இரட்டை வரிவிதிப்பு முறையை கண்டித்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், அமைச்சர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் படி, அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. அதன்படி, அதிகபட்ச வரியான 28 சதவீதம் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ரூ.100-க்கு கீழ் டிக்கெட் வசூல் செய்தால் 18 சதவீதமும், ரூ.101 முதல் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் வரி செலுத்த வேண்டும் என்பது ஜிஎஸ்டி முறை.
இதனிடையே, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரி வசூலிக்க தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால், திரையரங்கள் 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன், 30 சதவீத கேளிக்கை வரியையும் செலுத்த வேண்டியுள்ளது. இந்த இரட்டை வரிவிதிப்பு முறைக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, திரையரங்குகள் மூடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்தார்.
அதனையடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோரை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். அதில் சுமூக முடிவு ஏற்படாததால் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் திரையரங்குகள் நேற்று மூடப்பட்டன. அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு திரையரங்கங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களுடன் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அபிராமி ராமநாதன், நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ராமநாதன், பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால், திரையரங்குகளை மூடும் போராட்டம் தொடரும் என்றார். அதேபோல், விஷால் கூறும்போது,"அமைச்சர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். அதில் நல்ல முடிவு கிடைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
அதன்படி, கேளிக்கை வரியை ரத்து செய்வது குறித்து அமைச்சர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.