/tamil-ie/media/media_files/uploads/2020/05/vijay-3b.jpg)
thalapathy vijay Tamil Cinema, thalapathy vijay Tamil News, thalapathy vijay News In Tamil, thalapathy vijay Latest Tamil News, தளபதி விஜய், நடிகர் விஜய், மாஸ்டர்
விசித்திரமான ஒரு உண்மை என்ன தெரியுமா? உழைத்துக் களைத்துப் போன தொழிலாளிகளுக்கு இதமளிக்க உருவான சினிமாதான், இன்று ஆகப் பெரிய தொழில்! தமிழ் சினிமாவின் ஓராண்டு பணப் புழக்கம் உத்தேசமாக 3000 கோடி ரூபாய்! இவ்வளவு, ‘டர்ன் ஓவர்’ உடைய வேறு தொழில் இங்கு இருந்தால் சொல்லுங்கள்!
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்- நடிகைகள் என இந்தத் தொழிலில் வெளிப்படையாக இயங்குகிறவர்கள் எண்ணிக்கை சொற்பம்! ஏராளமான தொழில்நுட்பக் கலைஞர்கள், துணை நடிகர்கள், சினிமா தொடர்பான அலுவலகங்களின் ஊழியர்கள், தியேட்டர் ஊழியர்கள் என இந்தத் தொழிலை நம்பி அடித்தட்டில் இயங்குகிற தொழிலாளிகள் ஆயிரம் ஆயிரம்!
கொரோனா இத்தனை பேர் வாழ்க்கையையும் இப்போது மொத்தமாக மிரட்டிக் கொண்டிருப்பது பெரும் சோகம்! இன்னும் இரு மாதங்கள், 6 மாதங்கள்... போகட்டும், ஓராண்டு கழித்தாவது தமிழ் சினிமா எழுந்து நிற்க முடியுமா? என்கிற கேள்வி சுனாமியாக அவர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. இதை வெளிப்படையாக உணர்த்தியதுதான், அண்மையில் கிளம்பிய ‘பொன்மகள் வந்தாள்’ பிரச்னை!
/tamil-ie/media/media_files/uploads/2019/07/jyothika-raatchasi-tamil-rockers-300x217.jpg)
இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிந்துவிட்டன. சினிமாத் தயாரிப்பு எப்படி நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். வட்டிக்குப் பணம் வாங்காத தயாரிப்பாளர், கோடம்பாக்கத்தில் யாரும் இல்லை. எனவே ஒரு படத்தை தயாரித்து விற்காமல் வைத்துக் கொண்டிருப்பது, பிரசவ வேதனையைவிட கொடுமையானது. அந்த வகையில் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை, ‘ஓவர் தி டாப் மீடியா சர்வீஸ்’ (ஓ.டி.டி) எனப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் முறை திரையிடலுக்கு விற்க முடிவெடுத்த தயாரிப்பாளர் தரப்பு நியாயத்தை புரிந்தே ஆகவேண்டும்.
அதேசமயம், தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு ஏன் பதறினார்கள்? என்பதையும் கவனிக்க வேண்டும். ‘பொன்மகள் வந்தாள்’ போல ஒவ்வொரு படத்தையும் ஓடிடி-க்கு விற்கத் தொடங்கினால், தமிழகத்தில் அத்தனை தியேட்டர்களையும் மூடிவிடலாம். வினியோகஸ்தர்களுக்கு வேலையில்லை. பிரமாண்டங்களுக்கு அவசியமில்லை. தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு குறையும். சினிமாவுக்கும் சின்னத்திரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல், தமிழ் சினிமா உலகம் சுருங்கும். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வேலையிழப்பார்கள் என்பது உறுதி!
/tamil-ie/media/media_files/uploads/2020/05/vijay-1b-300x218.jpg)
ஆக, தமிழ் சினிமா எந்தத் திசை நோக்கி நகரப் போகிறது? என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தருணம் இது! அடுத்த நகர்வு எப்படி இருக்கும்? என யாருமே தீர்மானிக்காத நிலையில், நடிகர் விஜய், ஓசையில்லாமல் ஒரு திருப்பத்தைக் கொடுத்திருக்கிறார். விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர், விஜய்யின் நெருங்கிய உறவினரான ஜான் பிரிட்டோ. விஜய்யின் சம்பளத்தைத் தவிர்த்து, இந்தப் படத்திற்கு ரூ50 கோடி செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸாகவேண்டிய இந்தப் படத்தை இன்னமும் வெளியிட முடியாமல் அடை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் பொருள் இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல. இந்தச் சூழலில்தான் பிரபலமான ஓ.டி.டி. நிறுவனம், படத்தின் தயாரிப்புச் செலவைவிட 3 மடங்கு பணம் கொடுத்து மாஸ்டரை வாங்கிக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/05/vijay-2b-4-300x214.jpg)
ஓடிடி-யில் அவ்வளவு தொகையை மாஸ்டர் வசூலிக்குமா? என்கிற கேள்வி எழலாம். அது முக்கியமில்லை. விஜய் மாதிரி டாப் ஹீரோவின் படம் ஓ.டி.டி-க்கு போய்விட்டால், தியேட்டர்காரர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் மொத்த நம்பிக்கையும் நொறுங்கும். ரசிகர்களின் கவனமும் பெரிய அளவில் ஓ.டி.டி. பக்கம் திரும்பும். சினிமா மார்க்கெட்டை காலி செய்ய, ஓ.டி.டி உலகத்திற்கு இது ஒரு எளிய வழி!
