/indian-express-tamil/media/media_files/2025/10/26/avm-bakyaraj-2025-10-26-16-13-53.jpg)
பேப்பர், பேனா இல்லாம 2 மணி நேரம் கதை சொன்ன பாக்யராஜ்; ஆடிப்போன ஏ.வி.எம்: படமும் பெரிய ஹிட்டு!
தமிழ் சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும், இயல்பான நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ். இவரது திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பதற்கு இவரது தனித்துவமான திரைக்கதை உத்தியே காரணம்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய பாக்கியராஜ், அப்போதைய நிறுவன உரிமையாளர் ஏ.வி.எம். சரவணன், தன்னை ஒருமுறை பார்த்து வியந்துபோன சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
பாக்கியராஜின் கதை சொல்லும் பாணி எப்போதும் தனித்துவமானது. அவர் பெரும்பாலும் கதை சொல்லும்போது, எந்தவிதமான சுருக்கெழுத்து குறிப்புகளையோ அல்லது பேப்பரையோ பயன்படுத்த மாட்டாராம். தனது முழுத் திரைக்கதையையும் அவர் நினைவாற்றலில் மட்டுமே வைத்திருப்பாராம். ஒருமுறை ஏ.வி.எம். அலுவலகத்தில் சரவணன் அவர்களிடம் ஒரு படத்தின் கதையைச் சொல்ல பாக்கியராஜ் சென்றபோது தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
"நான் கதை சொல்லும் விதம் தான் சரவணன் சார் என்னைப் பாராட்டிய மிக முக்கியமான விஷயம்," என்று பாக்கியராஜ் கூறுகிறார். அன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான இயக்குநர்கள் குறிப்புகளைப் பார்த்துப் படிப்பதோ அல்லது சுருக்கமான கையேடுகளை வைத்திருப்பதோ வழக்கம். ஆனால், பாக்கியராஜ் எந்தக் குறிப்பும் இன்றி, சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல், படத்தின் ஒவ்வொரு காட்சியின் விறுவிறுப்பும் குறையாமல், முழுத் திரைப்படத்தின் கதையையும் அனல் பறக்கச் சொல்லி முடித்திருக்கிறார். இந்த அசாதாரணத் திறமையைக் கண்ட சரவணன் அவர்கள் மெய்சிலிர்த்துப் போனாராம்.
"நீங்க ஒரு நோட்டுப் புத்தகம் கூட இல்லாம, ஒரு பேப்பர் கூட இல்லாம... சுமார் 2 மணி நேரம் கதையைச் சொல்லி முடிச்சிட்டீங்களே," என்று வியந்து, பாக்கியராஜைப் பாராட்டினாராம். பாக்கியராஜின் இந்தக் குறிப்பில்லாத கதை சொல்லும் பாணியில் உருவான படம்தான், ஏ.வி.எம். தயாரிப்பில் வெளியாகி, காலத்தால் அழியாத வெற்றிப் படமாக மாறிய 'முந்தானை முடிச்சு' (1983).
பாக்கியராஜ் கதை சொல்லும்போது காட்டும் ஈடுபாடு, முழுமையான காட்சியமைப்பைத் தன் மனதில் இருத்திக்கொள்ளும் ஆற்றல் ஆகியவை தான் அவரது வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் என்று ஏ.வி.எம். சரவணன் அப்போதே உணர்ந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us