தமிழக வெற்றிக் கழக கொள்கை பாடல் எழுதுவதற்கு விஜய் எதற்காக தன்னை தேர்ந்தெடுத்தார் என்பதற்கான காரணத்தை தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி. சாலை பகுதியில் நடந்த இந்த மாநாட்டில் கட்சி தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தவெகவின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக, மதசார்பற்ற சமூக நீதியின் அடிப்படையில் கட்சி பயணிக்கும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், கட்சியின் கொள்கை பாடல் ஒன்று மாநாட்டின் போது வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கட்சியின் கொள்கை பாடலை உருவாக்க தனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக தவெக தலைவர் விஜய்க்கு, தெருக்குரல் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனத் தொடங்கும் இந்தப் பாடலில், கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கை தலைவர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
குறிப்பாக, "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவருடைய வழியில், நம்முடைய தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பார்போற்றும் பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாய் ஏற்று சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க 'மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள்' அதாவது 'Secular Social Justice Ideologies' ஓட நம்ம தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கணும்னு நான் வரேன்" என விஜய் கூறும் வரிகள் அப்பாடலில் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் கொள்கைப் பாடலை இயற்றிய அறிவு, அதற்கான வாய்ப்பை தனக்கு வழங்கியதற்காக விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இப்பாடலை எழுத தன்னை எதற்காக தேர்ந்தெடுத்தீர்கள் என விஜய்யிடம் அறிவு கேட்ட போது, உன்னால் மட்டுமே இதை செய்ய முடியுமென விஜய் பதிலளித்ததாக தனது பதிவில் அறிவு குறிப்பிட்டுள்ளார். அறிவின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“