டி.எஸ்.பி.யான கார்த்திக், ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள ரவுடிகளைப் பந்தாடுகிறார். இதனால், அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைக்கிறது. தன் காதல் மனைவி ரகுல் ப்ரீத்சிங்குடன் அவரும் ஊர் ஊராக சுற்றுகிறார். அவர் எல்லைக்குட்பட்ட பகுதியில், தனியாக இருந்த வீட்டில் உள்ளவர்களைக் கொன்றுவிட்டு நகைகளைக் கொள்ளையர்கள் களவாடிச் செல்கின்றனர். அதைப்பற்றி விசாரிக்கும்போதே அதேபோல் இன்னொரு சம்பவம் நடக்கிறது.
இப்படி அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் நிம்மதியை இழக்க, அந்தக் கொள்ளையர்களைத் தேடுகிறார். அவர்கள் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. இதற்காக தன் போலீஸ் டீமுடன் வடஇந்தியா செல்லும் கார்த்தி கொள்ளையர்களைக் கண்டுபிடித்தாரா, அங்கு அவருக்கு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.
நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்துள்ள வினோத், அதற்காக டாக்டர் பட்டமே வாங்கும் அளவுக்கு நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். ஒவ்வொரு தகவலையும் துல்லியமாக, அதேசமயம் பார்ப்பவர்களுக்கும் போராடிக்காமல் தந்ததற்காக இயக்குநருக்கு மிகப்பெரிய பாராட்டுகள். விசாரணை தொடங்குவதில் தொற்றிக்கொள்ளும் பரபரப்பு, இறுதிவரை அப்படியே இருப்பது படத்தின் ப்ளஸ்.
‘சிறுத்தை’ படத்தில் பார்த்ததைவிட 10 மடங்கு விறைப்பும், முறைப்புமாக போலீஸ் அதிகாரி கேரக்டரில் கார்த்தி. இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார் என்பது, படம் பார்த்தாலே தெரிந்துவிடும். வாட்டும் வெயிலில் வடஇந்தியாவில் நிறைய காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். கிளைமாக்ஸில் வரும் ஃபைட் ஸீனில் அசரடிக்கிறார் கார்த்தி. அதேபோல, ரொமான்ஸிலும் 100க்கு 200 மார்க் வாங்கியிருக்கிறார்.
அப்பாடா… ரகுல் ப்ரீத் சிங்கிற்கு உருப்படியான ஒரு தமிழ்ப் படம் கிடைத்துவிட்டது. இனிமேலாவது அவருக்குத் தமிழில் நல்ல காலம் பிறக்கும் என நம்புவோம். ‘மாமா… மாமா…’ என கார்த்தியுடன் அவர் செய்யும் ரொமான்ஸை மட்டும் நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம். காதல் மீது வெறுப்பாக இருப்பவர்களுக்கு, நிச்சயம் இந்தப் படத்தைப் பார்த்தால் காதலிக்கும் ஆசை வந்துவிடும். அந்த அளவுக்கு இருவரும் ரொமான்ஸில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.
நிஜத்தில் கணவன் – மனைவியான போஸ் வெங்கட் – சோனியா இருவரும், படத்திலும் கணவன் – மனைவியாகவே நடித்துள்ளனர். ‘என்னை இந்த ஆபரேஷன்ல இருந்து அனுப்பிடுங்க சார்…’ என போஸ் வெங்கட் சொல்லும் இடத்தில் கண் கலங்குகிறது. ஒவ்வொரு ஊராகச் சுற்றும்போது, அங்குள்ள நடிகர்களையே பயன்படுத்தியிருப்பது படத்துக்குப் பலம் சேர்த்துள்ளது.
ஜிப்ரானின் இசை விறுவிறுப்புக்குப் பலம் சேர்க்கிறது. ஒருசில இடங்களில் மட்டும் டயலாக்கை இசை ஓவர்டேக் செய்வதைத் தவிர்த்திருக்கலாம். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், வடஇந்தியாவின் புழுதிக்காட்டையும் அப்படியே பதிவு செய்திருக்கிறது.
ஒரு வழக்குக்காக போலீஸ் அதிகாரிகள் படும் கஷ்டமும், அதற்கு அரசு தரும் மரியாதையையும் இந்தப் படம் தெளிவாகக் காட்டுகிறது. தீரனுக்கு எல்லோரும் அடிக்கலாம் சல்யூட்!