே எதிர்கால தமிழக அரசியல்! – விஜய் அரசியல் என்ட்ரி குறித்து ஈசிஆர் சரவணன்

தவிர, நேற்று #திமுகதலைவர்விஜய் என ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனதும், 2021 தேர்தலில் திமுக-வுக்கு பிரஷாந்த் கிஷோரின் டீம் பணியாற்றுவதும் கூடுதல் செய்தி.

அனைத்தையும் பொறுமையுடன் கூர்ந்து கவனிக்கும் விஜய், தமிழகத்தில் தனது ’சர்காரை’ அமைத்து, ரசிகர்களை ‘பிகில்’ அடிக்க வைப்பாரா? என்பதற்கான கேள்விக்கு காலம் பதில் சொல்லும்!

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment