ஐநாவை அம்பலப்படுத்திய தி விசில்ப்ளோவர் சினிமா

தி விசில்ப்ளோவர் படம் கற்பனையல்ல. பாஸ்னியாவில் வேலை பார்த்த அமெரிக்க போலீஸ் அதிகாரி கேத்ரின் போல்கோவேக் அனுபவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

பாபு

சிரியாவில் நடந்துவரும் போரில் அமைதி நடவடிக்கைக்காகச் சென்ற ஐநா படைகள் அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ள தகவல் உலகை அதிரச் செய்தது. போரை தடுப்பதற்காகவும், அமைதியை உருவாக்குவதற்காகவும் அமைக்கப்பட்ட ஐநா போரின் ஓர் அங்கமாகிப் போனதுடன், உக்கிரமான போர்ச்சூழலில், அமைதி ஏற்பட்டதான போலி தோற்றத்தை உருவாக்கி போருக்கு மறைமுக ஆதரவாக இருப்பதையும் அம்பலப்படுத்திய திரைப்படம், நோ மேன்ஸ் லேண்ட். 2001 இல் வெளியான இந்தப் படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கரை வென்றது.

நோ மேன்ஸ் லேண்ட் போன்று ஐநாவின் இன்னொரு கறுப்புப்பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த திரைப்படம், தி விசில்ப்ளோவர். நோ மேன்ஸ் லேண்ட் படத்தைப் போலவே இந்தப் படமும் பாஸ்னியா போரை மையப்படுத்தியது.

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறிய நாடு பாஸ்னியா. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடந்த போசூல் பாஸ்னியா முற்றிலுமாக குலைந்து போயிருந்த நிலையில், அதனை சீரமைக்க ஐநா முயற்சி மேற்கொள்கிறது. ஐநாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவின் பெண் போலீஸ் அதிகாரி கேத்ரின் பாஸ்னியாவுக்கு வருகிறார். வந்த சில தினங்களிலேயே பாஸ்னியாவின் மோசமான நிலைமை அவருக்கு தெரிய வருகிறது. அங்குள்ள பாரில் வேலை பார்த்த இரண்டு பெண்கள் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். அவர்களை மையமாக வைத்து கேத்ரின் நடத்துகிற விசாரணை பல்வேறு அதிர்ச்சியான உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறது.

பாஸ்னியாவில் உள்ள பார்களில் கடத்திவரப்பட்ட பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். உண்மையில் அவர்கள் பாலியல் தொழிலாளியாக அல்ல, பாலியல் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். இதற்கு அந்த ஊர் காவல்துறையும், அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். கேத்ரினின் தொடர்ந்த விசாரணையில் ஐநா படையில் அங்கம் வகிக்கும், பாஸ்னியாவை சீரமைக்க வந்த வீரர்களும், அதிகாரிகள் சிலரும் பெண்கள் கடத்தல் முதல் பாலியல் வன்முறைவரை அனைத்திலும் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. அவற்றை அம்பலப்படுத்த முயலும் கேத்ரின் ஐநா உயர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுகிறார். அவரது பதவி பறிக்கப்படுகிறது. 

தி விசில்ப்ளோவர் திரைப்படம் கற்பனையல்ல. பாஸ்னியாவில் வேலை பார்த்த அமெரிக்க போலீஸ் அதிகாரி கேத்ரின் போல்கோவேக் தனது அனுபவத்தை புத்தகமாக எழுத, அந்த புத்தகத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டது. இது ஃபீல்குட் திரைப்படமல்ல. மனதை உலுக்கும் திரைப்படம். படத்தில் வரும் இளம்பெண்களுக்கு நிகழும் பாலியல் சித்திரவதைகள், தப்பிக்க முயற்சிப்பவர்களுக்கு தரப்படும் தண்டனைகள் அனைத்தும் கற்பனைக்கு எட்டாதவை, மனதை கனக்கச் செய்பவை. 

இந்தப் படத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கேத்ரினைஅமெரிக்க நாட்டின் சார்பாக பாஸ்னியாவுக்கு அனுப்பி வைத்தது டைன்கார்ப் என்கிற தனியார் செக்யூரிட்டி நிறுவனம். படத்தில் டெமாக்ரா என்ற பெயரில் காட்டப்படும் இந்த செக்யூரிட்டி நிறுவனம்தான் கேத்ரினை தேர்வு செய்ததும், பாஸ்னியாவுக்கு அனுப்பியதும். இதற்காக ஐநா அந்நிறுவனத்துக்கு பெரும் தொகை தந்திருக்கிறது. அமெரிக்காவில் இதேபோல் ஏராளமான தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் உள்ளன. இவர்கள்தான் அமெரிக்காவுக்காக அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்யும் ஆப்கான், ஈராக் போன்ற நாடுகளில் பாதுகாப்பு பணிகளையும், புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்கிறவர்கள். தனது ஆக்கிரமிப்பு நாடுகளில் அங்குள்ள ராணுவத்துக்கு பயற்சி அளிக்க அமெரிக்க அரசு இந்த நிறுவனங்களையே பயன்படுத்துகிறது. இந்த நிறுவனங்கள் தன்னுடைய ஆள்கள் செய்யும் எந்த தவறையும் தட்டிக் கேட்பதில்லை. அமெரிக்க அரசு மட்டுமின்றி பிரிட்டன் உள்பட எந்த நாடும் இதனை கண்டுகொள்வதில்லை. ஐநாவும் அவர்களின் தவறுகளை மூடி மறைத்து ஐநாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் காப்பாற்றுவதில் கவனமாக உள்ளது.

பாஸ்னியாவில் டைன்கார்ப் நிறுவனம் அம்பலப்பட்ட பிறகும் அமெரிக்கா ஆப்கான், ஈராக் என தனது ஆக்கிரமிப்பு நாடுகளில் பல்வேறு பணிகளுக்கு இந்த செக்யூரிட்டி நிறுவனத்தின் ஆள்களை நியமித்தது. இவர்கள் செய்யும் தவறுகளை அமெரிக்காவோ, ஐநாவோ கண்டிப்பதில்லை, மாறாக மூடி மறைக்கிறார்கள். 

போலீஸ் அதிகாரி கேத்ரின் தனது அனுபவங்களை பிபிசியில் பகிர்நது கொண்டார். அதன் பிறகும் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளிகூட தண்டிக்கப்படவில்லை. பாஸ்னியா, ஈராக், ஆப்கான் என பல நாடுகளில் நடந்த பாலியல் வன்முறைகளின் தொடர்ச்சியே சிரியாவில் நடந்திருப்பதும். 

தி விசில்ப்ளோவர் திரைப்படத்தை Larysa Kondracki இயக்கியிருந்தார். இவர் கனடாவைச் சேர்ந்தவர். தி விசில்ப்ளோவர் திரைப்படம் ஐநா அமைதிப்படைகளின் பாலியல் வன்முறையையும், அவை வெளியே தெரியாமல் ஐநா உயரதிகாரிகளால் மூடி மறைக்கப்படுவதையும் உரக்கச் சொல்கிறது. இதற்கெல்லாம் அடிப்படையாக அமெரிக்காவும், அதன் செக்யூரிட்டி நிறுவனங்கள் இருப்பதையும் தி விசில்ப்ளோவர் அம்பலப்படுத்துகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close