மாஸ்டர் படத் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோவும், நடிகர் விஜய்யும் நினைத்திருந்தால், ஓடிடி பக்கம் மாஸ்டரை தள்ளிவிட்டு இப்போதைய பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீண்டிருக்கலாம். ஆனால் விஜய், இதற்கு ‘நோ’ சொல்லிவிட்டார் என்பதுதான் தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பிலிருந்து நமக்கு கிடைத்த தகவல்!
இது தொடர்பாக பெயரை மறைத்துவிட்டுப் பேசிய தயாரிப்பாளர் ஒருவர், ‘விஜய், அஜீத், ரஜினி ஆகிய மூவரின் தலா ஒரு படத்தை அடுத்தடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்கிவிட்டால், மொத்த சினிமாத் துறையுமே காலியாகிவிடும். பெரிய படங்களுக்கு ஓரளவு விலை கொடுக்கும் ஓடிடி நிறுவனங்கள், நடுத்தர மற்றும் சிறு நடிகர்களின் படங்களை கண்டுகொள்ள மாட்டார்கள். நாளடைவில் எல்லாப் படங்களுக்கும் அவர்கள் வைத்ததுதான் விலை என்றாகிவிடும். விஜய்யின் முடிவு தமிழ் சினிமா உலகத்தையே காப்பாற்றியிருக்கிறது என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்’ என்றார் அந்தத் தயாரிப்பாளர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/05/vijay-5b-1-300x285.jpg)
அதேசமயம் இதில் இன்னொரு கோணத்தையும் சிலர் அலசுகிறார்கள். ‘ஓடிடி வசம் சினிமாத் துறை சென்றால் தொழிலாளர்களுக்கு எவ்வளவு பாதிப்போ, அதைவிட அதிக பாதிப்பு பெரிய நடிகர்களுக்கு! காரணம், 50 கோடி, 80 கோடி என சம்பளம் வாங்க முடியாது. நடிகர்களுக்கு கட்-அவுட் வைப்பது முதல், தியேட்டரில் கற்பூரம் சுற்றுவது வரையிலான வழிபாட்டுத் தன்மை அழியும். தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருக்கும் ஹீரோயிஸம் முழுமையாக வீழும்.
பெரிய நடிகர்களில் இப்போது கிராமங்கள் வரை ரசிகர்களையும், அரசியல் இலக்குகளையும் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ரஜினியும் விஜய்யும் மட்டுமே. ஓடிடி இந்தத் துறையை கைப்பற்றினால், இவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் கூட சிக்கல் உருவாகும். அந்த வகையிலும் விஜய் எடுத்த முடிவு புத்திசாலித்தனமானதுதான்’ என்கிறார்கள், நம்மிடம் பேசிய சினிமாப் பிரமுகர்கள்.
என்னதான் விஜய் இப்போது ஒரு திருப்பத்தைக் கொடுத்திருந்தாலும், சினிமாத் துறைக்கு இன்னும் சவால்கள் இல்லாமல் இல்லை. ஒரு மாதமோ, இரு மாதங்களோ கடந்தாலும், தியேட்டர்களில் சமூக விலகலை கடைபிடித்தாக வேண்டும். இப்போது 1000 பேர் அமரும் தியேட்டர்களை 500 பேர் உட்காருகிற மாதிரி மாற்றியமைக்க அறிவுறுத்தப்படலாம்.
அது தியேட்டர் உரிமையாளர்களுக்கு கட்டுபடியாகுமா? பழைய மாதிரி அதிக விலை கொடுத்து படங்களை வாங்க முடியுமா? சமூக விலகலை அமல்படுத்தினாலும்கூட, ஃபேமிலி ஆடியன்ஸ் பழைய மாதிரி தியேட்டருக்கு வருவார்களா? 3 பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர்த்து, மற்றப் படங்களுக்கு ரசிகர்களாவது வருவார்களா? என்கிற கேள்விகள் எல்லாம் இருக்கின்றன.
விஜய் கொடுத்த ஊக்கத்தைப் போல, இன்னும் சில ஊக்க மருந்துகள் சினிமாத் துறைக்கு தேவைப்படலாம்! பிரபல நடிகர்களின் சம்பளக் குறைப்பு உள்பட!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.