இரட்டை வரிவிதிப்பு முறையை கண்டித்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் படி, அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. அதன்படி, அதிகபட்ச வரியான 28 சதவீதம் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ரூ.100-க்கு கீழ் டிக்கெட் வசூல் செய்தால் 18 சதவீதமும், ரூ.101 முதல் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் வரி செலுத்த வேண்டும் என்பது ஜிஎஸ்டி முறை.
இதனிடையே, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரி வசூலிக்க தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால், திரையரங்கள் 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன், 30 சதவீத கேளிக்கை வரியையும் செலுத்த வேண்டியுள்ளது. இந்த இரட்டை வரிவிதிப்பு முறைக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரியை நாங்கள் எதிர்க்கவில்லை. ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், எங்களுக்கு மட்டும் இரட்டை வரி விதிப்பு உள்ளது. ஜிஎஸ்டி வரியுடன் கேளிக்கை வரியும் சேர்ந்து கொண்டால், 58 சதவீத வரி செலுத்தி தொழில் நடத்துவது கஷ்டம். எனவே, கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று முதல் திரையரங்குகள் மூடப்படுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/theatre1.jpg)
சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அத்துடன், ஆர்வமுடன் சினிமா பார்க்க வந்த ரசிகர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு இல்லை என அச் சங்கத்தின் தலைவர் விஷால் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.