“‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் காணப்படுவது அனைத்தும் உண்மை” – டிஜிபி ஜாங்கிட்

உயர்நீதி மன்ற தீர்ப்பு உள்பட எல்லாவற்றையும் சரியாகச் சேர்த்து படமாக எடுத்துள்ளனர். இந்தப் படத்தில் காணப்படுவது அனைத்தும் உண்மை.

dgp jangid, suriya, karthi

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் காணப்படும் அனைத்து விஷயங்களும் உண்மை என டிஜிபி ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.

கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் இன்று ரிலீஸாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ‘சதுரங்க வேட்டை’ வினோத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படம், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோ, நேற்று இரவு சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. போக்குவரத்து ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபியான ஜாங்கிட் கலந்துகொண்டு படத்தைப் பார்த்தார். படம் முடிந்தபிறகு அவர் கூறியதாவது, “இந்தப் படம் மிக அருமையாக வந்துள்ளது. உண்மையில், அந்த பவ்ரியா குழுவைப் பிடிக்கும் மிஷனுக்கு நாங்கள்தான் தலைமை வகித்தோம். போலீஸ் பார்வையில் அந்த சம்பவங்கள் எப்படி நடந்ததோ, அது அப்படியே படமாக எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தியையும், இயக்குநர் வினோத்தையும் ரொம்பவே பாராட்ட வேண்டும். 10 ஆண்டுகள் அவர்கள் எப்படி தமிழ்நாட்டில் சம்பவங்கள் செய்தார்கள், ஆரம்பம் முதல் எப்படி பவ்ரியா மிஷனைச் செயல்படுத்தினோம், அவர்களை எப்படிப் பிடித்தோம், 2 பேரை என்கவுண்டர் செய்து 13 பேரை உயிரோடு பிடித்தோம், உயர்நீதி மன்ற தீர்ப்பு உள்பட எல்லாவற்றையும் சரியாகச் சேர்த்து படமாக எடுத்துள்ளனர். இந்தப் படத்தில் காணப்படுவது அனைத்தும் உண்மை.

மிகவும் கஷ்டப்பட்டு பவ்ரியாவுக்குச் சென்று நடித்திருக்கிறீர்கள். எவ்வளவு கமாண்டோ பயிற்சிகள் அளித்திருப்பார்கள் என்று நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. குதிரை சவாரி, கமாண்டோ பயிற்சிகளைப் பார்த்தால், சமீபத்தில் வெளியான ‘சோலோ’ படம் போல் அருமையாக இருக்கிறது. படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். எல்லா காவல்துறையினருக்கும் இந்தப் படம் பிடிக்கும்” என்றார்.

Web Title: Theeran adhigaaram movie all details is true says dgp jangid

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com